சிதம்பர தேவா
'சிதம்பர தேவா என்று நான்குதரம் வருதல் வேண்டும். அங்ஙனம் அமையுமாறு ஒரு வெண்பாக் கூறுக’ என்றார் ஒரு புலவர். கவிஞர் அரைநொடியிலே பாடி அவரைத் திகைக்கும்படி செய்கிறார்.
நேரிசை வெண்பா
அரக ரதிருச்சிற் றம்பலவா ணாவந்
தரரூ பமகே சசிதம் - பரதே
வசிதம் பரதே வசிதம் பரதே
வசிதம் பரதேவ னே. 18
– கவி காளமேகம்
பொருளுரை:
அரகரா! திருச்சிற்றம்பலம் உடைய பரமனே; ஆகாயமாம் திருமேனியினை உடையோனே! மகேஸ்வரனே! சிதாகாயத்து உள்ள பெருமானே! சிதம்பரதேவ! சிதம்பரதேவ! சிதம்பர தேவனே!
அரன் - சங்கரிப்பவன், மகேசன் - பெருஞ்செல்வத்தை உடையவன்; அழிவற்ற பெருநிதியாகிய சிவச்செல்வம் அது.
சிற்றம்பலம் - சிற்சபை சிதம்பரத்தே உள்ளது;
சிதம்பரம் சிற்றம்பலம் என்பதன் மரூஉ.