நினைவினில் கொள்

#நினைவினில் கொள்.!

என்ன வாழ்க்கை இந்த வாழ்க்கை
நொந்து போவதா - மனிதா
இருக்கும் வரை வாழ நீயும்
முயன்று பாரடா..!

கூடு விட்டுக் கூடு பாயக்
கற்க வில்லையே - நாமும்
குழந்தை யாக மாறிட ஒரு
வழியு மில்லையே..!

மான ரோஷம் உள்ள வாழ்வில்
வலிக ளாயிரம் - பிறர்
கால் பிடித்த வாழ்வில் எல்லாம்
புகழும் சேரும்..!

அஞ்சி டாத நெஞ்சைக் கூட
ஆட்டிப் படைக்கும் - பலர்
வாழ்வில் மண்ணைப் போடும் விதி
இன்ப முடைக்கும்..!

பொல் லாத மனித ருள்ளும்
உண்டு ஈரம் - சொல்வேன்
புத்தன் வேடம் கண்ட றிந்தால்
விலகு தூரம்..!

வெட்டிச் சாய்க்கத் துளிர்க்கும் முருங்கை
கண்ட தில்லையா - உறுதி
வேண்டும் நெஞ்சில் என்று மென்றும்
நினைவில் கொள்ளுவாய்..!

உயிர்த் தொலைந்து போன பின்னே
எதுதான் சொந்தம் - உணர
ஒதுங்கிப் போகும் துன்பம் உன்னை
உணர்வாய்க் கொஞ்சம்..!

எடுத்துக் கொண்டு காடு செல்ல
எதுவு மில்லையே - உன்னால்
இயன்ற வரை கொடுத்து விடு
தயக்க மின்றியே..!

யாருக் குத்தான் துன்ப மில்லை
இந்தப் புவியிலே - மனதில்
நேர் மறையாய் எண்ணங் கொள்
வெற்றி அருகிலே ..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (16-Dec-24, 2:12 am)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : ninaivinil kol
பார்வை : 47

மேலே