களவு போன கனவுகள்

#களவு போன கனவுகள்..!

சாதிகள் இல்லாத சமுதாய மின்பம்
சமநிலை மனிதர்கள்
சமத்துவ மெங்கும்
பேதங்கள் வாதங்கள் எங்கிலு மில்லை
பெரியோரைப் போற்றிடும் வழக்கங்கள் முல்லை..!

தாழ்ந்தவர் உயர்ந்தவர் வேற்றுமை யறுத்தார்
சகோதர உறவுகள்
தானெங்கும் வளர்த்தார்
ஏழைக்கு உண்டிங்கு
ஏற்றமிகுக் கல்வி
இல்லையே என்பார்க்கும்
இருக்கிறது பள்ளி..!

சேவைகள் புரிந்திட மருத்துவப் படிப்பு
சிறுவாட்டுப் பணம்நோயில்
அழியாதக் களிப்பு
தேவைக்கு எல்லாமும்
கிடைத்திடும் நாளும்
தேயாத நலத்தாலே சிறப்போடு வாழ்வும்..!

கண்டபடி தேர்வுகள் மேல்படிப்புக் கில்லை
காசுபணம் பயிற்சிக்குக்
கரைவது மில்லை
உண்ணுதல் உறங்குதல்
உற்சாகங் கொண்டே
ஒவ்வொரு நாளிலும்
சொர்க்கமது கண்டே..!

கைக்கொடுத்துத் துயரங்கள்
கட்டோட றுத்தார்
கண்ணியம் கொண்டேதான் கடமைகள் செய்தார்
பொய்ப்புரட்டு வன்மங்கள்
புதைந்தது மண்ணில்
பூக்கிற தென்னாளும்
இன்பங்கள் கண்ணில்..!

முதியோர்கள் இல்லத்தில்
முனகுதே வெளவால்
முதுமைக்கு மரியாதை
செலுத்துறார் அன்பால்..!
சதிபதி பிணக்குகள்
சண்டைகள் இல்லை
சரிபாதி உரிமைகள்
நீக்கியதுத் தொல்லை!

கையூட்டு இல்லாமல்
காரியத்தில் வெற்றி
கண்ணியம் நிறைந்தோர்கள் கோட்டையைச் சுற்றி..!
மையிட்டத் தேர்தல்கள்
மறந்தேதான் போச்சு
மாசிலா தலைவனும்
ஒருமனதேர் வாச்சு..!

பூபிஞ்சு கனியென
பெண்மைக்குக் காப்பு
பூமியில் இல்லையே
வன்கொடுமை, ஏய்ப்பு
பாபிகள் இல்லாத
பண்பான உலகாய்
பூபாளம் இசைக்கின்ற
பெண்கூட்டம் அழகாய்..

வானிலை அளவோடு
வளங்களைக் கூட்டுதே
வான்மழை வருகையால்
வரவில்லை வெள்ளமே
நான்மகிழ்ந்த வேளையில்
கட்டிலும் நகருதே
நாசமழை நற்கனவைக்
களவாடிப் போகுதே..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (16-Dec-24, 1:33 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 2

மேலே