சிலையாக நிற்கும் கடவுள்

============================
கருவூலத்திலிருந்தபடியே
வாசற்படியை வெறிக்க வெறிக்கப்
பார்த்துக் கொண்டிருக்கிறார் கடவுள்.
ஒருத்தரையும் காணவில்லை.
**
முக்கால் பாகம் நிரம்பிய உண்டியல்.
அர்ச்சகர்கூட இல்லாத
அந்தக் கோயிலின்பக்கம்
திருடர்களும் வரத் தயங்குகிறார்கள்.
**
யாரும் தொடப் பயந்த
விபூதித் தட்டு நிரம்பியபடியே
இருக்கிறது.
**
கோயில் வளாகத்து
பூச்செடிகள் பறிக்க ஆளின்றி
இப்போதுதான்
முதற்தடவையாக மண்ணில்
விழுகின்றன.
**
நெடுநாள் ஓய்வெடுத்துக் கொள்ளும்
கோயில் மணி மௌனத்தால்
இப்போது கடவுளுக்கு நன்றி
சொல்கிறது.
**
வாகனத் தரிப்பிடம்
விளையாட்டு முடிந்த மைதானமாய்
பொழிவிழந்து கிடக்கிறது.
**
பக்தர்கள் தங்கள்
கோரிக்கையை அனுப்பிவைக்க
கடவுளின் மின்னஞ்சல்
முகவரி தேடி அலைந்து
கொண்டிருக்கிறார்கள்
**
அரச மரத்தைச் சுற்றிப்
பிள்ளைவரம் கேட்டுக்கொண்டிருந்த
பெண்களெல்லாம்
தாலி பாக்கியம் நிலைக்கத் தங்கள்
அரச ஆணையைப் பின்பற்றத்
தொடங்கிவிட்டார்கள்.
***
எவரேனும் இடுகின்ற
பணத்தின் வழியே பரவக்கூடும்
என்ற அச்சத்தில் யாசகர்களும்
காணாமல் போக
என்ன அதிசயம் இது
கண்ணுக்கே தெரியாத ஒரு
வைரசால் இத்தனை மாற்றமா
என்று மூக்கில் விரல்வைக்கவும்
அஞ்சி உண்மையிலேயே
இப்போது கடவுள்
சிலையாக நிற்கிறார்.
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Mar-20, 2:21 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 240

மேலே