கம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் - 07 அயோத்தி நகர் மதிலின் உயர்ச்சி

பால காண்டம், நகரப் படலத்தில் அயோத்தியின் பெருமையைக் கவியரசர் கம்பர் கூறும் பொழுது மதிலின் உயர்ச்சியையும் கூறுகிறார். “உயர்வற உயர்வை” உடைய பரம்பொருளை எட்டிப் பிடிக்கும் உணர்வே மெய்யுணர்வாம். இத்தகைய மெய்யுணர்வுக்கும் மேலாம் அயோத்தி நகர் மதிலின் உயர்ச்சி. கீழேயுள்ள பாடலில் பார்ப்போம்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

நால்வகைச் சதுரம் விதிமுறை நாட்டி,
..நனிதவ உயர்ந்தன பனிதோய்
மால்வரைக் குலத்து யாவையும் இல்லை;
..ஆதலால் உவமைமற்(று) இல்லை,
நூல்வரைத் தொடர்ந்து பயத்தொடும் பழகி,
..நுணங்கிய நுவலரும் உணர்வே
போல்வகைத்(து); அல்லால், உயர்வினொ(டு) உயர்ந்த(து)
..என்னலாம் பொன்மதில் நிலையே. 8

- நகரப் படலம், பால காண்டம், ராமாயணம்

பொருளுரை:

”மிக நன்மை உண்டாகுமாறு இடத்தைப் பிரித்து நான்கு வகைச் சதுரமாகச் சிற்ப நூல் விதிப்படி கட்டப்பட்டு மிக மிக உயர்ந்துள்ள அயோத்தி நகர மதில்கள் போன்று பனி படர்ந்து வானுயர்ந்த பெரிய மலைக் கூட்டத்தின் எந்த மலையும் இங்கில்லை. ஆதலால் மதிலுக்கும், மதிலின் உயரத்திற்கும் உவமை கூற வேறு எதுவும் இல்லை.

பொன் கலந்து கட்டிய அந்நகரத்து அழகிய மதில்களின் நிலைமை பற்றிச் சொல்வோமானால் ஞான நூல்களின் எல்லை வரை சென்று கற்றறிதலோடு நில்லாமல் பயபக்தியோடு உணர்ந்து அவற்றின் நுட்பமாகிய சொல்வதற்கு அரிய மெய்யுணர்வு போன்ற தன்மை உடையதல் லாமல் அந்த மெய்யுணர்வை விட உயர்ந்தது என்றும் கூறலாம்”.

கவி நயம்:

மதிலுக்கு இணையாக உவமை சொல்லலாம் என்றால், வலிமையும், பெருமையும், உயர்வும் உள்ள மலைகளும் இல்லை. எம்மலையும் சதுரமாகவும் இல்லை. எனவே, உவமை பொருந்தாது. தவிரவும், மதில்கள் மலைகளை விட மிக உயர்ந்துள்ளன.

“உயர்வற உயர்வை” உடைய பரம்பொருளை எட்டிப் பிடிக்கும் உணர்வே மெய்யுணர்வாம். மதில் உயர்வுக்கு மெய்யுணர்வை உவமை கூறியது உயர்வு நவிற்சி அணி. சிலேடை அணியும் கலந்த கலவையணி என்பதும் பொருந்தும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-20, 12:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே