சுவாசமே
சுவாசமே.. . .
குணக்கு கொண்டலே
வெண்சாமரமாய் குளிரவைக்கின்றாய்
உன்னோடு மேகங்களுக்குத்தான் எத்துணை
மேன்மையான காதல் உன்னில் இணைந்து
மழையாய் மாண்புறச்செய்கிறது
மண்ணினையும் மனதையும்
தென்றலாய் தவழ்ந்தாலும்
எத்துணை இடர்களை தாண்டுகிறாய்
தடைகளை தகர்த்து மேனித்தொடுகையில்
இதமா பதமா இணைகின்றாய்
குடக்கில் உன்பிறப்பு கோடையாய்
வடக்கில் வலம் வாடையாய்
சிலசமயம் ஊதையாய்
உடல் சிலிர்க்க வைக்கின்றாய்
வறண்டப்பகுதியில் இருந்து வந்தாலும்
வலிமை பொருந்தி வருகிறாய்
கோடை வெப்பக்காற்றாய்
பள்ளத்தாக்குகளில் பயணம் செய்தாலும்
மெல்ல தாக்குகின்றாய் மென்காற்றாய்
செய் நன்றி மறக்கும் மக்கள் கண்டால்
புழுதிவாரி இறைத்து பேய்க்காற்றாய் பிறக்கின்றாய்
சூறாவளியாய் நீ சுற்றினால்
சூரப்புலியானாலும் சுருண்டு
விழும் உன் பார்வையில்
எத்தனை எத்தனை உருமாற்றங்கள் உனக்குள்ளே
பூப்பெய்தினாள் பூங்காற்று
புல்லரிக்கும் நிலையில் பனிக்காற்று
மெல்ல மேனித்தொடுகையில் மென்காற்று
இரக்கம் கொண்டால் இளம்தென்றல் காற்று
புரட்சியாய் புயல் காற்று
எல்லை மீறுகையில் சூறாவளிக்காற்று
என்சுவாசக்காற்றே . . .
நீ இல்லாது போனால்
நாங்கள் எல்லாம் வீணே இப்பூமியில்!
இவன் மு.ஏழுமலை