சந்திரனுக்கும் மலைக்கும்
நேரிசை வெண்பா
நிலவாய் விளங்குதலா னீள்வான் படிந்து
சிலபோ(து) உலாவுதலாற் சென்று - தலைமேல்
உதித்து வரலால் உயர்மா மலையை
மதிக்கு நிகரா வழுத்து. 54
- கவி காளமேகம்
பொருளுரை:
மதி: நிலவொளி தருவதாக விளங்குவதானாலும், நெடிய வானிடத்தே பொருந்திச் சில காலத்துச் சஞ்சரிப்பதனாலும், மறைந்து சென்று மீளவும் உதித்துத் தலைக்கு மேலாக வானிடத்தே வருகின்றதனாலும்,
மலை: பூமியினிடத்ததாக விளங்குதலினாலும், நெடிய வானத்தே அளாவிச் சில மலைப் பூக்கள் விளங்கப் பெற்றிருப்பதாலும், பூமியில் தொடராகப் பரவித் தலைக்கு மேலாக உயரத்தே எப்பொழுதும் தோன்றி விளங்குவதனாலும்
உயரமான பெரிய மலையினைச் சந்திரனுக்கு ஒப்புடையதாகச் சொல்லுக என்கிறார் கவி காளமேகம்.