பள்ளி மாணவர்கள் எளிதாகப் பயின்று இன்புற புணர்ச்சி இலக்கணம் எளிய வடிவில் பாகம் 5

பள்ளி மாணவர்கள் எளிதாகப் பயின்று இன்புற
புணர்ச்சி இலக்கணம் எளிய வடிவில்
பாகம் 5
வழங்குபவர்

திருமதி ஸ்ரீ விஜயலஷ்மி
தமிழாசிரியை
கோயம்புத்தூர் 22

அன்பு மாணவர்களே! கடந்த பதிப்பில் வெளியிட்டிருந்த புணர்ச்சி விதிகள் உங்களுக்குப் புரிந்தும், பிடித்தும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இதோ இந்த ஐந்தாம் பாகத்தினை உங்களுக்காக வெளியிடுகின்றேன்.
பயில்வோமா! வாருங்கள்: ஐயம் இருப்பின் தெளிவு பெற இதோ என் கைப்பேசி எண்கள் உங்களுக்காக. 9843297197 / 9043069396
தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பினையும் நல்லாதரவையும் தர அன்புடன் பணிகின்றேன். இந்த நூல்கள் அனைவற்றையும் என் அன்பு பெற்றோர்களின் பொற்பாத கமலங்களுக்குக் காணிக்கையாக்குகின்றேன்.
தொடர்வோம்…..
அன்பு மாணவர்களே இதுவரை கற்பித்த அனைத்திலும் நீங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றீர்கள் என்பதனை உங்கள் அழைப்பின் மூலமும் உங்கள் மின் அஞ்சல் செய்திகள் மூலம் தெரிந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி. அதற்கான என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பல.
அடுத்தடுத்து உங்கள் தேவை என்ன என்பதனையும் என்னால் ஊகிக்க இயலுகின்றது. வாழ்த்துக்கள்.
இந்த பகுதியில் நாம் ‘எண்பெயர் புணர்ச்சி’ என்பதைப் பற்றி மிக எளிய முறையில் பயில இருக்கின்றோம்.
என்ன புதுமையாக உள்ளதா?
ஆம் ஒன்று, இரண்டு….. பத்து போன்ற எண்கள் கூட சில புணர்ச்சிவிதிகளைப் பெற்றே சொற்களில் அமைகின்றன. இனி அவற்றை விரிவாகக் காண்போம்.
நூற்பா எண்: 1
“எண்நிறை அளவும் பிறவும் எய்தின்
ஒன்றமுதலெட்டு ஈறாம் எண்ணுள்
முதல்ஈர் எண்முதல் நீளும் மூன்றுஆறு
ஏழ்குறு கும்ஆறு ஏழ்அல் லவற்றின்
ஈற்றுயிர் மெய்யும் ஏழன் உயிரும்
ஏகும் ஏற்புழி என்மனார் புலவர்”
நன்னூல்- 188
இனி நூற்பா விளக்கத்தினை மிக எளிமையாகக் காணலாமா?
• பெயர்ச் சொற்களில், எண் பெயர் (அதாவது ஒன்று இரண்டு என்பன.)
• அளவுப் பெயர் அதாவது கழஞ்சு (இது ஒரு எடுத்தல் அளவையின் பெயர்) (அதாவது பன்னிரண்டு பணவெடை கொண்ட ஒரு நிறை என்பதாகும்)
• இந்த அளவைப் பெயர்களுள் நீட்டல் அளவை, முகத்தல் அளவை, எடுத்தல் அளவை, எண்ணல் அளவை எனப் பல வகைகள் உண்டு.
• நீட்டல் அளவை (எ.டு.ஒரு மீட்டர்), முகத்தல் அளவை
(ஒரு லிட்டர்) எடுத்தல் அளவை (ஒரு கிலோ) எண்ணல் அளவை- ஒன்று…இரண்டு… மூன்று…. என்பன. என்ன மாணவர்களே! எளிமையாக இருக்கின்றதல்லவா!
• நிறை பெயர்: இது ஒரு எடையின் பெயர்
• இவ்வாறு பல பெயர்கள் உண்டு.
இனி நூற்பா விளக்கத்திற்கு வருவோம்.
 நிலைமொழியில் ஏதேனும் ஒருஎண் பெயர் இருந்து, வருமொழியில் மேலே கூறியவற்றுள், எடை நிறை அளவு எண் போன்ற பலவற்றுள் அல்லது பிற பெயர்ச் சொற்கள் வந்தால்,
 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு ஆகிய எண்களில் உள்ள முதல் இரண்டு எண்களின் முதல் எழுத்துக்கள் நீண்டு வரும்.(அதாவது குறிலாக உள்ளது நெடிலாக மாறும்)
எடுத்துக்காட்டு ஒன்று ஆண்டு ஓராண்டு, இரண்டு ஐந்து ஈரைந்து என மாற்றம் அடையும்.
 அடுத்து, மூன்று, ஆறு, ஏழு என்பதில் உள்ள முதல் எழுத்து குறுகும். (அதாவது நெடில் குறிலாக மாறும்) எடுத்துக்காட்டு- மூன்று பத்து முப்பது என்றும், ஆறு சுவை அறுசுவை என்றும், ஏழு பத்து எழுபது என்றும் குறுகி ஒலிக்கும்.
 அடுத்து, ஆறு, ஏழு ஆகிய எண்களைத் தவிர மற்ற எண்களில் உள்ள, ஈற்று உயிர் மெய் கெடும். எடுத்துக்காட்டு: (ஒன்று - ஒன் என்றும்), (இரண்டு - இரண் என்றும்), (மூன்று நூறு மூன்னூறு, நான்கு மணி நான்மணி, ஐந்து ஆயிரம் ஐந்தாயிரம்; என்பனவாகத் திரியும்.
 அதோடு ஏழு என்ற என்பதில் உள்ள இறுதி எழுத்தான உயிர் எழுத்தும் மறையும் (ஏழு + கடல் ஏழு; கடல் )ழு+ ழ் =உ) அவ்வாறு மறைந்த நிலையில் ஏழ்கடல் என்று மாறும்.)
இனி மேலே குறிப்பிட்ட நூற்பா விளக்கத்திற்கு தகுந்த சான்றுகளை விரிவாகக் காண்போம்.
1. எண் பெயர் வருதல்
எடுத்துக்காட்டு:
ஆறு+ பத்து = அறுபது
இதில் ஆறு என்பதில் உள்ள முதல் ‘ஆ’ என்ற நெடில் எழுத்து குறுகி அறு என்று திரிந்துள்ளமையைக் காண்க.
அதோடு இந்த புணர்ச்சியில் பத்து என்பதன் நடுவில் உள்ள ‘த்’ என்ற மெய் எழுத்து மறைந்துள்ளமையைக் காண்க.
அதற்கான நூற்பாவும் விளக்கங்களும் பின்வருமாறு: அதாவது பத்து என்ற எண் புணர்வதற்கான நூற்பா:
நூற்பா:
“முதலிரு நான்காம் எண்முனர்ப் பத்தின்
இடையொற்று ஏகல் ஆய்தம் ஆகல்
எனஇரு விதியும் ஏற்கும் என்ப”
நன்னூல் 195
நூற்பா விளக்கம்:
முதல் இரு நான்கு என்றால் 4 ×2 = 8 என்பதாகும்.
அதாவது ஒன்று முதல் எட்டு வரையில் உள்ள எண்கள் நிலைமொழியில் வந்திருந்து வருமொழியில் பத்து என்ற எண் வந்தால் அந்த பத்து என்ற எண்ணின் நடுவில் உள்ள மெய் எழுத்து (த்) மறைந்துவிடும்.
(இடையொற்று ஏகல்). சிலபொழுது அந்த மெய் (த்) எழுத்திற்குப் பதிலாக அங்கு ஆய்த எழுத்து தோன்றும் (பஃது) என்பது இதன் விளக்கமாகும்.
அதைத்தான் மேற் கூறிய சான்றில் ஆறு + பத்து= அறுபது என்று சுட்டியிருக்கிறேன்.
இதுவே அறுபஃது என்றும் வரும். இதைப் போன்றே ஒருபது, இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது எழுபது, எண்பது என்றும்….
ஒருபஃது, இருபஃது, முப்பஃது, நாற்பஃது, ஐம்பஃது, அறுபஃது, எழுபஃது, எண்பஃது என்றும் திரிந்து வரும் என்பதனை மாணவர்கள் இங்கு நினைவு கொள்ள வேண்டும்.
என்ன மாணவர்களே! நாம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்துவிட்டோம் பார்த்தீர்களா? அதாவது ஒரு நூற்பாவிற்குள்ளேயே இரண்டு நூற்பாக்களின் விதிகள் அடங்கியுள்ளதைத் தான் அவ்வாறு குறிப்பிட்டேன். சரிதானே!
அடுத்து முதலில் குறிப்பிட்ட நூற்பாவின் இரண்டாவது படியான நிறைபெயர் வருதலைப் பற்றிய விளக்கத்தைக் காண்போம்.
எடுத்துக்காட்டு:
ஆறு + கழஞ்சு = அறுகழஞ்சு இதன் விளக்கத்தை நான் முன்னமேயே குறிப்பிட்டிருப்பதைக் காண்க.
அடுத்து அளவுப் பெயர் வருதலுக்கான எடுத்துக்காட்டு:
எடுத்துக்காட்டு:
ஆறு + நாழி = அறுநாழி (இங்கு நாழி என்பதன் பொருள் (ஒருபடி என்பதாகும்) நாம் கடலைப் பொரிக்காரரிடம் ஒருபடி பொரிதாருங்கள் என்கிறோம் அல்லவா? அது தான் படி. அதாவது காற்படி, அரைப்படி, ஒருபடி என்பன….. இது தான் அளவுப் பெயர். எளிமையாகப் புரிகின்றதல்லவா?
அடுத்து பிற பெயர்கள் முன்னால் எண் பெயர் எவ்வாறு புணர்கின்றது என்பதைக் காணலாமா?
எடுத்துக்காட்டு:1
ஆறு + மீன் = அறுமீன் (இதில் மீன் என்பது கடல்வாழ் உயிரினம் என்பதாகும்) இந்த எடுத்துக்காட்டுகளில் ஆறு என்பதன் முதல் குறுகி அறு என்று மாறியுள்ளதைக் காண்க.
எடுத்துக்காட்டு 2
ஏழு + கடல் = ஏழ்கடல் இதில் ஏழு என்பதில் இறுதியில் உள்ள நிலையீற்று உயிர் அதாவது ழு( ழ் + உ) என்பது மறைந்து ஏழ்கடல் என்று புணர்ந்திருப்பதைக் காணுங்கள்.
அடுத்து:
இரண்டு + ஆயிரம் = இரண்டாயிரம்
இதனைக் கண்டீர்களா? அதாவது நாம் முன்னர் பயின்ற பாடங்களில் உள்ள குற்றியல் உகரப் புணர்ச்சியின் அடிப்படையில் இது புணர்ந்துள்ளது.
மீள்கூறல்:
இரண்டு + ஆயிரம் இதில் நிலைமொழி ஈற்றில் உள்ள எழுத்து டு என்பதாகும். இதனைப் பிரித்தால் ட்+ உ எனப் பிரியும். வருமொழி முதலில் உள்ள எழுத்து ஆ என்ற உயிர் எழுத்தாகும் இரண்டு உயிர் எழுத்துகள் ஒன்றாகசேராது என்பது தெரியும் அல்லவா? அதனால் இதில் உள்ள உ என்ற எழுத்து மறைந்து விட்டது. (உக்குறள் மெய்விட்டோடும் என்ற அடிப்படையில்) அவ்வாறு சென்ற பின்னர் இரண்ட் + ஆயிரம் என்று இருக்குமல்லவா?
அடுத்து, ட் + ஆ = டா என்பது உங்களுக்கே தெரியும். (“உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவதியல்பே”) என்ற அடிப்படையில் இரண்டாயிரம் என்று புணர்ந்துள்ளது. (இது உயிர்த்தொடர்க்குற்றியலுகரம் ஆகும்).
அன்பு மாணவர்களே! இவ்வாறு ஒரு நூற்பா பயிலும் போதே அதனோடு தொடர்புடைய மற்றொரு நூற்பாவும் தொடர்ந்து வருவதை மாணவர்கள் நன்கு தெளிவாகப் புரிந்து பயிலவேண்டும்.
---------------------
நூற்பா: 2
“ஒன்றன் புள்ளி ரகரம் ஆக
இரண்டன் ஒற்றுயிர் ஏகஉவ் வருமே.”
நூற்பா விளக்கம்:
முதல் நூற்பாவில் கூறப்படடுள்ளவாறு எண்பெயர், அளவுப் பெயர் நிறைபெயர், பிறபெயர் ஆகியவை வருமொழியில் வரும்பொழுது, ஈற்று உயிர்மெய் கெடும் என்ற விதிப்படி,
ஒன்று என்பதில் உள்ள று என்ற உயிர்மெய் எழுத்து கெடும்(மறையும்)
அடுத்து நிலைமொழி ஈற்றில் உள்ள ன் என்ற மெய் யெழுத்து ர் என்ற மெய் எழுத்தாக மாற்றம் அடையும்.
அதைப் போலவே இரண்டு என்பதில் உள்ள ஈற்றுஉயிர் மெய் எழுத்தாகிய று என்ற மெய் எழுத்தும் மறையும்(கெடும்) அடுத்து இரண் என்தில் உள்ள ண் என்ற மெய் எழுத்தும் ர் என்ற மெய் எழுத்தாக மாறும்)
இனி இவற்றை சில எடுத்தக்காட்டுகள் வாயிலாக அறியலாம்.
எடுத்துக்காட்டு 1
ஒன்று + ஆயிரம் = ஓராயிரம்
 இதில் முதலில் ஒ என்ற குறில் ஓ என்ற நெடில் எழுத்தாக மாறியுள்ளதைக் கவனிக்கவும்.
 அடுத்து று என்ற நிலை மொழி மறைந்து ஓன்+ ஆயிரம் என மாற்றம் அடையும்.
 அடுத்து ஓன் என்பதில் உள்ள ன் என்ற மெய் எழுத்து ர் என்ற மெய் எழுத்தாக மாற்றம் அடையும்.
 இறுதியாக ஓர் +ஆயிரம் = ஓராயிரம் எனமாறும்(ர் +ஆ = ரா)
இப்பொழுது எளிதாக இருக்கின்றதல்லவா?
இவ்வாறு தான் ஓராயிரம் என்ற சொல் மாற்றம் பெற்றுள்ளது.
அடுத்து,
எடுத்துக் காட்டு 2
இரண்டு + ஆயிரம் = ஈராயிரம்
 இதிலும் முதலில் இரண்டு என்பதில் முதலில் உள்ள இ என்ற குறில் ஈ என்ற நெடில் எழுத்தாக மாற்றம் அடையும்.
 அடுத்து ஈரண்டு என்பதில் உள்ள நிலைமொழி ஈற்று உயிர்மெய் எழுத்தாகிய டு என்ற எழுத்து கெடும்.(மறையும்)
 அடுத்து “இரண்டன் ஒற்றுயிர் ஏகஉவ் வருமே” என்ற விதிப்படி இரண்டு என்பதில் உள்ள ண் என்ற மெய் எழுத்தும், ர என்பதில் உள்ள உயிர் எழுத்தாகிய ர் + அ உயிர் எழுத்தாகிய அ என்ற எழுத்தும் மறைந்துவிடும்.
 இறுதியாக நின்ற ஈர் + ஆயிரம் என்பது, ஈராயிரம் என்று (“உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற அடிப்படையில்) (ர்+ ஆ = ரா) என்று மாற்றம் அடையும்.
-------------------
எடுத்துக்காட்டு 3 (எண் பெயர்)
ஒன்று + பத்து = ஒருபது
இரண்டு + பத்து = இருபது
எடுத்துக்காட்டு 4 (நிறைபெயர்)
ஒன்று + கழஞ்சு = ஒருகழஞ்சு
இரண்டு + கழஞ்சு = இருகழஞ்சு
எடுத்துக்காட்டு 5 (அளவுப்பெயர்)
ஒன்று + நாழி = ஒருநாழி
இரண்டு + நாழி = இருநாழி
எடுத்துக்காட்டு 6 (பிறபெயர்)
ஒன்று + வகை = ஒருவகை
இரண்டு + வகை = இருவகை
(ஓராயிரம், ஈராயிரம் என்று கூறுவது வழக்கம் இல்லை.)
----------------------------------
நூற்பா: 3
“மூன்றன் உறுப்பு அழிவும் வந்ததும் ஆகும்”.
நூற்பா விளக்கம்:
மேற்கூறிய நால்வகைப் பெயர்களும் வருமிடத்து,
• நிலைமொழியின் இறுதியில் உள்ள, மூன்று என்பதன் உயிர்மெய் எழுத்தாகிய று என்ற எழுத்து முதலில் கெடும் அல்லது மறையும்.
• பின்னர் ன் என்ற, னகர ஒற்று வருமொழியில் முதலில் வரும் மெய்யெழுத்தாக மாற்றம் அடையும்.
எடுத்துக்காட்டு: 1
மூன்று + ஒன்று = மூவொன்று
 இதில் முதலில் மூன்று என்ற சொல்லில் உள்ள ன் என்ற மெய் எழுத்தும், று என்ற உயிர்மெய் எழுத்தும் மறைந்துவிடும்
 இறுதியாக நின்ற மூ என்ற எழுத்துடன், வருமொழி ஒன்று என்ற எழுத்து சேராது. எவ்வாறெனின் மூ என்ற எழுத்தைப் பிரித்தால் ம் + ஊ என்று பிரியும்.
 நிலை மொழி ஊ என்ற எழுத்தும், வருமொழி முதலில் உள்ள ஒ என்ற உயிர் எழுத்தும், இணையாது. அதனை இணைக்க அங்கு ஒரு மெய் எழுத்து தேவைப்படும்.
 இதற்கு நாம் ஏற்கனவே பயின்ற உடம்படுமெய் புணர்ச்சி என்ற விதியில் கண்டிருக்கிறோம்.
 அதில், “ஏனை உயிர் வழி வவ்வும்” என்ற விதிப்படி, மூ+ வ் + ஒன்று என்று வரும்.
 அடுத்ததாக, “உடல் மேல் உயிர் வந்தொன்றுவது இயல்பே” என்ற விதிப்படி வ் + ஒ = வொ என்று மாற்றம் அடைந்து, மூவொன்று என்று புணர்ந்தது.
இதிலும் ஒரு விதிக்குள் மற்ற பல விதிகளும் அடங்கியிருப்பதைக் கவனிக்கவும்.
இன்னும் சில எடுத்துக்காட்டுகள்:
மூன்று + எடை = மூவெடை,
மூன்று + உழக்கு = மூவுழக்கு,
மூன்று + உலகு = மூவுலகு போன்றவை புணர்ந்திருப்பதைக் காண்க.
இனி அடுத்ததாக “மூன்றன் உறுப்பு அழிந்து வந்ததும் ஆகும்” என்ற விதிப்படி,
மூன்று + பத்து = முப்பது
மூன்று + நாழி = முந்நாழி
மூன்று + மொழி = மும்மொழி என்பதில்,
முதலில் மூ என்ற நெடில் மு என்று குறுகியிருப்பதையும், அடுத்து அதன் ஒற்று உயிர்மெய் ஆகியன ஏகிய நிலையில் (சென்ற நிலையில்), வந்த மெய்யாக மாற்றம் அடைந்திருப்பதைக் காண்க.
அதாவது மூ + பத்து வருமொழி முதல் எழுத்து பத்து என்பதாகும் ப என்ற எழுத்தைப் பிரித்தால் ப் + அ எனப் பிரியும். எனவே வந்த எழுத்து ப் என்பது. அதுவே மீண்டும் வந்து மு + ப் + பத்து = முப்பது என்று மாற்றம் அடைந்தது.
பத்து என்பதில் உள்ள த் என்ற இடையில் உள்ள எழுத்து எவ்வாறு நீங்கியது என்பதை மேலே உள்ள இடத்தில் விளக்கியுள்ளதைக் காண்க.
----------------------------
நூற்பா 4
“நான்கன் மெய்யே லறஆ கும்மே”
நன்னூல் 191.
நூற்பா விளக்கம்:
நிலைமொழியில் நான்கு என்ற எண் இருந்து வருமொழியில் நால்வகைப் பெயர்கள் வந்தால், (நால்வகைப் பெயர்கள் எவை என்பது மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.. காண்க.)
நான்கு என்பதில் உள்ள மெய் எழுத்து(ன்) லகரமாகவோ,(ல்) அன்றி றகரமாகவோ(ற்) மாற்றம் அடையும்.
இனி சில சான்றுகளைக் காணலாம்.
எடுத்துக்காட்டு 1
நான்கு + ஒன்று = நாலொன்று
இதில் நிலைமொழியீற்று உயிர் மெய் நீங்கியது
நான்கு + ஒன்று
அவ்வாறு நீங்கிய நிலையில்,
நான் + ஒன்று என்று நின்றது
பின்னர் ன் என்ற மெய் ல் என்ற மெய்யாகத் திரிந்தது.
அந்த நிலையில், நால் + ஒன்று இருக்கும்.
அடுத்து “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவதியல்பே” என்றவிதிப்படி,
நால் ஒன்று (ல் + ஒ = லொ என்று மாறி நாலொன்று என்று புணர்ந்தது.
எடுத்துக்காட்டு 2
நான்கு + கவி = நாற்கவி
இதில் முதலில் நிலையீற்று உயிர் மெய் நீங்கியது
நான்கு + கவி
அவ்வாறு நீங்கிய நிலையில்,
நான் + கவி என்று இருக்கும்.
பின்னர் முன்னர் கூறிய விதிப்படி ன் என்ற மெய் எழுத்து ற் என்ற மெய் எழுத்தாக மாறிய நிலையில்,
நாற்கவி என்று புணர்ந்தது.
பயிற்சி பெற சில சான்றுகள்:
நாலெடை, நாற்கலம்.
நான்மணி (இயல்பாய்ப் புணர்ந்தது.)
எடுத்துக்காட்டு 3
நான்கு + நாழி = நானாழி (இங்கு முன்னர் பயின்ற “குறிலிணைவில்லா….” என்ற நூற்பா அடிப்படையி;ல் நானாழி என்று புணர்ந்துள்ளமையைக் காண்க.)
நூற்பா 5
“ஐந்தன்ஒற்று அடைவதும் இனமும் கேடும்”
நன்னூல் 192
நூற்பா விளக்கம்:
நிலைமொழியில் ஐந்து என்ற எண் இருந்து வருமொழியில் (எண், நிறை, அளவு, பிற) போன்ற நான்கனுள் ஏதேனும் ஒன்று வந்தால்,
1. ஐந்து என்பதன் இறுதி உயிர்மெய் கெடும்
2. ஐந்து என்பதில் உள்ள ந் என்ற நகர மெய்; வருமொழி முதலுக்கு ஏற்ற மெய்யாக மாற்றம் அடையும்.
3. வருமொழி முதலுக்கு ஏற்ற இன மெய்யாக மாற்றம் பெற்றும் அமையும்.
4. சில இடங்களில் ஐந்து என்பதில் உள்ள ந் என்ற மெய் கெட்டும் (மறைந்தும்) புணரும் என்பதாகும்.

இனி எடுத்துக்காட்டுகள் வழி விளக்கம்பெறலாம்.
எடுத்துக்காட்டு 1
ஐந்து + மூன்று = ஐமூன்று (நகரம் கெட்டது)
எடுத்துக்காட்டு 2
ஐந்து + மஞ்சாடி = ஐம்மஞ்சாடி (வந்த மெய்யாகத் திரிந்தது)
குறிப்பு: (இங்கு மஞ்சாடி என்பது மண்சாடி என்ற பொருளாகும் மண்பாண்டம்)
(இது குறித்து மகரப் புணாச்சியில் விரிவாகக் கூறப்பட்டதை நினைவில் கொள்க.)
எடுத்துக்காட்டு 3
ஐந்து + கலம் = ஐங்கலம்
(வருமொழி இனமாகத் திரிந்தது)
பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுகள் இதோ:
ஐயொன்று, ஐயம்பு, ஐயாழாக்கு….
குறிப்பு: (இங்கு நகர மெய் திரிந்த நிலையில் இ,ஈ,ஐ வழி யவ்வும் என்ற நூற்பா அடிப்படையில் புணர்ந்துள்ளமையை நினைவில் இருத்துக.)
என்ன மாணவர்களே! பார்த்தீர்களா! இது தான் புணர்ச்சி ஒவ்வொரு விதிக்குள்ளும் பல விதிகள் ஒளிந்துகொண்டு இருப்பதைக் காணுற்றீர்களா?
நூற்பா: 6
“எட்டன் உடம்புணவ் வாகும் என்ப”
நன்னூல்- 193
நூற்பா விளக்கம்:
நிலைமொழி ஈற்றில் எட்டு என்ற எண் இருந்து வருமொழியில் நால்வகைப் பெயர்களும் வந்து புணரும்(சேரும்) பொழுது, எட்டு என்பதில் உள்ள நிலையீற்று ‘உயிர் மெய் கெட்டபிறகு(மறைந்த பிறகு) அதற்கு முன்பாக உள்ள ‘ட்’ என்ற மெய் எழுத்து ‘ண்’ என்ற மெய்யெழுத்தாக மாற்றம் அடையும்.
எடுத்துக்காட்டு 1
எட்டு + பத்து = எண்பது
குறிப்பு: பத்து என்ற எண் புணரும் முறையைப் பற்றி மேலே தெளிவாகக் கண்டிருக்கின்றோம் என்பதை இங்கு நினைவு படுத்துகின்றேன்.
எடுத்துக்காட்டு:
எட்டு + குணம் = எண்குணம்.
அடுத்து நாம் காண இருப்பது ஒன்பது என்ற எண் எவ்வாறெல்லாம் புணரும் என்பதைத்தான்.
தயவு செய்து அன்பு மாணவர்களே! சிறந்த கவனத்தொடு இதனை ஆழ்ந்து உற்று நோக்கிக் கற்றுக் கொள்க.
ஏனெனில் எத்தகையவரையும் சிறிது திணரச் செய்யும் நூற்பா இந்த ஒன்பது.
சரி விளக்கத்திற்கு வரலாம்.
நூற்பா : 7
“ஒன்பா னொடு பத்து நூறும் ஒன்றின்
முன்னதின் ஏனைய மரணி ஒவ்வொடு
தகரம் நிறீஇப் பஃதுஅகற்றி னவ்வை
நிரலே ணளவாத் திரிப்பது நெறியே”.
நன்னூல் 194
நூற்பா விளக்கம்:
ஒன்பது என்ற எண்ணுடன் பத்து நூறு ஆகிய எண்கள் ஒன்றும் போது, அல்லது சேரும் போது, முன்னதான ஒன்பது என்ற எண்ணிலுள்ள அனைத்து எழுத்துகளும் மாற்றம் அடையும்(முரண்படும்)
அடுத்து அந்த ‘ஒ’ என்ற எழுத்துடன் ‘த்’ என்ற மெய் எழுத்தைச் சேர்த்து தொ என்று மாற்ற வேண்டும்.
அடுத்து பஃது அகற்றி என்றால், நிலைமொழி ஈற்றில் உள்ள ப, து என்ற எழுத்துக்களை நீக்க வேண்டும் என்று பொருள்:
இறுதியாக ‘ன்’ என்ற மெய் எழுத்தை ‘ண்’ என்ற மெய் எழுத்தாகவோ, ‘ள்’ என்ற மெய் எழுத்தாகவோ இடத்திற்கு ஏற்ப மாற்றம் செய்து புணர்த்த வேண்டும்(சேர்க்க வேண்டும்) என்பது இதன் விளக்கம் ஆகும்.
எடுத்துக்காட்டு 1
1. நிலைமொழி ஈற்றில் ஒன்பது என்ற எண் இருந்து, வருமொழி முதலில் பத்து என்ற எண்ணோ, அன்றி நூறு என்ற எண்ணோ வந்து புணரும் போது, சேரும் போது, நிலைமொழி மற்றும் வருமொழி ஆகிய இரண்டிலுமே சில மாற்றங்கள் ஏற்படும்.
2. அதாவது, ஒன்பது என்ற நிலைமொழியில் உள்ள அனைத்து எழுத்துகளுமே மாற்றம் அடையும்.
3.ஒன்பது என்ற எண்ணுடன் பத்து புணரும்போது,(சேரும் போது, அடையும் மாற்றங்கள் முறையே,
 ஒன்பதில் உள்ள ‘ஒ’ என்ற எழுத்துடன் தகர மெய்யை இணைத்து (‘த்’ என்ற மெய் யெழுத்து) தொ என்று மாற்ற வேண்டும். அவ்வாறு மாறிய நிலையில் தொன்பது என்று இருக்கும்.
 அடுத்து ‘ன்’ என்ற மெய் யெழுத்தை ‘ண்’ என்ற மெய் எழுத்தாக மாற்ற வேண்டும். அவ்வாறு மாறிய நிலையில் தொண்பது என்று இருக்கும்.
 அடுத்து நிலைமொழியின் ஈற்றில் உள்ள ப, து என்ற இரண்டு உயிர்மெய் எழுத்தும் நீக்கப்படும். அவ்வாறு நீங்கிய நிலையில் தொண் என்று இருக்கும்.
 அதற்கு முன், பத்து என்று வருமொழியில் வந்த எண்ணை நூறு என்று மாற்ற வேண்டும். அப்பொழுது தொண் + நூறு என்று இருக்கும்.
 இறுதியாக வருமொழி நகரம் நிலையீற்றி ணகரத்திற்கு ஏற்ப ணகரமாக மாற்றப்பட்டு, தொண்ணூறு என்று புணரும்.
இப்பொழுது சுலபமாக உள்ளதா? பலமுறை முயற்சி செய்தால் எளிதாக மனதில் பதியும். சிறு சிறு மாற்றங்களைத் தான் செய்கின்றோம். அஞ்சத் தேவையில்லை. சரிதானே அன்பு மாணவர்களே!
எடுத்துக்காட்டு 2
அடுத்து ஒன்பது என்பதன் முன் நூறு என்ற எண் புணரும் முறையைக் காணலாம்.
 ஒன்பது + நூறு = தொள்ளாயிரம்
 ஒன்பது என்பதில் உள்ள ‘ஒ’ என்ற எழுத்துடன் ‘த்’ என்ற மெய் யெழுத்தை சேர்த்து தொ என்று மாற்றுதல். மாறிய நிலையில் தொன்பது+ நூறு என்று இருக்கும்.
 அடுத்து ‘ன்’ என்ற மெய் எழுத்து ‘ள்’ என்ற மெய் எழுத்தாக மாற்றம் அடைந்து தொள்பது + நூறு என்று இருக்கும்
 அடுத்து ப, து என்ற எழுத்துக்கள் நீங்கிய நிலையில், தொள் + நூறு என்று இருக்கும்.
 இறுதியாக வருமொழி முதலில் உள்ள நூறு என்ற எண்ணை ஆயிரம் என்று மாற்ற வேண்டும். மாறிய நிலையில் தொள் + ஆயிரம் என்று இருக்கும்.
 அடுத்து, “தனிக்குறில் முன் ஒற்று உயிர் வர இரட்டும்” என்ற விதியைப் பயன் படுத்திய நிலையில் தொள் + ள் + ஆயிரம் என்று இருக்கும்.
 இறுதியாக “உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவதியல்பே” என்ற விதிப்படி, ‘ள்’ என்ற மெய் எழுத்துடன் ‘ஆ’ என்ற உயிர் எழுத்து சேர்ந்து ‘ளா’ என்ற உயிர்மெய் எழுத்தான நிலையில் தொள்ளாயிரம் என்று மாற்றம் அடைந்து புணர்ந்தது.
எத்தனை வேலை செய்திருக்கிறார் பவணந்தி முனிவர் பார்த்தீர்களா? அன்பு செல்வங்களே! பவணந்தி முனிவர் என்பவர் தான் நன்னூல் என்ற இலக்கண நூலின் ஆசிரியர். சரிதானே.
நூற்பா: 8
“ஒருபஃது ஆதிமுன் ஒன்றுமுதல் ஒன்பான்
எண்ணும் அவையூர் பிறவும் எய்தின்
ஆய்தம் அணிய ஆண்டு ஆகும் தவ்வே”
நன்னூல் 196
நூற்பா விளக்கம்:
ஒருபஃது , இருபஃது, முபஃது…. என்பது எவ்வாறு புணர்ந்தது(சேர்ந்தது) என்பதனை முன்னமே விளக்கியுள்ளமையை இங்கு நினைவுகூர்கிறேன்.
இனி விளக்கம் காணலாம்.
1. ஒருபஃது முதல் எண்பஃது இறுதிவரையில் உள்ள நிலைமொழி எண்களுக்கு முன்பாக வருமொழியில், ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எண்களோ, அல்லது அவை சார்ந்த பிறவோ வந்து சேரும்போது, ஒருபஃது என்பதன் இடையில் உள்ள ஆய்த எழுத்து கெட்டு(மறைந்து) அந்த இடத்தில் இயல்பான தகரம் வரும். (த் என்ற மெய் எழுத்து)
எடுத்துக்காட்டு 1
ஒருபஃது + ஒன்று = ஒருபத்தொன்று
எவ்வாறெனில் ஒருபத்து என்று(தகர ஒற்று பெற்று) இயல்பாக மாறிய நிலையில் நிலைமொழி ஈற்றில் உள்ள ‘து’ என்ற எழுத்தைப் பிரித்தால் ‘த்+ உ= து’ என்று இருக்கும் அல்லவா? வருமொழியில் என்ன வந்துள்ளது ஒன்று என்ற முதல் எழுத்தாகிய ‘ஒ’ என்ற உயிர் எழுத்து.
நமக்குத்தான் தெரியுமே! உயிர் எழுத்துடன் மற்றொரு உயிர் எழுத்து சேராது என்று. அதனால் “உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்று நாம் ஏற்கனவே பார்த்த விதிப்படி நிலைமொழி ஈற்று உகரம் கெட ஒருபத்த் + ஒன்று என்று இருக்கும்
அடுத்து பழைய முறைப்படி, “உடல்மேல் உயிர்வந்தொன்றுவதியல்பே” என்ற விதியைப் பயன்படுத்தி, ‘த் + ஒ = தொ’ என்று மாற்றி ஒருபத்தொன்று என்று புணர்த்தியுள்ளார்.(சேர்த்துள்ளார்) ஆசிரியர் புரிந்ததா? எத்தனை சுலபமாக உள்ளது இல்லையா மாணவர்களே!
நூற்பா: 9
“ஒன்று முதல் ஈரைந்து ஆயிரம் கோடி
எண்நிறை அளவும் பிறவரின் பத்தின்
ஈற்றுயிர் மெய்கெடுத்து இன்னும் இற்றும்
ஏற்பது ஏற்கும் ஒன்பதும் இணைத்தே.”
நன்னூல் 197
நூற்பா விளக்கம்:
 நிலைமொழியில் பத்து என்ற எண் இருந்து வருமொழியில் பத்து, ஆயிரம், கோடி, ஆகிய எண்பெயர்களும், நிறை, அளவு பெயர்களும், பிற பெயர்களும் வரும்பொழுது,
 நிலை மொழி ஈற்றில் உள்ள உயிர்மெய் எழுத்தாகிய ‘து’ கெடும். அல்லது மறையும்.
 அடுத்து, ‘த்’ என்ற மெய் எழுத்துடன் ‘இன்’ அல்லது ‘இற்று’ ஆகிய இரண்டு சாரியைகளுள் ஏதேனும் ஒன்று இணைந்து(பொருந்தி) வரும்.
 இதுபோன்றே ஒன்பது என்ற நிலைமொழியின் முன்பாக, மேற்கூறிய பெயர்கள் வந்து புணரும்போது(சேரும்போது), பத்து என்ற எண்ணிற்குக் கூறப்பட்ட விதிமுறைகளைப் போன்றே ‘இன்’ அல்லது ‘இற்று’ ஆகிய இரண்டு சாரியைகளுள் ஏதேனும் ஒன்று இயைந்து(சேர்ந்து) புணரும். என்பதாகும்.
இனி சான்றுகள் வழி காண்போம்.
எடுத்துக்காட்டு 1.
பத்து என்ற எண் முன் இன் சாரியைப் பெற்ற சில சான்றுகள்:
பதினொன்று:
பத்து + இன் = ஒன்று
1. இதில் முதலில் பத்து என்ற எண்ணின் ஈற்று உயிர்மெய் கெடும்.(மறையும்) அவ்வாறு கெட்ட நிலையில் பத் + இன் = ஒன்று என்று இருக்கும்.
2. அடுத்து ‘த் + இ = தி’ என்ற முறையில் பதின் ஒன்று என்று இருக்கும்
3. அடுத்து ன் + ஒ = னொ என்ற அடிப்படையில் பதினொன்று என்று மாற்றம் பெற்று புணரும்.
பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுகள்:
பதின்மூன்று, பதினாயிரம், பதின்கலம், பதின்மடங்கு.
பத்தின் முன் இற்றுச் சாரியை பெறுவதற்கான சான்று:
எடுத்துக்காட்டு 1
பத்து + பத்து
1. நிலைமொழி ஈற்று உயிர் மெய் எழுத்தான ‘து’ கெடும்.(அல்லது மறையும்) அவ்வாறு கெட்ட நிலையில் பத் + பத்து என்று இருக்கும்
2. அடுத்து ‘த்’ என்ற மெய்யெழுத்துடன் ‘இற்று’ என்ற சாரியை சேரும் அவ்வாறு சேர்ந்த நிலையில், பத் + இற்று+ பத்து என்று இருக்கும். (த் + இ = தி)
பதிற்று + பத்து. என்று இருக்கும்.
3. “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
க,ச,த,ப மிகும்வித வாதன மன்னே” நன்னூல்- 165
என்ற விதிப்படி, பதிற்று + ‘ப்’ + பத்து = பதிற்றுப்பத்து என்று புணர்ந்தது.
பயிற்சி பெற சில சான்றுகள்:
பதிற்றொன்று, பதிற்றிரண்டு, பதிற்றுமூன்று, பதிற்றுக்கோடி
அடுத்து,
ஒன்பது நிலைமொழியீற்றல் இன் சாரியை பெறுதல்:
எடுத்துக்காட்டு 1
ஒன்பதினாயிரம்
1.ஒன்பது + இன் +ஆயிரம்
முதலில் ஈற்று உயிர் (த் +உ = து என்பதில் உள்ள உ கெடும் அவ்வாறு மறைந்த நிலையில் ஒன்பத் + இன் + ஆயிரம் என்று இருக்கும்.
2. அடுத்து த் + இ = தி என்றும், ன் + ஆ = னா என்றும் சேர்ந்து ஒன்பதினாயிரம் என்று மாற்றம் அடையும்.
பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுகள்:
ஒன்பதின்கழஞ்சு, ஒன்பதின்கலம், ஒன்பதின்மடங்கு
ஒன்பதின் ஈற்றில் இற்று சாரியைப் பெறுவதற்கோர் எடுத்துக்காட்டு:
ஒன்பதிற்றொன்று
ஒன்பது + இற்று + ஒன்று
1. முதலில் நிலைமொழி உகரம் கெடும் (த்+ உ= து)
அவ்வாறு கெட்ட நிலையில் ஒன்பத் + இற்று + ஒன்று என்று இருக்கும்
2. அடுத்து த் + இ சேர்ந்து ஒன்பதிற்று + ஒன்று என்று புணரும்.
3. அடுத்ததாக நிலைமொழியில் உள்ள று வைப் பிரித்தால் ற்+ உ என்று பிரியும் அந்த ‘உ’ என்ற உயிர் எழுத்துடன் வருமொழி ‘ஒ என்ற உயிர் எழுத்து புணராது எனவே, “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதியைப் பயன்படுத்தி அந்த உகரத்தை நீக்க வேண்டும். அவ்வாறு நீங்கிய நிலையில்,
ஒன்பதிற்ற் + ஒன்று என்று இருக்கும். பின்னர் நிலைமொழி இறுதி ‘ற்’ என்ற மெய்யுடன் வருமொழி ‘ஒ’ என்ற எழுத்து சேர்ந்து (ற் + ஒ= றொ) ஒன்பதிற்றொன்று என்று புணரும்(சேரும்).
பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுகள்:
ஒன்பதிற்றிரண்டு, ஒன்பதிற்றுக்குறுணி (குறுணி என்றால்- எட்டுபடி கொண்ட தானிய அளவு)
குறிப்பு: செய்யுள் மற்றும் மக்கள் பேசும் நிலையில் தற்பொழுது பத்துக்கோடி என்றும், ஒன்பது கோடி என்றும் இருப்பதை அறியலாம்.
அடுத்து, இங்கு பதினொன்று என்பது பத்தும் ஒன்றும் என்று பொருள் கொள்ளப்படுவதால் இது உம்மைத் தொகையாகும் என்பதை அறிக.
அதைப் போன்றே, பதிற்றொன்று என்பது பத்தாகிய ஒன்று பொருள் கொள்ளப்படுவதால் இது பண்புத் தொகையாகும் என்பதை அறிக
நூற்பா: 10
“இரண்டு முன்வரின் பத்தின்ஈற்று உயிர்மெய்
கரந்திட ஒற்று னவ்வாகும் என்ப”
நன்னூல்- 198
நூற்பா விளக்கம்:
நிலைமொழியில் பத்து என்ற எண் வந்திருந்து வருமொழியில் இரண்டு என்ற எண் வந்தால் அவை அடையும் மாற்றங்களாவன:
1. பத்து என்ற நிலைமொழி ஈற்று உயிர் மெய் கெடும்.
2. அடுத்து உள்ள ‘த்’ என்ற தகர ஒற்று ‘ன்’ என்ற னகர ஒற்றாக மாற்றம் அடையும்.
எடுத்துக்காட்டு 1
பத்து + இரண்டு = பன்னிரண்டு
1. முதலில் பத்து என்பதில் உள்ள ஈற்று உயிர் மெய் கெட்ட நிலையில், பத் +இரண்டு என்று இருக்கும்.
2. அடுத்து பத் என்ற தகர ஒற்று னகர ஒற்றாக மாறி பன்+ இரண்டு என்று இருக்கும்.
3. அடுத்ததாக “தனிக்குறில் முன் ஒற்று உயிர்வர இரட்டும்” என்ற புணர்ச்சிவிதிப்படி, பன் + ன் + இரண்டு என்று மாற்றம் அடையும்.
4. இறுதியாக (ன் + இ = னி) என்று(“உடல்மேல் உயிர்வந்தொன்றுவதியல்பே” என்ற விதிப்படி மாற்றம் அடைந்து) பன்னிரண்டு என்று புணர்ந்தது.
என்ன மாணவர்களே! எத்துனை அருமையாக உள்ளது பார்த்தீர்களா?
நாம் எண் பெயர் புணர்ச்சியின் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டோம். ஆம் இறுதி நூற்பாவைக் காணலாம்.
நூற்பா 11
“ஒன்பது ஒழித்தஎண் ஒன்பதும் இரட்டின்
முன்னதின் முன்னல ஓட உயிர்வரின் வவ்வும்
மெய்வரின் வந்தது மிகல்நெறி”
நன்னூல் - 199
நூற்பா விளக்கம்:
1. ஒன்று முதல் பத்து வரையில் உள்ள எண்களில் ஒன்பது நீங்கலாக மீதி உள்ள ஒன்பது எண்ணும், (அதாவது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து ஆகிய ஒன்பது எண்களும்),
2. இரட்டித்துக் கூறினால், (அதாவது ஒன்று ஒன்று இரண்டு இரண்டு மூன்று முன்று …. என்று கூறினால்),
3. நிலைமொழியில் உள்ள முதல் எழுத்து மட்டும் நிற்கும். மற்ற எல்லா எழுத்துகளும் மறைந்துவிடும். எப்பொழுது எனில், வருமொழியிரும் ஒன்று என்ற எண் வரும்பொழுது. அதோடு நிலைமொழியில் ‘ஒ’ என்ற உயிர் எழுத்தை அடுத்து வகரம் ‘வ்’ என்ற மெய் எழுத்து வரும்.
எடுத்துக்காட்டு:
ஒன்று + ஒன்று = ஒவ்வொன்று எவ்வாறெனின்,
• முதலில் நிலைமொழியில் ஒவ் என்றும் வருமொழியில் ஒன்று இருக்கும்.
• அடுத்து, (வ் + ஒ = வொ) என்று மாற்றம் அடைந்து ஒ+ வொன்று என்று இருக்கும்
• அடுத்து வந்த மெய் மிகும் என்ற விதிப்படி வந்த மெய் ‘வ்’ என்பதனால் மீண்டும் ஒரு ‘வ்’ எழுதப்பெற்று, இறுதியில் ஒவ்வொன்றும் என்று புணர்ந்தது.
இதைப்போன்றே,
வந்த மெய் மிகும் என்ற அடிப்படையில்,
இவ்விரண்டு, மும்மூன்று, நந்நான்கு, ஐவைந்து, அவ்வாறு, எவ்வேழு, எவ்வெட்டு, பப்பத்து என்று மற்றவையும் புணரும்(சேரும்)
மேற்கூறிய இந்த சொற்களைப் பிரித்து, புணர்ச்சிவிதி கண்டு இன்புறுக. ஐயம் இருப்பின் மேலே குறிப்பிட்டுள்ள என் கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்க.
வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்
புணர்ச்சி இலக்கணம் முற்றும்
அன்புடன் ஸ்ரீ.விஜயலஷ்மி
தமிழாசிரியை
கோயம்புத்தூர் 22
வாழ்க வளமுடன். வாழ்க தமிழ் மொழி
ஓங்குக தமிழன்னையின் புகழ் எட்டுத்திக்கும்.
சுபம்.

எழுதியவர் : ஸ்ரீ.விஜயலஷ்மி (2-Feb-20, 8:58 am)
பார்வை : 1130

சிறந்த கட்டுரைகள்

மேலே