52 வரிகொளல் மக்களை வாழ்விப்பதற்கே ஆகும் – குடிகளியல்பு 6

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)

படியின்மன் னுயிர்க்கெலாம் பாது செய்கின்ற
நெடியமா சேனையை நெறிசெய் மாந்தரைக்
கடியொடுந் தாங்கவூர்க் காரி யஞ்செயக்
குடியிறை யிறையவன் கொள்ளுங் கொள்கையே. 6

- குடிகளியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மக்களிடமிருந்து மன்னன் வரி வாங்குவது நாட்டிலுள்ள மக்களையும், மற்ற உயிர் ஜீவராசிகளையும் பாதுகாக்கின்ற நீண்ட பெரிய படைகளை, அரசியல் அலுவல்களில் அமர்ந்து நெறிமுறை செய்யும் வேலையாட்களைப் பற்றுதலுடன் கவனிக்கவும், நாடு நகரங்களின் நலம் பெருகச் செய்யும் பணிகட்கு செலவு செய்தற்காகவே ஆகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

படி - உலகம். மாந்தர் - வேலையாட்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Mar-20, 7:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

சிறந்த கட்டுரைகள்

மேலே