கனவுகளில் நான் வாழ்ந்து விடுகிறேன்



கண்டவை எல்லாம் கனிவானவையே
நண்பனே !
கனவுகளில் நான் வாழ்ந்து விடுகிறேன்
கலைத்து என்னை தவிக்க விடாதே

துரோகத்தை அங்கே ஏனோ
துளிகூட காணவில்லை
துன்பம் எல்லாம் தொலைதூரத்தில்
துயரம் எல்லாம் நெருங்கவே பயந்தது

கனவுகளில் நான் வாழ்ந்து விடுகிறேன்
காட்சிகளில் நான்
கலந்து விடுகிறேன்

ஏனோ அங்கே சந்தித்தவர் எல்லாம்
என்னை
ஏமாற்றவேயில்லை
ஏகாந்தம், கண்களை மூடியதும்
ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை

கூடியவர் அனைவரும் கொண்டது
குழந்தை மனமே
கூப்பாடு போட்டுக்
கூவியழைத்தும் வஞ்சனை அங்கே
கூடவேயில்லை

கனவுகளில் நான் வாழ்ந்து விடுகிறேன்
கற்பனையில் தவழ்ந்து வருகிறேன்

தோழமை பலவுமென் வாழ்வில்
தோற்றே போயின
உறவுகள் பந்தம் என்னை
உறுத்தவே செய்தது
கண்டவை நிஜவுலகில்
கசப்பான காட்சிகளே

உண்மை நண்பனே
உன்னிடம் ஒரு
உதவி கேட்பேன்

கனவுகளில் நான் வாழ்ந்து விடுகிறேன்
காலத்தின் கோலத்தை
கலைத்து நீயும் என்னை
கண்ணீரில் தள்ளாடும் நினைவுலகில்
நிறுத்தாதே

எழுதியவர் : g .m .a .kavitha (13-Sep-11, 7:22 pm)
பார்வை : 512

மேலே