சிவனுக்கு அரைக்கண்
முக்கண்ணன் சிவபெருமான், அவனுக்கு அரைக்கண்தான் உள்ளது என்று பாடுக என்று சொன்னார் ஒருவர்.
நேரிசை வெண்பா
முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற் குள்ள தரைக்கண்ணே - மிக்க
உமையாள்கண் னொன்றரைமற் றுன்வேடன் கண்னொன்
றமையுமித னாலென் றறி. 17
- கவி காளமேகம்
பொருளுரை:
சிவபெருமானை மூன்று கண்களையுடைய பெருமான் என்று முன்னோர்கள் சொல்வார்கள், மாலையினை அணிவோனான அப்பெரியோனுக்கு உள்ளதெல்லாம் அரைக் கண்ணேயாகும், (எவ்வாறு என்றாலோ?) மேலானவளான உமையம்மைக்கு உரிமையுடைய கண் ஒன்றரையாகும். பின்னும், ஊனுண்போனாகிய வேடனாம் கண்ணப்பன் அப்பி வைத்த அவனுடைய கண் ஒன்றாகும்; இத்தன்மையினாலே பெருமானுக்குச் சொந்தமானது, அரைக்கண் என்பதே பொருந்தும் என்று அறிவாயாக என்கிறார் கவி காளமேகம்.
கருத்து: "பெருமான் உமையொரு பாகன். அதனால் முக்கண்களிற் பாதியான ஒன்றரைக் கண் அம்மைக்கு உரியதாகும். காளத்தி நாதர்க்கு, ஒரு கண் கண்ணப்ப நாயனாரால் அப்பி வைக்கப் பெற்றது. இரண்டையும் கருதினால் எஞ்சிச் சொந்தமாக இருப்பது எல்லாம் அரைக்கண்தானே! இவ்வாறு பொருத்தமாகப் பாடி அனைவரையும் வியப்பிலே ஆழ்த்துகிறார் கவிஞர்.