பள்ளி மாணவர்கள் எளிதாகப் பயின்று இன்புற பகுபத உறுப்பிலக்கணம் எளிய வடிவில்

தமிழ் இலக்கணம் --
பகுபத உறுப்பிலக்கணம்.


வழங்குபவர்
திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி
தமிழாசிரியை கோயம்புத்தூர் -22


பதம் என்னும் சொல்லைக் குறிக்கும் வேறு சொற்கள் மொழி, கிளவி, சொல் என்பனவாகும்.


பதம் இரண்டு வகைப்படும்




பகுபதம் பகாப்பதம்
குறிப்பு: தேர்வில் கேட்கப்படும் சொற்களை பிரிக்கும் முறை எடுத்துக்காட்டுகள் ஆகியன அனைத்து விளக்கங்களுக்கும் கீழே தந்துள்ளேன்.

பகாப்பதம்: விளக்கம்:

ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்க முடியவில்லை என்றால் அது பகாப்பதம் எனப்படும்.

(எ.கா) மரம், தேன், தலை, போல, சால.த்
மேலே குறிப்பிட்டுள்ள வற்றை ம+ர+ம் என்றெல்லாம் பிரிக்க இயலாது. அவ்வாறு பிரித்தாலும் பொருள் தராது.


பகுபதம்: விளக்கம்:
ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்க முடிந்தால் அது பகுபதம் எனப்படும்.

பகுபத உறுப்புகள்


 பகுதி
 விகுதி
 இடைநிலை
 சந்தி
 சாரியை
 விகாரம்

(எ.கா) வந்தனன்

இது ஒரு பகுபதம். இந்தச் சொல்லை,

வா+த்(ந்)+த்+அன்+அன்

என்று பிரிக்கலாம். இந்தச் சொல்லில் ஆறு பிரிவுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர்கள் உள்ளன.

அவை முறையே,

வா - கட்டளைப் பகுதி
த் - சந்தி
த் (ந்) ஆனது விகாரம்
த்- இறந்தகால இடைநிலை
அன் - சாரியை
அன்- ஆண்பால் வினைமுற்று விகுதி.

இந்தப் பெயர்களைத் தான் பகுபத உறுப்புகள் என்று பொதுவாகக் கூறுகிறோம்.

இவ்வாறு வரும் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்னும் ஆறும் பகுபத உறுப்புகள் ஆகும்.

இவ்வாறு பகுதி விகுதிகளாக பிரிக்க கூடிய சொல்லைத்தான் நாம் பகுபதம் என்கிறோம்.

இனி பகுபத உறுப்புகளைப் பற்றிய விளக்கங்களைக் காணலாம்.

1. பகுதி விளக்கம்:

ஒரு பகுபதத்தின் முதலில் இருப்பது பகுதி எனப்படும். பகுபதத்தில் உள்ள பகுதி பொருள் உடையதாக இருக்கும்.

இது கட்டளைச் சொல்லாக இருக்கும். எடுத்துக்காட்டு- வா, படி, நட, வரை, செய், உண்..... போன்றவாறு அமைந்திருக்கும்.

ஒரு சொல்லில் முதலில் உள்ள பகுதியை நாம் பகுபத உறுப்பிலக்கணத்திற்கேற்ப கட்டளைச் சொல்லாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
எ.டு: வந்தனன் என்று ஒரு சொல் இதில் உள்ள ‘வ’ என்ற குற்றெழுத்தை ‘வா’ என்ற நெட்டெழுத்தாக மாற்றினால் அது கட்டளைப் பகுதியாக மாறிவிடும்.

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் வா என்பது பகுதி ஆகும். வா என்னும் பகுதிக்கு வா என்று அழைக்கும் பொருள் இருக்கிறது. எனவே இது பகுதி ஆகும்.
பகுதி காலம் காட்டுதல் (அதாவது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் காட்டுதல்:
இடைநிலை இடம்பெறாத நிலையில், பகுதியானது தனித்துநின்றோ, விகுதியுடன் சேர்ந்த நிலையில் இரட்டித்து நின்றோ காலம் காட்டும்.
• தனித்து நின்று காலம் காட்டல்
முன்னிலை விகுதியுடன் பொருந்தி,(சேர்ந்து) எதிர்காலப் பொருளுடையதாக வரும் பகுதி, சில இடங்களில் அவ்விகுதி குறைந்து, தனித்துநின்று அதே பொருள் தருவது உண்டு.
(எ.கா) உண்ணாய் - உண்
நடவாய் - நட
இப்பகுதிகள் தனித்துநின்ற போதிலும், முன்னிலை விகுதி குறைந்தனவாய், எதிர்காலம் காட்டுவனவாகவே கருதப்படும். முன்னிலை ஒருமை ஏவலாக வரும் வினைப்பகுதிகளே இவ்வாறு எதிர்காலம் காட்டும்.
• இரட்டித்து நின்று காலம் காட்டல்
இடைநிலை இல்லாது பகுதியின் ஒற்று (மெய்) இரட்டித்து இறந்தகாலம் காட்டுவது உண்டு.
தனிக்குறிலை அடுத்து கு, டு, று என்னும் மூன்று உயிர்மெய்யும் வரும் வினைப் பகுதி சில ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டும்.
(எ.கா) புகு - புக்கான்
தொடு - தொட்டான்
பெறு - பெற்றான்


2. விகுதி விளக்கம்:

பகுபதத்தில் இறுதியில் இருக்கும் உறுப்பு விகுதி எனப்படும். விகுதி என்றால் இறுதி என்று பொருள்.

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் இறுதியில் உள்ள அன் விகுதி ஆகும்.

விகுதி காலம் காட்டுதல்
தன்மை ஒருமை, தன்மைப் பன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களில் இடம்பெறும் சில விகுதிகள் காலம் காட்டுவனவாகும். வியங்கோள் விகுதிகளும், செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதியும் காலம் காட்டும் இயல்புடையனவாகும்.
(1) தன்மை ஒருமை விகுதி
கு, டு, து, று என்னும் தன்மை ஒருமை விகுதிகள் காலம் காட்டும்.
‘கு’ எதிர்காலம் காட்டும். ‘டு’ இறந்த காலம் காட்டும். ‘து’, ‘று’ ஆகியன இறந்தகாலம், எதிர்காலம் ஆகிய இரண்டையும் காட்டுவனவாகும்.
(எ.கா)
கு - உண்கு யான் (உண்பேன்) - எதிர்காலம்
டு - உண்டு யான் (உண்டேன்) - இறந்தகாலம்
து - வந்து யான் (வந்தேன்) - இறந்தகாலம்
- வருது யான் (வருவேன்) - எதிர்காலம்
று - சென்று யான் (சென்றேன்) - இறந்தகாலம்
- சேறு யான் (செல்வேன்) - எதிர்காலம்
காலம் காட்டும் இவ்விகுதிகள், இன்றைய வழக்கில் இல்லை.
(2) தன்மைப் பன்மை விகுதி
கும், டும், தும், றும் எனும் தன்மைப் பன்மை விகுதிகள் காலம் காட்டும்.
‘கும்’ எதிர்காலம் காட்டும், ‘டும்’ இறந்த காலம் காட்டும். ‘தும்’, ‘றும்’ என்பன இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் காட்டுவனவாகும்.
(எ.கா)
கும் - உண்கும் யாம் (உண்போம்) - எதிர்காலம்
டும் - உண்டும் யாம் ( உண்டோம்) - இறந்தகாலம்
தும் - வந்தும் யாம் ( வந்தோம்) - இறந்தகாலம்
- வருதும் யாம் (வருவோம்) - எதிர்காலம்
றும் - சென்றும் யாம் (சென்றோம்) - இறந்த காலம்
- சேறும் யாம் (செல்வோம்) - எதிர்காலம்
இந்த நான்கு விகுதிகளும் இன்றைய வழக்கில் இல்லை.
(3) முன்னிலை விகுதி
முன்னிலை ஒருமையில் இடம்பெறும் இகர விகுதியும், பன்மையில் இடம்பெறும் மின் விகுதியும் எதிர்காலம் காட்டி நிற்பனவாகும்.
(எ.கா)
இ - சேறி (செல்வாய்) - செல்+தி-சேல்+தி-சேறி.
மின் - காண்மின் (காணுங்கள்)
இவை மட்டுமின்றி, ‘ஆய்’ என்னும் ஒருமை விகுதியும், ‘உம்’ என்னும் பன்மை விகுதியும் எதிர்காலம் உணர்த்துவனவாகும்.
(எ.கா) ஆய் - வாராய் (வருவாயாக)
உம் - வாரும் (வாருங்கள்)
(4) வியங்கோள் விகுதி
க, இய, இயர் என்னும் வியங்கோள் விகுதிகள் எதிர்காலம் காட்டிவரும்.
(எ.கா) க - வாழ்க தமிழ்
இய - வாழிய தமிழ்
இயர் - வாழியர் தமிழர்
(5) படர்க்கை விகுதி
‘ப‘ என்னும் உயர்திணைப் படர்க்கைப் பலர்பால் விகுதி இறந்த காலமும் எதிர்காலமும் காட்டுவதாகும். ‘மார்’விகுதி எதிர்காலம் காட்டும்.
(எ.கா) ப உண்ப (உண்டார்) - இறந்தகாலம்
என்ப (என்பார்) - எதிர்காலம்
மார் - உண்மார் (உண்பார்) எதிர்காலம்
விகுதிகளின் எண்ணிக்கை
நன்னூல் ‘அன்’ என்று தொடங்கி, ‘உம்’ என்று முடியும் 37 விகுதிகளைத் தொகுத்துக் கூறுகின்றது. அவை,
அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார்
அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அன்
அம், ஆம், எம், ஏம், ஓம்
கும், டும், தும், றும்
ஐ, ஆய், இ, மின், இர், ஈர், ஈயர்,
க, ய, உம் - என்பனவாம்.
இந்த விகுதிகளை நன்னூல் நூற்பா (140) தொகுத்துக் கூறுகிறது. இவற்றுள் கு, டு, து, று என்னும் நான்கும் தன்மை ஒருமை விகுதிகள். இவற்றுக்குள் து, று, டு என்னும் அஃறிணை ஒன்றன்பால் விகுதிகளும் அடங்கியுள்ளன. ஆகவே விகுதிகளின் மொத்த எண்ணிக்கை 40 ஆகும்.

• விகுதிகளின் வகைகள்
விகுதிகளின் எண்ணிக்கையை 40 என்று நன்னூல் தொகுத்துத் தந்துள்ள போதிலும் அவற்றை முதல்நிலையில் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
(1)
தெரிநிலை வினைமுற்று விகுதிகள்
காலத்தை வெளிப்படையாகக்காட்டும் வினைமுற்றுகள் தெரிநிலை வினை முற்றுகள் என்பதை முன்னரே அறிந்துள்ளீர்கள். இவ்வகையில் தெரிநிலை வினைமுற்றுகளுக்கு விகுதியாய் வருபவை தெரிநிலை வினைமுற்று விகுதிகள் ஆகும். இத்தெரிநிலை வினைமுற்று விகுதிகள் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூவிடங்களிலும் வருவன.
படர்க்கை வினைமுற்று விகுதிகள்:
நடந்தனன், நடந்தான்
- அன் - ஆன்
- ஆண்பால்

நடந்தனள், நடந்தாள்
- அள், ஆள்
- பெண்பால்

நடந்தனர், நடந்தார் நடப்ப, நடமார்
- அர், ஆர், - ப, மார்
- பலர்பால்

நடந்தன, நடவா
- அ, ஆ
- பலவின்பால்

குறுந்தாட்டு, நடந்தது, போயிற்று
- டு, து, று
- ஒன்றன்பால்
(குறுந்தாட்டு = குறுகிய தாள்களை உடையது.)
II. தன்மை வினைமுற்று விகுதிகள்
தன்மை வினைகளைச் சுட்டும் வினைமுற்றுகளில் அமையும் விகுதிகளைத் தன்மை வினைமுற்று விகுதிகள் என்கிறோம்.
முதலில் தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகளைக் காண்போம்.
கு, டு, து, று. என்னும் விகுதிகள்:
யான்
நடக்கு (நடப்பேன்) உண்டு (உண்டேன்) நடந்து (நடந்தேன்) சேறு (செல்வேன்)
இவை இன்று வழக்கில் இல்லை. இவற்றோடு என், ஏன், அல், அன் என்பனவும் தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் ஆகும்.
யான்
நடந்தனென், நடந்தேன் - என், ஏன்
நடப்பல், நடப்பன் - அல், அன்
நடப்பல் என்பது நடப்பேன் என்று பொருள்படும்.
தன்மைப் பன்மை வினை முற்று விகுதிகள்:
அம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், தும், றும் ஆகியவை தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் ஆகும்
யாம்
நடப்பம் - நடப்பாம் - அம், ஆம் நடப்பெம் - நடப்பேம் - எம், ஏம் நடப்போம், - ஓம்
யாம்
நடக்கும், உண்டும், நடந்தும், சேறும் - கும், டும், தும், றும்.
III. முன்னிலை வினைமுற்று விகுதிகள்
1. முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள்:
நடந்தனை, நடந்தாய், நடத்தி - ஐ, ஆய், இ முன்னிலை ஒருமை விகுதிகள்
(நடத்தி என்பது நடப்பாய் என்று பொருள்படும்.)
2. முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள்:
நடமின்
- மின்
நடந்தனிர்
- இர்
நடந்தீர்
- ஈர்
3. முன்னிலைப் பன்மை விகுதிகள்
இவற்றோடு வியங்கோள் வினைமுற்று விகுதிகளையும் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதியையும் சேர்த்துக் காண்பது பொருத்தமாகும்.
வியங்கோள் வினைமுற்று விகுதிகள்:
நிலீயர்
- ஈயர்
நிற்க
- க
வாழிய
- ய
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதி, ‘உம்’ என்பதாம்.
அவன் நடக்கும்
- உம்
குறிப்பு வினைமுற்று விகுதிகள்
வினைமுற்று விகுதிகளில் அடுத்ததாக வருபவை குறிப்பு வினைமுற்று விகுதிகள் ஆகும். இவை குறிப்பாகக் காலங்காட்டுவன என்பதால், மேலே கண்ட விகுதிகளுள், காலம் காட்டும் விகுதிகளைத் தவிர மற்ற விகுதிகளான, அன், ஆன், அள், ஆள், அர், ஆர், அ, டு, து, று, என், ஏம், அம், ஆம், எம், ஏம், ஓம், ஐ, ஆய், இ, இர், ஈர் என்னும் 22 விகுதிகளோடு அந்தக் குறிப்பு வினைமுற்றுகள் வரும். இவற்றிற்கான எடுத்துக் காட்டுகளைக் கீழே காண்போம்.
கரியன், கரியான் கரியள், கரியாள் கரியர், கரியார் கரியன கருந்தாட்டு, கரிது, குழையிற்று
- அன், ஆன் - அள், ஆள் - அர், ஆர் - அ - டு, து, று
படர்க்கை
கரியென், கரியேன் கரியம், கரியாம் கரியெம், கரியேம் கரியோம்
- என், ஏன் - அம், ஆம் - எம், ஏம் - ஓம்
தன்மை
கரியை, கரியாய் வில்லி கரியிர், கரியீர்
- ஐ, ஆய் - இ - இர், ஈர்
முன்னிலை
இதுவரையில் வினைமுற்று விகுதிகளைக் கண்டோம். இனிப் பெயர் விகுதிகளைக் காண்போம்.
எச்சவினை விகுதிகள்
எச்சவினை விகுதிகளையும் இங்குக் காண்போம்.
தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள்:
நடந்த, நடக்கின்ற, நடவாத, நடக்கும் - இவற்றுள் அ, உம் விகுதிகள்.
குறிப்புப் பெயரெச்ச விகுதிகள்:
சிறிய
- அ
பெரிய
- அ
தெரிநிலை வினையெச்ச விகுதிகள்:
தெரிநிலை வினையெச்ச விகுதிகள் பின்வருமாறு.
உ, இ, ய், பு, ஆ, ஊ, என, ஏ, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, கண், வழி, இடத்து, உம், மல், மை, மே, து முதலியன. இவற்றில் மல், மை, மே, து என்ற நான்கும் எதிர்மறைப் பொருளிலும் வருவன.
இனி இவற்றில் சிலவற்றிற்கு எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.
நடந்து, சென்று

ஓடி, நாடி

போய்
ய்
உண்ணா

உண்ண, ஆட

உண்டால், பார்த்தால்
ஆல்
உண்ணாமல், உண்ணாமை
மல், மை
உண்ணாமே, உண்ணாது
மே, து
இனி, குறிப்பு வினையெச்ச விகுதிகளைக் காண்போம்.
குறிப்பு வினையெச்ச விகுதிகள் பின்வருமாறு :
அ, றி, து, ஆல், மல், கால், கடை, வழி, இடத்து என்னும் 9 விகுதிகள்.
இவற்றில் சிலவற்றிற்கு எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.
மெல்ல - அ
அன்றி - றி
அல்லது - து
அல்லால் - ஆல்
என வருவன.
பெயர் விகுதிகள்
பெயர்ப்பகுபத விகுதிகளையும் நன்னூல் நூற்பா சுட்டிக் காட்டுகின்றது. அவை,
அன், ஆன், அள், ஆள், அர், ஆர், மார், து, அ, இ
என்பவை. இவற்றிற்கு எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.
சிறியன், சிறியான்
- அன், ஆன்
சிறியள், வானத்தாள்
- அள், ஆள்
குழையர், வானத்தார் தேவிமார்
- அர், ஆர், மார்
சிறியது, சிறியன, பொன்னி - து, அ, இ
இவற்றோடு, மன், மான், கள், வை, தை, கை, பி, முன், அல், ன், ள், ர், வ் என்னும் 13 விகுதிகளும் பெயர் விகுதிகளாம்.
வடமான், கோமான், கோக்கள்
- மன், மான், கள்
அவை, இவை
- வை.
எந்தை, எங்கை,
- தை, கை
எம்பி, எம்முன், தோன்றல்
- பி, முன், அல்
பிறன், பிறள், பிறர், அவ்
- ன், ள், ர், வ்
தொழிற்பெயர் விகுதிகள்
பெயர்ப் பகுபதங்களில் தொழிற்பெயர்களும் அடங்கும். எனவே தொழிற்பெயர் விகுதிகளையும் இங்குச் சேர்த்துக் காண்போம்.
தொழிற்பெயர் விகுதிகள் பின்வருமாறு:
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து, என்னும் 19 விகுதிகள். இனி இவற்றில் சிலவற்றிற்கான எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.
நடத்தல் - தல்; ஆடல் - அல்; வாட்டம் - அம்; கொலை - ஐ; பார்வை - வை; போக்கு - கு; நடப்பு - பு; நடவாமை - மை.
பண்புப் பெயர் விகுதிகள்:
பண்புப் பெயர்களுக்கு அமைந்த விகுதிகள் பத்து. அவை,
மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், ஆர் என்பன. இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
நன்மை - மை
தொல்லை - ஐ
மாட்சி - சி
மாண்பு - பு
மழவு - வு
நன்கு - கு
நன்றி - றி
நன்று - று
நலம் - அம்
நன்னர் - அர்
பிறவினை விகுதிகள்
பிறவினை விதிகளை முன்பே அறிந்துள்ளீர்கள். அவை, வி, பி, கு, சு, டு, து, பு, று என்பனவாம்.
இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
செய்வி - வி
நடப்பி - பி
போக்கு - கு
பாய்ச்சு - சு
உருட்டு - டு
நடத்து - து
எழுப்பு- பு
துயிற்று - று
என்பன.
விகுதிகள் புணர்ந்து(சேர்ந்து) கெடுதல்
சில விகுதிகள் புணர்ந்து கெடுகின்றன. எனவே வழக்கில் அச் சொல்லில் அவ்விகுதிகள் வெளிப்படுவதில்லை.புணர்ந்து கெட்ட விகுதிகளுக்கு எடுத்துக்காட்டுகள்:.
ஆய் விகுதி புணர்ந்த சொல்:
நீ நட; நீ நடப்பி; நீ செல் - இவற்றில் ஆய்விகுதி புணர்ந்து கெட்டது. ‘நீ நடப்பாய்’ எனவராமல் 'நீ நட' என்று வருதலே மரபாயிற்று.
பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெடல்:
கொல்களிறு, ஓடாக்குதிரை இவற்றில் பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெட்டன. இவற்றில் கொன்ற-அ; ஓடாத-அ எனும் விகுதிகள் கெட்டன.
தல் என்னும் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெடல்:
அடி, கேடு, - இவற்றில் தல் என்னும் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெட்டது. அடித்தல், கெடுதல், என்பவை விகுதி கெட்டு அடி, கேடு என வந்துள்ளன.
---------------------------------------------------------------------------------------------------------------------------

3. இடைநிலை விளக்கம்:

பகுபதத்தில் இடையில் இருக்கும் உறுப்பு இடைநிலை எனப்படும்.

வா+த்(ந்)+த்+அன்+அன்
இதில் இடையில் இருக்கும் உறுப்பாகிய த் இடைநிலை ஆகும்.
இடைநிலைகள் வகைகள்
பகுதி, விகுதிகளைப் போலவே இடைநிலைகளையும் இரு பிரிவுகளாகப் பிரித்துக் காணலாம்.
(1)பெயர் இடைநிலை
(2)வினை இடைநிலை
பெயர் இடைநிலைகள்
வினையாலணையும் பெயர் அல்லாத பிற பெயர்களுக்கு இடையில் நிற்கும் இடைநிலைகள் பெயர் இடைநிலைகள் எனப்படும்.
பெயர் இடைநிலைகளாக ஞ், ச், ந், த் என்னும் எழுத்துகள் அமைகின்றன.
அறிஞன், இளைஞன், கவிஞன்
- ‘ஞ்’ இடைநிலை
வலைச்சி, இடைச்சி, புலைச்சி
- ‘ச்’ இடைநிலை
செய்குநன், பொருநன்
- ‘ந்’ இடைநிலை
வண்ணாத்தி, பாணத்தி
- ‘த்’ இடைநிலை
வினை இடைநிலைகள்
வினைப் பகுபதத்தில் காலம் காட்டும் இடைநிலைகளை வினை இடைநிலைகள் என்பர். இந்த இடைநிலைகள் உணர்த்தும் காலத்தைக் கருத்தில் கொண்டு அவற்றை மூன்றாகப் பிரிக்கலாம் அவை,
(1)இறந்தகால இடைநிலைகள்
(2)நிகழ்கால இடைநிலைகள்
(3)எதிர்கால இடைநிலைகள்
என்பன.
• இறந்தகால இடைநிலைகள்
த், ட், ற் என்னும் மெய்களும், இன் என்பதும் ஐம்பால் மூவிடங்களிலும் இறந்த காலத்தைத் தருகின்ற வினைப் பகுபதங்களுடைய இடைநிலைகளாகும். இதனை, நன்னூல்,
“தடற ஒற்று, இன்னே ஐம்பால் மூவிடத்து
இறந்த காலம் தரும் தொழில் இடைநிலை” நன்னூல் (142)
என்று விளக்குகின்றது.
இதற்கான எடுத்துக்காட்டைப் பின்வருமாறு காண்போம்.
நடந்தான், பார்த்தான்
- ‘த்’ இடைநிலை
கொண்டான், விண்டது
- ‘ட்’ இடைநிலை
நின்றான், தின்றான்
- ‘ற்’ இடைநிலை
ஒழுகினான், வழங்கினான்
- ‘இன்’ இடைநிலை
‘இன்’ என்னும் இடைநிலை மட்டும் சில இடங்களில் இறுதி மெய் ‘ன்‘ கெட்டு ‘இ’ மட்டும் தனித்து வரும். சில இடங்களில் ‘இ’ கெட்டு ன் மட்டும் வரும்.
எடுத்துக்காட்டு:
எஞ்சியது
- எஞ்சு+இ(ன்)ய்+அ+து இதில் ‘ன்’ கெட்டு ‘இ’ வந்தது.
போனது
- போ(இ)ன்+அ+து. இதில் ‘இ’ கெட்டு ‘ன்’ மட்டும் உள்ளது.
• நிகழ்கால இடைநிலைகள்
வினைப் பகுபதத்தில் நிகழ்காலத்தைக் காட்டும் இடைநிலைகளாக ஆநின்று, கின்று கிறு என்ற மூன்றினை நன்னூல் விளக்குகின்றது.
“‘ஆநின்று கின்று, கிறு மூவிடத்தின்
ஐம்பால் நிகழ்பொழுது அறைவினை இடைநிலை,” நன்னூல் (143)
செல்லாநின்றான், நடவாநின்றான்
- ஆநின்று
செல்கின்றான், நடக்கின்றான்
- கின்று
செல்கிறான், நடக்கிறான்
- கிறு
இதைப்போலவே இவ்வினை இடைநிலைகளை மற்ற பால், இடம் ஆகியவற்றிலும் இணைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
• எதிர்கால இடைநிலைகள்
எதிர்காலத்தைக் காட்டும் இடைநிலைகள் எதிர்கால இடைநிலைகள் எனப்படும். இவை, ப், வ், என இரண்டு மெய்களாகும். இரண்டிற்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
நடப்பான், துறப்பான்
- ப்
வருவான், வருவாள்
- வ்
இடைநிலை காலம் காட்டுதல்
வினைமுற்றுச் சொல், பெரும்பாலும் இடைநிலையால் காலம் காட்டும் இயல்புடையதாகும்
வினைப்பகுதி, காலம் காட்டும் இடைநிலை, பால்காட்டும் விகுதி என்பதாக வினைமுற்றின் பகுபத உறுப்பிலக்கணம் அமையும்
(எ.கா) உண்டான் - உண்+ட்+ஆன்
உண் - வினைப்பகுதி
ட் - காலம் காட்டும் இடைநிலை
ஆன் - படர்க்கை உயர்திணை ஆண்பால் வினைமுற்று விகுதி
காலம் காட்டும் இடைநிலை, இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவானதாக அமையும்.
தன்மை ஒருமை - உண்டேன்
தன்மைப் பன்மை - உண்டோம்
முன்னிலை ஒருமை - உண்டாய்
முன்னிலைப் பன்மை - உண்டீர்
படர்க்கை ஆண்பால் - உண்டான்
படர்க்கைப் பெண்பால் - உண்டாள்
படர்க்கைப் பலர்பால் - உண்டார்
படர்க்கை ஒன்றன்பால் - உண்டது
படர்க்கைப் பலவின்பால் - உண்டன
என வந்தனவற்றுள் 'ட்' இடைநிலை இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாக வந்துள்ளதைக் காண்க.

4. சந்தி விளக்கம்:
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது சந்தி எனப்படும்.
வா+த்(ந்)+த்+அன்+அன்
இதில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் உள்ள த்(ந்) சந்தி ஆகும்.
சந்தி இலக்கணம்
தமிழில் எழுத்திலக்கணத்தில் முக்கியப் பகுதியாகவும் பெரிய பகுதியாகவும் இருப்பது சந்தி இலக்கணம் ஆகும். சந்தி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய இலக்கணம் ஆகும். இலக்கண நூல்களை இயற்றிய ஆசிரியர்கள் சந்தி இலக்கணத்தைப் புணர்ச்சி இலக்கணம் என்று கூறுவர்.
எடுத்துக்காட்டாக
ஓடி + போனான் = ஓடிப்போனான்
என்று வரும்.
இங்கு இரண்டு சொற்கள் சேரும்போது, இரண்டுக்கும் இடையில் ப் என்ற மெய் எழுத்துத் தோன்றி இருக்கிறது. இவ்வாறு இரண்டு சொற்கள் சேரும்போது பல வகையான மாற்றங்கள் ஏற்படும்.
சந்தி வகைகள்
இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்கள் நான்கு வகைகளில் அமையும்.
1.கதவு + மூடியது = கதவுமூடியது - இயல்பாக இருக்கிறது.
2.மாலை + பொழுது = மாலைப்பொழுது - ஒரு மெய்எழுத்துத் தோன்றியது.
3.மரம் + நிழல் = மரநிழல் - ஓர் எழுத்துக் கெட்டது (அழிந்தது).
4.கல் + சிலை = கற்சிலை - ல் என்ற எழுத்து ற் என்ற எழுத்தாகத் திரிந்தது (மாறியது).
------------------------------------------
5. சாரியை விளக்கம்:
பகுபதத்தில் இடைநிலைக்கும், விகுதிக்கும் இடையில் வருவது சாரியை எனப்படும்.
வா+த்(ந்)+த்+அன்+அன்
இதில் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் இருக்கும் அன் என்பது சாரியை ஆகும்.
சாரியைகள்
இங்கு இடைச்சொல் வரிசையில் மூன்றாவதாக உள்ள
சாரியைகள் பற்றிக் காண்போம். பகுபத உறுப்புகள் ஆறனுள்
சாரியையும் ஒன்று என்பதை ஏற்கெனவே படித்துள்ளீர்கள்.
சார் + இயை = சாரியை, அதாவது சார்ந்து வருவது சாரியை
ஆகும். இஃது ஒரு வினைச் சொல்லில் இடைநிலைக்குப்
பின்னரும் விகுதிக்கு முன்னரும் வரும். சாரியைக்கு என்று
தனிப்பட்ட பொருள் எதுவும் இல்லை.
ஒரு பதத்தின் (சொல்லின்) முன்னர் விகுதியோ, பதமோ
(சொல்லோ) வேறொரு உருபோ, புணருமிடத்து (சேரும்
போது) ஒரு சாரியை அல்லது பல சாரியைகள் வருதல்
உண்டு. வாராதிருத்தலும் உண்டு.
எடுத்துக்காட்டு
விகுதிப்புணர்ச்சியில் ‘அன்’ சாரியை
நடந்தனன் = நட + த்(ந்) + த் + அன் + அன்
நட
பகுதி
அன் சாரியை
பெற்று வந்தது
த்
சந்தி
(ந்)
-
விகாரம்
த்
இறந்த கால இடைநிலை
அன்
சாரியை
அன்
விகுதி
நடந்தான் = நட + த் (ந்) + த்+ ஆன்
நட
பகுதி
அன் சாரியை
பெறாது வந்தது
த்(ந்)
சந்தி
த்
இறந்த கால இடைநிலை
ஆன்
விகுதி
பதப்புணர்ச்சியில் சாரியை
ஒரு சொல்லுடன் மற்றொரு சொல் இணைவது பதப்புணர்ச்சி எனப்படும்.
புளி+காய்=புளியங்காய்
அம் சாரியை
நெல்+குப்பை=நெல்லின் குப்பை
-இன் சாரியை
புளி+கறி=புளிக்கறி
சாரியை பெறாது
வந்தவை
நெல்+குப்பை=நெல் குப்பை
உருபு புணர்ச்சியில் சாரியை
ஒரு சொல்லுடன் ஒரு வேற்றுமை உருபு இணைவது உருபு
புணர்ச்சி எனப்படும்.
அவ்+ஐ
-
அவற்றை
(அவ்+அற்று+ஐ)
-
அற்றுச் சாரியை
பெற்று வந்தது.
தன்+ஐ
-
தன்னை
-
சாரியை பெறாது
வந்தது

ஆவினுக்கு -
ஆ+இன்+உ+கு
இன், உ, அத்து
ஆகிய பல
சாரியைகள்
வந்தன.
மரத்தினுக்கு -
மரம்+அத்து+இன்+கு
இவ்வாறு சொற்கள் புணரும் போது சாரியைகள் இடையில் தோன்றுவதைக் கண்டீர்கள்.
• சாரியை வகைகள்
சாரியைகள் இரண்டு வகைப்படும் என்பர்.
1) பொதுச் சாரியைகள்
2) எழுத்துச் சாரியைகள்
பொதுச் சாரியைகள்
ஒரு பதம் விகுதியுடன் புணரும்போதோ, ஒருபதம் மற்றொரு பதத்துடன் புணரும்போதோ, ஒருபதம் வேற்றுமை உருபுடன் புணரும்போதோ இடையே சாரியைகள் தோன்றும். அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன் ஆகிய பதினேழும் பொதுச் சாரியைகள் என்று (நன்னூல் நூ.243) குறிப்பிடுகின்றது. அச்சூத்திரத்தில் ‘பிற’ என்று சொல்லப்பட்டிருப்பதைக் கொண்டு தன், தான், தாம், ஆம், ஆ, து என்பனவும் பொதுச் சாரியைகளாகக் காட்டப்படுகின்றன.
எடுத்துக்காட்டு
மேலே குறித்தவற்றுள் அற்று, இற்று, அத்து போன்றவை இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன.
வந்தனன்
வா+த்+(ந்)+த்+அன்+அன்
‘அன்’
விகுதிப்புணர்ச்சியில்
வந்தது
பதிற்றுப்பத்து
பத்து + இற்று + பத்து
இற்று
பதப்புணர்ச்சியில்
வந்தது
பலவற்றை
பல + அற்று + ஐ
அற்று - சாரியை
வேற்றுமைப்
புணர்ச்சியில் வந்தது
தம், தான், ஆம், ன் ஆகிய சாரியைகள் எவ்வாறு
சொற்களில் இணைந்து வருகின்றன என்பதைக் காணலாம்.
எல்லார்தம்மையும் - தம் - சாரியை
அவன்தான் - தான் - சாரியை
புற்று + சோறு - புற்றாஞ்சோறு - ஆம் - சாரியை
ஆன் (பசு) - ன் - சாரியை

இவ்வாறு சாரியைகள் சொல்லுக்கு இடையிலும் சில
இடங்களில் சொல்லுக்கு இறுதியிலும் சார்ந்து நின்று
வருவதால் இவை பொதுச் சாரியைகள் என்றாயின.
எழுத்துச் சாரியை
உயிர், மெய் முதலான எழுத்துக்களைச் சுட்டும்போது அந்த
எழுத்துக்களோடு சில சாரியைகளைச் சேர்த்துச் சொல்லுதல்
இலக்கண மரபு.
'அ' என்ற எழுத்தை அகரம் என்று சொல்லுதல்
'ஆ' என்ற எழுத்தை ஆகாரம் என்று சொல்லுதல்
அ, ஆ என்ற எழுத்துக்களைச் சுட்ட கரம், காரம் என்ற
இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டன. அல்லவா? அந்த
இரண்டு சொற்களும் (கரம், காரம்) சாரியைகள் ஆகும். இவை
எழுத்தைச் சுட்ட வந்ததால் எழுத்துச் சாரியை என்பர்.
ஏனைய எழுத்துகளைச் சுட்டி உரைக்க வரும் சாரியைகளைக்
கீழே காணலாம்.
எழுத்துக்கள்
சாரியை
பெயர்
குறில் எழுத்துகள்
அ, இ, உ
கரம்
அகரம், இகரம்,
உகரம்...
நெடில் எழுத்துகள்
ஆ, ஈ, ஊ
காரம்
ஆகாரம், ஈகாரம்,
ஊகாரம்
ஐ, ஓள
காரம்/கான்
ஐகாரம் ஔகாரம்
ஐகான் ஔகான்
மெய் எழுத்துகள்

க,ச,ட,த,ப,ற
ஆய்தம்
கான்/கேனம்
அஃகான் அஃகேனம்
உயிர்மெய்யெழுத்துகள்
கரம்
ககரம், சகரம்,
ஞகரம்....
மெய் எழுத்தைக் ‘க’ எனக் குறிப்பிடுவதோடு ககரம் எனவும்
குறிப்பிடலாம். அவ்வாறு குறிப்பிடும் போது ‘அ‘ 'கரம்' என
இருசாரியைகள் சேர்ந்து வருகின்றன எனப் புரிந்து கொள்ள
வேண்டும்.
இவ்வாறு எழுத்துகளைச் சுட்டுவதற்குப் பயன்படும் கரம்,
காரம், கான், கேனம் ஆகியவை சாரியைகள் என்று
அழைக்கப்படுகின்றன. எழுத்துகளுள் உயிர்மெய் நெடில்கள்
சாரியை சேர்த்து வழங்கப்படுவதில்லை என்பதை அறியவும்.

6. விகாரம் விளக்கம்:

பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாறுதல்கள் விகாரம் எனப்படும். விகாரம் என்றால் மாறுபாடு என்று பொருள்.
வா+த்(ந்)+த்+அன்+அன்
இதில் சந்தியாக இடம் பெற்றுள்ள த் என்னும் எழுத்து ந் ஆக மாறியுள்ளது. பகுதியாக இடம் பெற்றுள்ள வா என்னும் எழுத்து ‘வ’ என்று மாறியுள்ளது. இவ்வாறு மாறுபட்டு வருவது விகாரம் எனப்படும்.
------------------------------
இனி தேர்வில் கேட்கப்படும் வினாக்களும் அவற்றை எழுதும் முறைகளும் பின்வருமாறு:
1. முதலில் இறந்தகாலத்திற்கான சில எடுத்துக்காட்டுகளையும் எழுதும் முறையையும் காணலாம்.
எடுத்துக்காட்டு: 1
உண்டான் இதனை பிரிக்கும் முறை உண் + ட் +ஆன்(இதில் ட்+ ஆ என்பது ‘டா’ என்ற எழுத்தின் பிரிந்த நிலை.
தேர்வில் எழுதும் முறை
உண் + ட்+ ஆன்
உண் - பகுதி
ட் - இறந்தகால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
எடுத்துக்காட்டு :2
சென்றான் செல்(ன்)+ ற் +ஆன்
(நான் முன்பே கூறியுள்ளேன். பகுதி எப்பொழுதும் கட்டளைச் சொல்லாகத் தான் வரவேண்டும் என்று.
(எ.டு) நட, படி, எழுது, பாடு, வரை…. என்று வரவேண்டும்)
அந்த அடிப்படையில் சென் என்று பகுதி வராது. எனவே செல் என்று மாற்ற வேண்டும். அந்த (ன்) என்ற எழுத்தை அடைப்புக்குறிக்குள் காட்ட வேண்டும்.
அதாவது செல்(ன்) +ற் +ஆன் என்று எழுத வேண்டும் இதில் ற் +ஆ என்பன ‘றா’ என்ற எழுத்தின் பிரிந்த நிலை ஆகும்.
தேர்வில் எழுதும் முறை:
செல் - கட்டளைப் பகுதி
ற் - இறந்த கால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
ல் - ன் ஆனது விகாரம் என்று எழுத வேண்டும்.
என்ன மாணவர்களே சுலபமாக உள்ளதா? சரி தொடர்வோம்.
பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுகள்
பாடினான், வரைந்தான், எழுந்தான், உழுதான், நடந்தான், அழைத்தான், வந்தான்
2. நிகழ்காலத்திற்கு சிலசான்றுகள்
எடுத்துக்காட்டு 1.
படிக்கிறான். இதனை, படி+ க் +கிறு +ஆன் என்று பிரிக்க வேண்டும்.
இதில் கிறு +ஆன் என்பதை கவனியுங்கள் கிறு என்பதில் இறுதியில் உள்ள எழுத்து ‘று’ என்பதாகும் அதனைப் பிரித்தால் ற்+ உ என்று பிரியும் வருமொழியில் ஆன் என்று வந்துள்ளதல்லவா?
நாம் என்ன செய்ய வேண்டும் கடந்த பதிவுகளில்(புணர்ச்சி இலக்கணத்தில் பார்த்தததைப் போல்) “உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற அடிப்படையில் உ என்ற எழுத்து மறைந்துவிடும். பின்னர் கிற் என்று இருக்குமல்லவா? அந்த கிற் என்ற எழுத்துடன் ஆன் என்ற எழுத்து சேர்ந்து அதாவது ‘ற் +ஆ = றா’ என்று மாற்றம் பெற்று படிக்கிறான் என்று மாறியது.
தேர்வில் எழுதும் முறை:
படி - கட்டளைப் பகுதி
க் - சந்தி
கிறு - நிகழ்கால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
அடுத்து,
எடுத்துக்காட்டு 2
நடக்கின்றான். இதனை, நட+ க் +கின்று +ஆன் என்று பிரிக்க வேண்டும். (இதுவும் மேற்கூறிய கிறு என்ற அடிப்படையில் தான் மாறியுள்ளது என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.)
தேர்வில் எழுதும் முறை:
நட - கட்டளைப் பகுதி
க் - சந்தி
கின்று - நிகழ்கால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.
எடுத்துக்காட்டு 3
பாடாநின்றாள்: இதனைப் பாடு +ஆநின்று +ஆள் என்று பிரிக்க வேண்டும்
இதில் ஒவ்வொன்றும் குற்றியலுகரப் புணர்ச்சி அடிப்படையில் மாற்றம் பெறும். எவ்வாறெனின்,
விளக்கம்:
 முதலில் பாடு +ஆநின்று என்பதனைக் காணலாம்.
 இதில் நிலைமொழி பாடு என்பது. வருமொழி ஆநின்று என்பது.
 நிலைமொழி ஈற்று டு என்ற எழுத்தைப் பிரித்தால் ட்+ உ என்று பிரியும். இதில் உ என்ற இறுதி எழுத்து உயிர் எழுத்தாகும்.
 அதைப் போலவே வருமொழி ஆநின்று என்பதில் ஆ என்பது உயிர் எழுத்தாகும். இந்த இரண்டு உயிர் எழுத்துக்களும் சேராது. எனவே, “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற அடிப்படையில் ட் + உ என்பதில் உள்ள உ என்ற எழுத்து மறைந்து விடும். அவ்வாறு மறைந்த நிலையில், பாட் + ஆநின்று என்று இருக்குமல்லவா?
 இந்த ட் என்ற எழுத்துடன் ஆ என்ற எழுத்து இணைந்து( “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவதியல்பே”) பாடாநின்று + ஆள் என்று மாறும் அல்லவா? இதுவும் மேற்கூறிய விதிப்படியே மாற்றம் பெற்று, பாடாநின்றாள் என்று மாறியது.
தேர்வில் எழுதும் முறை:
பாடு- கட்டளைப் பகுதி
ஆநின்று - நிகழ்கால இடைநிலை
ஆள்- பெண்பால் வினைமுற்று விகுதி
இனி பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுகள்:
நடக்கிறான். வரைகிறான். உழுகிறான், நடவாநின்றான், செல்லாநின்றாள். தொழாநின்றாள். எழுதுகின்றான், கற்பிக்கின்றான்
சரிதானே மாணவர்களே!
இவற்றில் பயிற்சி பெறுவீர்கள் அல்லவா? ஐயம் இருப்பின் தொடர்பு கொள்ள என் கைப் பேசி எண்ணை மேலேத் தந்துள்ளேன் சரிதானே!
3. அடுத்து எதிர்காலத்திற்குச் சில சான்றுகள்:
எடுத்துக்காட்டு 1
வருவான்
இதனை வா +ர்+ உ+ வ் +ஆன் என்று பிரிக்க வேண்டும்
உங்களுக்குத் தான் தெரியுமே பகுதி கட்டளைச் சொல்லாக வரவேண்டும் என்று.
அதனால் தான் வா என்று மாற்றியுள்ளோம்.
சரி தேர்வில் எழுதும் முறையைப் பர்க்கலாமா?
வா - கட்டளைப் பகுதி
ர் - சந்தி
உ - சாரியை
வ் - எதிர்கால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி. சரிதானே!
எடுத்துக்காட்டு 2
காண்பாள்
இதனை காண் + ப் +ஆள் என்று பிரிக்க வேண்டும்
தேர்வில் எழுதும் முறை
காண் - கட்டளைப் பகுதி
ப் - எதிர்கால இடைநிலை
ஆள் - ஆண்பால் வினைமுற்று விகுதி
அடுத்து பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுகள்:
செல்வான், பார்ப்பாள், எழுவாள், தொழுவான், வரைவான், நடப்பான்
என்ன மாணவர்களே! சுலபமாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.
வெற்றிக்கனியை என்றும் இனிதாக எட்ட இப்பொழுதே என் பொன்னான வாழ்த்துக்கள்.
அடுத்து ஒரு புதிய படைப்பில் சந்திப்போம்
அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது
உங்கள் தமிழாசிரியை ஸ்ரீ.விஜயலஷ்மி. கோயம்புத்தூர் 22
பகுபத உறுப்பிலக்கணம் முற்றும்.
சுபம்
வாழ்க வளமுடன்
ஓங்குக தமிழன்னையின் புகழ்

எழுதியவர் : ஸ்ரீ.விஜயலஷ்மி (2-Feb-20, 8:40 pm)
பார்வை : 5802

மேலே