38 மன்னுயிர் எல்லாம் தன்னுயிராய் மதிப்பவன் மன்னன் – அரசியல்பு 2

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

மன்னுயி ரனைத்துந் தன்னுயி ரென்ன
..மகிழ்வொடு தாங்கியா ரேனும்
இன்னலுற் றயர்ந்தோ மெனக்கலுழ்ந் திடில்தன்
..இருவிழி நீரினை உகுப்பான்
அன்னவெந் துயரை நீக்குமுன் தானொன்(று)
..அயின்றிடான் துயின்றிடான் எவரும்
நன்னக ரெங்கும் உளனெனப் பகர
..நாடொறும் இயங்குவோன் கோனே. 2

– அரசியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நிலைபெற்ற எல்லா உயிரும் தன் உயிர் போல் மகிழ்வோடு காப்பாற்றி, குடிமக்களில் யாராவது துன்பம் அடைந்து வருத்தமுற்றுக் கலங்கினால் தனது இருவிழியிலும் கண்ணீர் சொரிவான். அத்தகைய கொடிய துன்பத்தை நீக்கும் வரை தான் உண்ணவும், உறங்கவும் மாட்டான். எல்லோரும் நல்ல நகரில் எங்கும் மன்னன் இருக்கிறான் என்று சொல்லும்படி நகரெங்கும் காணும்படி வருபவனே மன்னன்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

கலுழ் – அழு, கண்ணீர் விடு, கலங்கு, அயின்றிடல் - உண்டல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Mar-20, 8:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

மேலே