வரமாக மட்டும் வா மழையே
#வரமாக மட்டும் வா மழையே
சீறித்தான் பாய்கின்றாய் சிறுத்தைப் போலே
சிறுபாறை உருட்டுகிறாய்
சிரத்தின் மேலே..!
சுவர்க்கூரை இடிப்பதிலே
என்ன கண்டாய்
சுருட்டுகிறாய் பல்லுயிரை
யமனை வென்றாய்..!
ஆரிடத்தில் முறையிடுவோம்
உந்தன் கொடுமை
அதிகாரிக் கடவுளுக்குச்
செவியும் இல்லை..!
வருகைக்காய் வேண்டியது அந்தக் காலம்
வந்துசண்டி செய்கின்றாய் அழிவுக் கோலம்..!
வான்கழுத்தைப் பிடித்துத்தான் தள்ளி யதோ
வஞ்சிக்கும் கோபம் மண்ணில் கொள்ளு வதோ..!
பூசனைகள் போட்டோமே
வாரா திருந்தாய்
புஞ்சையெலாம் காய்ந்துமே
பாரா திருந்தாய்..!
பொங்கித்தான் வழிகின்றாய் பெரு வெள்ளமாய்
போய்த்தொலையென புலம்புகிறார் கண்ணில் வெள்ளமாய்..!
அழிக்காத அளவினிலே
அருளைக் காட்டு
அஞ்சுகிற மாந்தர்களின் கவலை ஓட்டு..!
வணங்குகிறோம் வான்மழையே கடவு ளாக்கி
வரம்மட்டும் தந்துசெல்
வறட்சியைப் போக்கி..!
#சொ.சாந்தி