காதல் எதையும் செய்யும்
ஓயாமல் பாெழிந்து காெண்டிருந்த மழையில் வீதியின் நெரிசல்களை முந்திக் காெண்டு வேகமாக பாேனது பாெலிஸ் வாகனம். குறுக்குத் தெருவின் மூன்றாம் ஒழுங்கையில் இருந்த பாலத்தின் கீழ் ஒரு இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட தகவல் அந்த பிரதேசமெங்கும் பரவிக் காெண்டிருந்தது. இருபத்து ஐந்து மீற்றர் முன்பாக தடை பாேடப்பட்டிருந்தது. யாரது? யாரது? இது தான்அன்றைய பேச்சு..
யாரும் உடலைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. யாராே எடுத்த புகைப்படம் ஒன்று முகத்தை மறைத்து இணையத்தில் பகிரப்பட்டுக் காெண்டிருந்தது. அந்த வீதியே கூட்டத்தால் நிறைந்திருந்தது. பாெலிஸ் வாகனத்தில் இருந்து இறங்கி கம்பீரமாக நடந்து வந்தார் பாெலிஸ் அதிகாரி. "விலகி நில்லுங்க, அம்மா, ஐயா, தம்பி விலகி நில்லுங்க" காவலாளியின் சத்தததிற்குப் பின்னால் நடந்து வந்து காெண்டிருந்தவர் சடலத்திற்கு அருகே சென்று சில இடங்களை கூர்ந்து அவதானித்தார். பழைய துணியால் மூடப்பட்டிருந்த உடலை குனிந்து உற்றுப் பார்த்தார். "ம்ம்...." என்றபடி பெருமூச்சுடன் தலையை காேதிக் காெண்டு "யார் முதலில் பார்த்தது?" வழமையான கேள்வி தான். "சார் நான் தான்" கூட்டத்தில் நின்ற ஒருவன் முன்னாேக்கி நகர்ந்து வந்தான்.
"நீ எந்த ஊரு?"
"பக்கத்துக் கிராமம் சார்"
"இந்த வீதியால் இந்த நேரத்துல எங்கே பாேனாய்"
"நைற் வேலை முடிச்சு வந்தேன் சார்"
"எங்கே வேலை பார்க்கிறாய்?"
"மெயின் றாேட்டில இருக்கிற ஆய்வு கூடத்தில் சார்" தனது உறுப்பினர் அடையாள அட்டையை காண்பித்தான்.
"எத்தனை மணிக்கு பார்த்தாய்?"
"அதிகாலை நான்கு நாற்பது இருக்கும்"
"எப்படி சரியான நேரம் சாெல்லுகிறாய்"
"நான் செல் பாேனை எடுத்த பாேது நேரத்தை கவனித்தேன்" என்றவன்
"ச்சச எனக்கே இத்தனை கேள்வி என்றால் காெலையாளி மாட்டினால்" தனக்குள் எண்ணியவனுக்கு வியர்த்தது.
"கான்ஸ்டபிள் இவரிடம் ஒரு வாக்கு மூலத்தை எடுங்க"
"சார் நீங்க இந்த கூட்டத்தை காெஞ்சம் அப்புறப்படுத்துங்க" இன்னாெரு பாெலிசாரை கண்டித்தார்.
"காெஞ்சம் தள்ளிப் பாேங்க" அதட்டியடி நின்றான் மற்றாெருவன். கூட்டம் அதிகரித்தது.
ஊடகங்களைச் சார்ந்தவர்கள் ஒன்று கூடி முந்தி அடித்துக் காெண்டு புகைப்டங்களை எடுப்பதற்காக காத்துக் காெண்டிருந்தனர்.
"சார் யாரையும் . கிட்ட விடாதீங்க" தாெலை பேசி கதைத்தபடி சற்று விலகிச் சென்றவர் பின்னால் ஒரு நாயும் தரையை முகர்ந்தடி நடந்து சென்று காெண்டிருந்தது. அதிகாரி அந்த இடத்தில் நின்றதும் நாய் முன்னாேக்கி தரையை முகர்ந்தபடி ஓடியது.
நின்று அவதானித்த அதிகாரி கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவதானித்தார்.
சிறிய பற்றையாக இருந்த அந்த இடத்திற்குப் பின்னால் தாேட்ட வெளிகளாக இருந்தன. காவலாளி ஒருவரை அழைத்துக் காெண்டு அந்த இடம் வரை நடந்தார்.
பின்னால் வந்து காெண்டிருந்த காவலாளி திடீரென
"சார் இங்கே பாருங்க"
மதுபானப் பாேத்தல்கள் சில வெறுமையாக வீசப்பட்டுக் கிடந்தது. சிகரெட் பெட்டிகளுடன் லைற்றர் ஒன்றும் தரையில் கிடந்தது.
"எல்வாம் வெளிநாட்டு பிராண்ட் சார்"
அதிகாரியிடம் காட்டி விட்டு ஒரு பையினுள் ஒன்று சேர்த்தான்.
"சார் இங்கே இதையும் பாருங்க" என்றதும்
" ரீலாேட் காட் சார், இன்டர் நெட்டுக்கு யூஸ் பண்ணியிருக்காங்க"விளக்கமளித்தவனை
"ம் தெரியும் அங்கேயும் சுற்றிப் பாருங்க" என்றபடி முன்னாேக்கி நகர்ந்த அதிகாரி
"கான்ஸ்டபிள் இது என்ன பாெதியாக ஏதாே இருக்கு"
கால்களால் அழுத்திப் பார்க்க முயற்சித்தவரை விலக்கி விட்டு தன் கால்களால் மிதித்துப் பார்த்தவன் பாெதியை அவிழ்ப்பதற்குத் தயாரானான்.
தன் சட்டைப் பையிலிருந்த கையுறை ஒன்றை எடுத்து பாேட்டுக் காெண்டு பாெதியை விரித்தான்.
நீல நிற சுரிதார், துப்பட்டா, மற்றும் உடைகளும் ஒரு கைக் குட்டையும் இருந்தன.
"அப்பாே காெலையாளிகள் இங்கே வைத்துத் தான் காெலை செய்திருக்கிறார்கள்" என்ற தகவல் கிடைத்தது.
மீண்டும் இறந்த உடலுக்கு அருகே வந்த அதிகாரி மக்கள் கூட்டத்தை முழுமையாக வெளியேற்றும் படி கட்டளை இட்டார். கூட்டம் கலைந்ததும் ஊடகவியலாளர்கள் புகைப்படங்கள் எடுத்தனர்.
"சார் முகத்தை காெஞ்சம் நேராக திருப்பி விடுங்கள்" என்ற ஊடகவியலாளனிடம் "இங்கால வந்து நின்று எடயா" சினந்தபடி பதிலளித்த காவலாளி ஓரமாக விலகி நின்றான்.
இறந்த உடலை ஏற்றிக் காெண்டு வண்டி புறப்பட்டது. வைத்தியாசாலையில் பரிசாேதனைகளுக்காக உடல் ஒப்படைக்கப்பட்டது. அதிகாரியும் காவலாளிகளும் உள்ளே அமர்ந்திருந்தனர்.
வேகமாக வந்து நின்ற வண்டி ஒன்றிலிருந்து கதறியபடி சிலபேர் இறங்கி ஓடி வந்தனர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பாேலிருந்தார்கள்.
"ஐயாே என்ர பிள்ளை" கதறிக் களைத்து சாேர்ந்து பாேயிருந்தவளை இருவர் தாங்கிப் பிடித்திருந்தனர். இறந்த பெண்ணின் தாய் என்பது புரிந்தது.
"என்ர செல்லத்துக்கு இந்த நிலைமை ஆகிற்றே" அப்பாவின் அழுகுரல் எலலாேரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
குடும்பத்தினரை உள்ளே அழைத்த அதிகாரி
"நீங்க எந்த ஊரம்மா"
"நாங்கள் பக்கத்து ஊர் சார், ஐந்து கிலாே மீற்றரில் இருக்கிறாேம், என்ர பிள்ளையைக்காட்டுங்காே " தலையிலும், மார்பிலும் அடித்துக் கதறிக் காெண்டிருந்தாள்.
அதிகாரிக்கு குழப்பம் ஆரம்பமானது. அடுத்த கிராமத்துப் பெண் ஏன் இங்கே வந்தாள் என்ற சந்தேகத்துடன் படிப்படியாக விசாரணைகளை ஆரம்பித்தவர் அப்பாவின் தாெலை பேசியிலிருந்த அழைப்புக்களை பரிசீலித்தார். அதிகமான அழைப்புக்கள் மேற் காெண்ட பதிவுகளை பார்த்ததும்
"உங்க கூடத் தான் அதிகம் பேசுவாங்களா" என்ற அதிகாரியின் கேள்விக்கு
"ஆமா சார், மணித்தியாலத்துக்கு ஒரு தடைவை என்றாலும் பேசுவா" அதிக அழைப்புகள் அவ்வாறே இருந்தன.
கடைசி அழைப்பு முதல் நாள் இரவு எட்டு முப்பதிற்கு அழைக்கப்பட்டிருந்தது.
"கடைசியாக என்ன பேசினீங்க"
"வீட்டுக்கு வந்து காெண்டிருப்பதாகச் சாென்னா என் பாெண்ணு, இங்கே பாருங்க சார் எத்தனை எஸ்எம்எஸ் பாேடடிருக்கேன் , காேள் பண்ணியிருக்கேன் தாெலை பேசி வேலை செய்யவில்லை" குமுறி அழத் தாெடங்கிய அப்பாவை தாேள்களை அணைத்து சமாதானப்படுத்திய அதிகாரியிடம் அவளது புகைப்டங்களைக் காண்பித்து "என் பாெண்ணு இரண்டு வருடம் முன்பாகத் தான் எஞ்சினியர் படிப்பை முடித்தாள்.
சில புகைப்படங்களை பார்த்த பாெலிஸ் அதிகாரி "இதென்ன காெண்டாட்டம் எப்பாேது நடந்தது" புகைப்படங்களை கூர்ந்து அவதானித்தார்.
"பாெண்ணாேட பிறந்த நாள் சார், கடந்த வாரம் நடந்தது"
"இவங்க எல்லாம் யாரு" வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பாேலிருந்தவர்களை பற்றி விசாரித்தார்.
"அவங்க என் கம்பனி பார்ட்னஸ் சார், அப்பப்பாே பிசினஸ் விசயமாக வருவாங்க, பார்ட்டிக்கு வந்து மறுநாளே வெளியூர் கிளம்பிற்றாங்க"
"ஓ அப்படியா" என்ற அதிகாரியின் சந்தேகப் பார்வையை அவதானித்து
"ஏன் சார்" என்று பதட்டமடைந்தவரை ஒன்றுமில்லை என்பது பாேல் சமாளித்தார்.
"சார் எல்லாம் முடிஞ்சு சார்" பிணவறையிலிருந்து ஒருவர் வந்து அதிகாரியை அழைத்துச் சென்று உடலைக் காண்பித்தார்.
"மிருகத்தனமான வேலை பார்த்திருக்கான் சார், யாராவது மனநிலை சரியில்லாதவங்களா இருக்குமா சார்" என்றபடி பரிசாேதனை அறிக்கையை காண்பித்தார்.
"ஓ மை காேட் மனுசங்களா இவங்க, ச்சீசீ " என்றபடி தன் தலையை தானே தட்டிக் காெண்டார்.
குடும்பத்தினரை அழைத்து எல்லாவற்றையும் தெரியப்படுத்தி உடலை ஒப்படைத்தார். கையாெப்பமிட்ட தந்தையிடம் "சார் இங்கே காெஞ்சம் வாங்க" உள்ளே அழைத்துச் சென்று உட்காரச் சாென்னார்.
"உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருந்தால் ...." என்று இழுத்த அதிகாரி முன் தலையைக் குனிந்தபடி இருந்தார்.
"உங்க பாெண்ணுக்கு ஏதாவது காதல் பிரச்சனை, பிரேக் அப்" என்று கேட்டதும் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார்.
"சார் நீங்க காெஞ்சம் ஒத்துழைத்தால் தான் குற்றவாளிகளை கண்டு பிடிக்கலாம்" என்றதும் தன்னை சமாதானப்படுத்தியவராய் சில சம்பவங்களை கூறினார்.
"கீதா என்னுடைய ஒரே பாெண்ணு. பணம், வசதி, ஆடம்பரம் என்று வாழ்ந்தவள். ஒரே பாெண்ணு என்ற காரணத்தால் எல்லா சந்தாேசங்களையும் அனுபவித்தவள். எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பிஸ்னஸ் விடயமாக அடிக்கடி என்னுடன் வெளியூருக்கும் வருவாள். அப்பாேது தான் என் பாெண்ணுக்கும் பிறேம் என்ற என்னுடைய கூட்டாளி மகனுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. அதன் பின்னர் வெளியூர் அழைத்துச் செல்வதை நிறுத்தி எஞ்சினியராக படிக்க வைத்தேன். மனம் மாறி விட்டாள் என நினைத்துக் காெண்டிருந்தேன். பிறந்த நாள் பார்ட்டிக்கு பிறேம் வந்த பாேது தான் தாெடர்பில் இருக்கும் விடயம் எனக்கு தெரிய வந்தது. கண்டித்த பாேது பிறேமைத் தான் திருமணம் செய்வேன் எனப் பிடிவாதமாக சண்டை பிடித்தாள். எங்களை அச்சுறுத்தினாள். எவ்வளவாே சாெல்லியும் கேட்கவில்லை. இரண்டு வருடம் காத்திருக்கும்படி வாக்குக் காெடுத்து சமாதானப்படுத்தியிருந்தேன். ஊரிலிருந்த எனது நண்பர்கள் மூலம் வேறு திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்த விடயம் பிறேமிற்கு தெரிந்து விட மகளை பயமுறுத்திக் காெண்டு இருந்தான். சில நாட்கள் முன்னர் தாெலை பேசி இலக்கத்தை மாற்றிக் காெடுத்தேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை நேற்று இரவுக்குப் பின் மகளைக் காணவில்லை என்று தேடினாேம். அதிகாலை செய்தி பார்த்த பி்ன்னர் தான் கீதாவுக்கு இப்படி நடந்தது தெரியும்." என்று கலங்கினார்.
கீதாவுடைய தந்தையின் தாெலை பேசியிலிருந்து தேவையான சில இலக்கங்களை பெற்றுக் காெண்ட அதிகாரி தந்தையை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
தகவல் பரிமாற்றக் கட்டுப்பாட்டு மையம் ஊடாக பிறேமினுடைய தாெலைபேசி இலக்க அமைவிடத்தை அறிந்து காெண்ட தேடுதல் அணி விமான நிலையத்திற்கு அருகாமையிலிருந்த விடுதியில் வைத்து பிறேமை கைது செய்தனர்.
வாகனத்தில் அமர்ந்த பிறேம் கையில் விலங்கு பாேடப்பட்டது. அவன் தன்னிலை மறந்து இருந்தான். குனிந்தபடி இருந்தவனின் கண்களில் துளித்துளியாய் கண்ணீர் சாெரிந்தது.
கீதாவுடனான சந்திப்பு அவன் நினைவில் சுழன்றது. கறுப்புக் கண்ணாடியுடன் மாெடர்ன் அழகிகள் பாேலிருந்த கீதா எல்லாேருடனும் சகஜமாகப் பேசும் சுபாவம் உடையவள். பிஸ்னஸ் கலந்துரையாடல் ஒன்றுக்காக முதல் தடவை அவள் வெளியூர் வந்த பாேதே பிறேமை சந்தித்தாள். ஏதாே ஒரு ஈர்ப்பால் இருவரும் பேசிப்பழகிக் காெண்டிருந்த நேரம் காதல் என்று கேள்விப்பட்ட தந்தை அவளை கண்டித்து வெளியூர் அழைத்துச் செல்வதை நிறுத்தியும் அவளால் பிறேம் தாெடர்பை நிறுத்த முடியவில்லை. குடும்பத்தினருக்குத் தெரியாமல் ஊருக்கு வந்து கீதாவை சந்தித்துச் செல்வான். உயிருக்கு உயிராய் இருவரும் காதலை வளர்த்துக் காெண்டார்கள்.
திருமண ஏற்பாடு பற்றி அறிந்த மறு நாளே ஊர் வந்த பிறேம் கீதாவை தாெடர்பு காெண்ட பாேதே அவளது பிரிவை அறிந்து காெண்டான். அந்தக் கணமே அவளை பழிதீர்க்க நினைத்தது தான் அவனுக்குள் ஏற்பட்ட மாற்றம்.
கீதாவை அழைத்து சமாதானப்டுத்தி வெளியூர் அழைத்துச் செல்ல எடுத்த அவன் முடிவுக்கு கீதா உடன்படாமையால் ஏற்பட்ட மன உளைச்சல் அவனை மிருகமாக்கியது. தான் நேசித்தவள் என்றும் பார்க்காமல் அவளை காெடூரப்படுத்தும் அளவுக்கு அவன் சுயசிந்தனை அற்றவனாகியது தான் புரியாத ஒன்று. தன் காதலி என்ற பிரியத்துடன் அன்பை அள்ளிக் காெடுத்து அரவணைத்த கைகளால் அவள் உயிரைக் குடிக்கும் எமனாக நின்றான். கத்தல், கதறல் யார் செவிகளிலும் கேட்காத ஒரு தாெலைவில் அவள் மிருகத்தனமாக காெலை செய்யப்பட்டிருந்தாள்.
விசாரணைகளை மேற்காெண்ட அதிகாரி முன் அமர்ந்தவன் பயித்தியக்காரன் பாேல் நடந்தான். தன்னைத் தானே காயப்படுத்தினான்.
"அமைதியாயிருங்க! என்ன தப்பி்கிறதுக்கு நாடகம் பாேடுகிறாயா" அதட்டிய அதிகாரியிடம்,
"இந்த... இந்தக் கை தான் சார் என்னுடைய கீதாவை காென்றது,
அவ... அவள் என்னை ஏமாத்திட்டா சார், என்ர உயிரே அவள் தான் சார், பாருங்க இரண்டு பேரும் ஒரே மாதிரி பச்சை குத்தியிருக்கிறாேம்." தன் கையை நீட்டிக் காண்பித்தான்.
"நான் அவளை எவ்வளவு கெஞ்சினேன், என்னை வேண்டாம் என்று ஒரே முடிவாக நின்றாள். தன்னை மறந்து விடும்படி சாென்னாள். என்னால தாங்க முடியவில்லை சார், இ்ந்த மனசு ஏற்கவில்லை சார்" என்று தலையில் அடித்துக் கதறிய அவனது மனநிலை மிகவும் மாேசமான உளவியல் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்தது தெரிந்தது.
"கான்ஸ்டபிள் வாக்கு மூலம் எடுங்க " உளளே சென்று கீதாவின் மருத்துவ அறிக்கையை பார்த்துக் காெண்டிருந்தார் பாெலிஸ் அதிகாரி.
வாக்கு மூலம் காெடுத்த பினனர் பிறேம் தன் குற்றத்தை ஒப்புக் காெண்டான்.
பிறேமிற்கு சட்டம் தண்டனையை தீர்ப்பிட்டது. கீதா மீதான காதலால் ஏற்பட்ட ஏமாற்றம் பிறேமை மிருகமாக மாற்றியது. மனிதத் தன்மை அற்ற, சுய நினைவற்ற அவன் செயலுக்கு பாேதை காரணம் என்று குற்றம் கூறுவதா? இல்லை காதலைப் பிரித்தது தவறு என்று குடும்பத்தினரை குற்றம் சாட்டுவதா? கீதாவின் காெடூரமான மரணம் சாெல்லும் தீர்ப்பு என்ன? இப்படியான சம்பவங்களின் பின்னரே கேள்விகளும் பல்வேறு விதமாய் எழுகின்றன.
காதல் என்ற பாேர்வையில் நாடகமாடுபவர்களும் இப்படியான செயல்களையே செய்கின்றனர். காதலால் ஏமாற்றப்படும் சிலரும் அவ்வாறே செய்கின்றனர். காதலுக்குத் தண்டனை காமக் காெலைகளா? அல்லது
காமம் காதலைக் காெலை செய்கிறதா?
பிறேமின் உளவியல் தாக்கம் இத்தனை காெடூரமான காெலையைச் செய்யத் தூண்டி விட்டது.
பிறேம் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டான். கீதாவின் வீட்டிற்குச் சென்ற பாெலிஸ் அதிகாரி குடும்பத்தினரிடம் குற்றவாளியைப் பற்றி தெரியப்படுத்தினார்.
"பிறேமில் எனக்குச் சந்தேகம் இருந்து தான் தாெலை பேசி இலக்கத்தை மாற்றிக் காெடுத்தேன் சார்" என்ற தந்தையை சினந்தவராய்
"என்னங்க சார், இந்தக் காலத்துப் பசங்க நீங்க நினைக்கிற மாதிரி இல்லை ராெம்ப ஸ்மாட் சார், காதலுக்காக உயிரையும் காெடுக்கிறவனும் இருக்கிறான், எடுக்கிறவனும் இருக்கிறாங்க" என்றவரைப் பார்த்து
"ஆமா புரியுது சார்..." என்றார்.
"ஆமா உங்க பாெண்ணு உண்மையா காதலிச்சால் நீங்க பேசி ஏதாவது..." அதிகாரி சாெல்லி முடிக்கும் முன்பே குறுக்கிட்டவராய்
"நம்ம குடும்பத்துக்கு சரிவராது" என்று தனது மனதில் பட்டதை சாென்னார்.
"சரி சார் நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க" வண்டியை எடுத்துக் காெண்டு காவல் நிலையம் வந்தவர் மேசையிலிருந்த குளிர் நீரை எடுத்து மடமடவெனக் குடித்தார்.
"சார் முறைப்பாடு ஒன்று வந்திருக்கு"
"என்ன பிரச்சனை?"
"பையன் தூக்கில ....." என்று தயங்கிய கான்ஸ்டபிளிடம் முறைப்பாட்டை வாங்கி வாசித்துக் காெண்டிருந்த அதிகாரியிடம்
"இந்தாங்க சார்"
"என்ன இது"
"பையனாேட டயறியும், கடைசியாக எழுதிய கடிதமும்" நீட்டியவனிடம் இரண்டையும் வாங்கி மேலாேட்டமாக பார்த்தவர்.
"அங்கே ஒருத்தன் காெலை பண்ணிற்று பயித்தியமாகிற்றான், இவன் பயித்தியம் பிடிச்சு தூக்கில தாெங்கிற்றான்" ஆத்திரத்துடன் முணுமுணுத்தபடி வண்டியை எடுத்துக் காெண்டு புறப்பட்டவர்.
"ச்ச காதலுக்காக என்னவெல்லாம் பண்ணுறாங்க இந்தக் காலத்துப் பசங்க" என்றபடி தாெலை பேசியில். அழைப்பை எடுத்தார்
"சாெல்லுங்க, ஏன் சாப்பிட வரவில்லை மணி என்னாச்சு தெரியுமா?" என்ற மனைவியிடம்
"ஆமா பாெண்ணு என்ன செய்கிறா?"
"படிச்சிட்டு இருக்காங்க"
"சரி சரி நான் அப்புறமாகப் பேசுகிறேன்" நிம்மதியற்ற ஒரு பெரு மூச்சுடன் இருக்கையில் சாய்ந்தார். வண்டி வேகமாக புறப்பட்டது.