நீநான்நிலா
நீ..நான்...நிலா..!
15 / 12 / 2024
நீ...நான்...நிலா..!
இந்த முக்கோணம்
நம் காதல் வாழ்வின்
தக்கோலாப் போர்களமானது.
நான் எங்கோ ஒரு பனிமுகட்டில்
நீ எங்கோ ஒரு தனிவீட்டில்
நம்மை இணைக்கும்
ஒரு பாலமாய்
தூதுபோகும் ஒரு தோழியாய்...
இந்த நிலாதான்.
எல்லை கோட்டினில்
முகமறியா எதிரிகளின்
எண்ணிலடங்கா குரூர விழிகள்
எந்நேரம் குண்டு வெடிக்குமோ
என்றொரு நிலையில்லா நிலை
என்னைச் சுற்றி பனிமலை
சில்லென்ற உன்மேனியின்
நினைப்பு என்நெஞ்சை குளிரூட்ட
நிலவில் தோன்றும் உன்முகம்
குறுகுறுக்கும் உன் பார்வை
என்னைத் தாக்க
உன் நினைவின் கதகதப்பு
என் ஆற்றலை மின்னேற்றம் செய்ய
நான் இங்கே உன்னினைப்பில் கரைய..
இங்கமட்டும் என்ன வாழுதாம்?
நானும் உங்கள் நினைப்பில்
குளிர்ந்து விறைத்துதான் போகிறேன்.
என்னைச் சுற்றியும்
முகமறிந்த உறவுப் பேய்கள்
எப்போது காலைவாருவோம்?
எப்போது உலைவைப்போம்?
என்றலையும் மனிதவெடிகுண்டுகள்
நீங்களும் போர்க்களத்தில்
நானும் போர்க்களத்தில்
இதோ இந்த நிலா மட்டும்தான்.
ஆறுதலையாய்..! அரவணைப்பாய்..!
ஆம்..நீங்கள் நினைப்பதுபோல்
நம் காதல் வாழ்வு
தக்கோலாப் போர்களமானதுதான்.