593 உயிராம் வேந்தை உள்ளன்புடன் காப்பர் – குடிகளியல்பு 2
தரவு கொச்சகக் கலிப்பா
(பிரிந்திசைத் துள்ளல் ஓசை)
(வெண்டளையும், கலித்தளையும் கலந்தது)
தருவினொடு கிளைகளுஞ்சார் வல்லியுஞ்சாய்ந் தழிதலெனப்
பெருமகனோ ரிடரெய்திற் பிழைக்கு’ம்’வகை பிறர்க்குண்டோ
மருவலரான் மற்றொன்றான் மகிபனயர் வெய்தாமல்
ஒருமையொடு மன்னானை யுயர்குடிக ளோம்புவரால். 2
- குடிகளியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
பழுதுபட்டுப் பெருமரம் சாயநேரின் அம்மரத்தின் கிளைகளும் அம்மரத்தினைச் சார்ந்த கொடிகளும் கூடச்சாய்ந்து அழியும்.
அதுபோல், மலர்தலை யுலகுக்கு உயிரென விளங்குவ நெல்லும் நீருமாகும். அவ்விரண்டும் வேந்தன் காவல் இல்லையாயின் விளைக்கவோ, வீட்டில் கொண்டுவந்து தொகுக்கவோ, தொகுத்தவற்றை ஆக்கவோ, ஆக்கியவற்றை அமைதியாக இருந்து மக்கள் ஒக்கல் விருந்து முதலானவருடன் தக்கவாறுண்ணவோ, உழைக்கவோ, உலாவவோ, உறங்கவோ, அறம் பல புரிந்து வாழவோ எத்திறத்தார்க்கும் முடியா.
ஆயின், வேந்தனே மாந்தர்க்கு வாய்மை உயிராவன். அவன் எவ்வகைஇடையூறுமின்றிச் செவ்விதின் செங்கோலோச்சுதல் வேண்டும்.
இடருறுவானானால் குடிகளுக்கு வாழும் வகை இல்லை. அதனால், பகைவரால் பிறவாற்றால் வேந்தன் துன்புறாமல் ஆந்தனையும் அன்பும் அறிவாற்றலும் முன்பும் வாய்ந்த நற்குடிகள் ஒருங்கு சேர்ந்து அவனைக் கண்ணிமையிற் காப்பர்.
தரு - மரம். வல்லி - கொடி. பெருமகன் - வேந்தன். இடர் - துன்பம். மருவலர் - பகைவர்.
மகிபன் - வேந்தன்.