37 துன்பம் நீக்கி இன்பம் ஆக்குவோன் மன்னன் – அரசியல்பு 1
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா விளம் மா / விளம் விளம் மா
எந்தவே ளையும் நொந்தவர் துயர்கேட்(டு)
..இடரிழைப் பவன்றன தேக
மைந்தனே யெனினும் வதைத்திட ஒல்கான்
..மாக்களின் சுகநல மன்றிச்
சிந்தனை மற்றோர் பொருளினில் செலுத்தான்
..தீமொழி கனவிலும் புகலான்
தந்தைபோல் தாய்போல் எவரையும் ஓம்புந்
..தன்மைய னேயிறை யன்றோ. 1
– அரசியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”எந்த நேரத்திலும் வேதனைப்படுபவர் துயரத்தைக் கேட்டு அவர்களுக்குத் துன்பம் செய்பவன் தனது ஒரே மகனாகவே இருந்தாலும் அவர்களைத் துன்புறுத்த விடமாட்டான்.
தன் குடிமக்களின் சுகநலத்தை விடுத்து தன் சிந்தனையை வேறு பொருளினிலும் செலுத்த மாட்டான்.
சுடுமொழிகளை கனவிலும் சொல்ல மாட்டான். தந்தை தாய் போல எல்லோரையும் பேணும் தன்மை உடையவனே மன்னவனாவான் அல்லவா!” என்கிறார் இப்பாடலாசிரியர்.