திருமலைராயனைப் புகழ்ந்தது
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
வீமனென வலிமிகுந்த திருமலைரா யன்கீர்த்தி
..வெள்ளம் பொங்கத்
தாமரையி னயனோடிச் சத்தியலோ கம்புகுந்தான்;
..சங்க பாணி
பூமிதொட்டு வானமட்டும் வளர்ந்துநின்றான் சிவன்கைலைப்
..பொருப்பி லேறிச்
சோமனையும் தலைக்கணிந்து வடவரைத்தண் டாலாழஞ்
..சோதித் தானே. 7 கவி காளமேகம்
பொருளுரை:
வீமசேனன் என்னும்படி ஆற்றலால் சிறப்புற்றிருக்கும் திருமலைராயன் என்பவனின், புகழாகிய வெள்ளமானது பொங்கி எழுந்ததாக,
தாமரை வாசனாகிய பிரமன் அஞ்சி ஒடிச் சத்திய லோகத்திலே நுழைந்து கொண்டான்;
சங்கை ஏந்தியவனான திருமால் நிலமுதல் வானம் வரை மேனி வளரப்பெற்று விசுவரூபியாகி நின்றான்;
சிவபிரான் கயிலை மலைமேல் ஏறிக் கொண்டு சோமனையும் (சந்திரன், ஆடை) தலையில் அணிந்தவனாக, இமயமலையாகிய தண்டினாலே (இமயமலையிடத்து மூங்கிலும் ஆம்) அக்கீர்த்த வெள்ளத்தின் ஆழ்த்தை சோதிக்கத் தொடங்கினான்.
திருமலைராயனின் புகழ்வெள்ளம் முத்தேவரையும் அஞ்சச் செய்யும் அளவிற்குச் சிறந்ததாயிருந்தது என்பது கருத்து.