கம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் - 08 அயோத்தி மதிலின் பெருமைக்கு ஒப்புமை

பால காண்டம், நகரப் படலம், அயோத்தியின் பெருமையைக் கூறும் பொழுது மதிலுக்குப் பெருமையால் ஒப்பன இவை என வேதம், தேவன், முனிவர், துர்க்கை, காளி, ஈசன் ஆகியோர்க்கு ஒப்புமையாகக் கவியரசர் இப்பாடலில் குறிப்பிடு கின்றார்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

மேவவரும் உணர்வு முடிவிலா மையினால்,
..வேதமும் ஒக்கும்;விண் புகலால்,
தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும்,
..திண்பொறி அடக்கிய செயலால்;
காவலின், கலைஊர் கன்னியை ஒக்கும்;
..சூலத்தால், காளியை ஒக்கும்;
யாவையும் ஒக்கும், பெருமையால், எய்தற்(கு)
..அருமையால், ஈசனை ஒக்கும். 9

- நகரப் படலம், பால காண்டம், ராமாயணம்

பொருளுரை:

”அயோத்தி நகர் மதில் உயர்ச்சியின் பெருமை, அடைவதற்கு அரிதாகிய அறிந்துணரும் அறிவால் எல்லை காண முடியாதபடி இருப்பதால் அது வேதத்துக்கு ஒப்பாகும். விண்ணுலகம் வரை உயர்ந்திருப்பதால் தேவர்களையும் ஒத்திருக்கும். பகைவர்களால் கண்டறிய முடியாதபடி வலிய பொறிகளாகிய சூட்சுமங்களை உள்ளடக்கியதால் முனிவர்களை ஒத்திருக்கும்.

காவல் காப்பதில் மானை ஊர்தியாகக் கொண்ட துர்க்கையை ஒத்திருக்கும். சூலம் ஏந்தி இருப்பதால் காளிதேவியைப் போன்றிருக்கும். எல்லாவற் றையுமே ஒத்திருக்கும் அனைத்துப் பெருமை களாலும், எவரும் எளிதில் அடைவதற்கு அரிய தன்மையாலும் இம்மதில் இறைவன் சிவபெரு மானை ஒத்திருக்கும்”.

கவிநயம்:

வேதம் அங்கங்களாலும், உபஅங்கங்களாலும் பரந்து முடிவு காண முடியாத தன்மை உடையது. மதிலும் பரந்து எல்லை காண இயலாதது என்பதால் ‘வேதமும் ஒக்கும்’ என்றார்.

விண்ணுலகளவும் சென்றிருப்பதால் “தேவனை ஒக்கும்” என்றார். பொறிகளை அடக்கி வாழ்பவர் முனிவர். பலவகை இயந்திரப் பொறிகளை உள்ளடக்கிக் கொண்டிருப்பது மதில். எனவே “முனிவரை ஒக்கும்” என்றார். (பொறிகள் – ஐம்பொறிகள், இயந்திரப் பொறிகள் -சிலேடை)

துர்க்கை மானை ஊர்தியாகக் கொண்டு காவல் தெய்வமாய் நின்று நகரத்தைக் காவல் புரிவது போல் மதிலும் காவல் புரிவதால் “கலையூர் கன்னியை ஒக்கும்” என்றார். ( கலை - மான்).

சூலம் முதலிய ஆயுதங்களை ஏந்தியிருப்பவள் காளிதேவி; மதிலிலும் பலவகைச் சூலங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, “காளியை ஒக்கும்” என்றார்.

பக்தியுடையோர்க்கல்லாது பிறர் அடைதற் கரியவன் பரமன். நண்புடையவர்க்கு அன்றிப் பிற அரசர்களாலும் அடைய முடியாதது மதில் என்பதால் “ஈசனை ஒக்கும்” என்றார். எனவே இந்தப் பாடல் சிலேடை உவமையணி யாகும்.

மதிலின் உயர்வு, திண்மை, அருமை, அகலம் போன்றவைகளை எடுத்துரைத்துள்ளதை அறியலாம். (சூலம்: இடிதாங்கி) சூலாயுதம். இடிதாங்கி போன்ற வடிவுடைய முத்தலைச் சூலத்தை ஏந்தியிருத்தலால் காளியும் ஒக்கும் என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-20, 12:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 76

சிறந்த கட்டுரைகள்

மேலே