592 இறைப்பணத்தால் குடிகளே இன்பம் எய்துவர் – குடிகளியல்பு 1
தரவு கொச்சகக் கலிப்பா
வேருறுநீர் மரமெங்கும் விரவுமுத ரங்கொ(ள்)சுவை
யாருணவு தேகமெலா மண்ணுறுங்கோன் கொள்ளுமிறை
பாருயிர்க்கெ லாம்பின்பு பயன்படலாற் றகும்பருவத்(து)
ஏருறவே தக்கவிறை யினிதீவர் குடிகளரோ. 1
- குடிகளியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
பெருமரத்தின் தூரில் விடுகின்ற நீர், வேரின்வழியாக மரமெங்கணும் விரவி, அம்மரத்தைச் செழிக்கச் செய்யும். வாய்வழியாக வயிற்றினுட் செல்லும் சுவை நிறைந்த உணவு, குருதியாக மாறி உடம்பெங்கணும் சென்று, அவ்வுடம்பினை அழகுற வளர்க்கும்.
அவை போல் வேந்தன் பெறும் வரிப்பொருளால் குடிமக்களுக்கு வேண்டும் நீர்நிலை, வழிநடை, ஊர்தி, அஞ்சல், கல்வி, மருந்து, ஒழுக்கம், கடவுள் நினைவு, அச்சமின்மை, அன்பின்ப வாழ்க்கை, காவல் முதலிய பலவகைத் துறைகள் வழியாகப் பயனீந்து இம்மையே நன்மை தரும் எல்லா இன்பமும் எய்துவிக்கும்.
அதனால் முறை தவிரா இறைப்பொருளை ஒருங்கு நேர்ந்து உவந்து ஈவர்.
மண்ணுறும் - அழகு செய்யும்,. இறை - வரிப்பொருள்.
ஆனால் இன்றோ பலவழிகளிலும் வரிகளைப் போட்டு, பேருந்துக் கட்டணம் உட்பட விலையேற்றமும் செய்து, மக்களில் பலரைக் குடிகாரர்களாகவும் ஆக்கிக் கொடுங்கோல் ஆட்சியல்லவா நடக்கிறது.