450 முற்பழக்கம் இன்றேல் எதுவும் முடியாது - அறஞ்செயல் 2

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

எத்தொழிலு முற்பழக்க மின்றியெய்தா தறமென்னும்
..இணையொன் றில்லா
அத்தொழின்முற் பழக்கமின்றிச் சாங்காலத் தமையுமோ
..வருமன் றற்கு
வத்திரம்வேண் டிற்பருத்தி விதைத்துமுன்ன நெய்யாமன்
..மணஞ்செய் காலத்து
ஒத்ததுகில் வேண்டுமென எத்தனைபேர் முயன்றாலும்
..உறுமோ நெஞ்சே. 2 அறஞ்செயல்

- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மனமே! எந்தச் செயலும் முன் அனுபவமில்லாமல் செய்ய முடியாது. அறமென்ற ஒப்பிலாத நல்வினை யாகிய கடமை பழக்கமின்றிச் சாகுங் காலத்தில் எப்படி அமையும்?

அதுபோல, திருமணத்திற்கு வேண்டிய கூறை யாகிய ஆடை வேண்டுமானால், பருத்தி விதைத்து முன்னமே பஞ்செடுத்து நெசவு செய்யாமல் திருமண நேரத்தில் தேவையான துணிமணிகள் வேண்டுமென்று எத்தனை பேர் முயன்றாலும் உடனே கிடைத்து விடுமா?” என்று இளமை யிலேயே அறச்செயல்களைச் செய்ய அறிவுறுத் துகிறார் இப்பாடலாசிரியர்.

இணை - ஒப்பு. மன்றல் - மணம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Mar-20, 3:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

சிறந்த கட்டுரைகள்

மேலே