ஏன் மறுத்தாய்
வா..!
சிலிர்த்துக் கொள்
நான் கர்ப்பம் தரித்துவிட்டேன்
வெட்கிய இதயத்திடம்
வினவியது அறிவு
காதல் கருவின்
உரு கெடாமல்
பத்திரமாய்ப் பார்த்திடத்
தெரியுமா உனக்கு..?
ஏன் தெரியாது..?
மாதம் வருடமென
நாட்கள் நீள நீள
கனம் தாங்கி அன்பெனும்
தொப்புள் கொடிவழி
காதல் கருவிற்கு
பாசச் சோறூட்டி
பெருக்க வைக்கத் தெரியும்
கல்யாணப்
பிரசவ அறையில்
பிரவேசிக்கும்
ஆழுமையும் உண்டெனக்கு
சொன்னபடி
காதல் கரு வளர்த்து
கல்யாணப் பிள்ளையை
பெற்றெடுத்தது
இதயம்....!
ரத்த நாளத்தில்
சாதீயம் ஓட
சோற்றுக்கு பதில்
சாதிப் பற்று தின்று
கொழுத்த
மிருகக் கூட்டத்தின் நடுவே
மிருதுவான
காதல் பிள்ளையை
பெற்றெடுத்ததே குற்றமா..?
பிறந்த பிள்ளை
நடக்கத் துவங்கும் முன்
சாதிக் காட்டேரி
பசிக்குப் பருக
அவன் ரத்தம்
படைக்கப்பட்டது..!
காதல்
விளைய சுழன்ற
இரத்த நீரையோ
சாதி நாய்கள் சாலையில்
நக்கி ருசி பார்க்க
நாவறண்டு
நினைவிழந்தது
இன்னொரு இதயப்பை..!
கண்ணிமைக்கும் நேரம்
கௌரவ அரிவாள்
காதல் தலையை
பதம் பார்க்க
துடித்து மாய்ந்தது
இதயம்..!
எத்தனை சாலையின்
பைஞ்சுதைகள்
ரத்தத்தால் பிசையப்பட்டதோ..?
எத்தனை மரங்கள்
கொடூரக் கொலையின்
சாட்சியாளரோ..?
பெற்ற பிள்ளையின்
இதயம் கசக்கி
கௌரவ இடுகாட்டில்
சா(தீ)யால் எரித்துவிட்டு
வாழ வரன் தேடும்
வேடிக்கை சமூகம்..!
போ மகளே வாழ்..!
நம் இனத்தவன்
பிரம்மாண்ட இல்லத்தில்
அடிமட்ட வேலைக்காரியாய்
ஆசை துறந்து வாழ்
ஆனால்
உன்னவன் குடிசையில்
நீ மகாராணியாக வேண்டாம்
போ..!
வாழ்..!!
யாரின் கேள்விக்கு
இவ்வாழ்க்கை பதிலோ..?
சுட்டு விரல்
சுட்டிக் காட்டிய இடத்தில்
சிரித்தபடி நின்றிருந்த
சிறுபுத்திக் கூட்டத்திடம்
கேட்க பலநூறு கேள்விகள்
அதையெல்லாம் புதைத்துவிட்டு
ஒரேயொரு வினா..!
இதயக் கரும்பலகையில்
எழுதியக் காதல் உயிரெழுத்தை
சாதி எச்சில் துப்பி அழித்த
சிறுபிள்ளைக் கூட்டமே..!
உம்மொரு பிள்ளையைக்
காதலென
கரம் பிடித்தவனை
கருணையின்றி வெட்டிவிட்டீரே..!
பல பெண் பிள்ளைகளை
காதலெனும் போர்வையில்
காமத்தின்கை இழுத்தோரை
சாலையிலே வெட்டிவிடும்
ஆண் மகனில்லையோ..?
இத்தனை தயக்கமேன்..!
ஏமாற்றியவன்
உம்மினமோ..?
உம் சா(தீ)க்கு
தெரிந்ததெல்லாம்
காதலுக்கு கொள்ளி வைக்க..!
கயவனுக்கு விளக்கேற்ற..!
நினைவில் கொள்
உன் சா(தீ)ய நெருப்பு
எத்தனையோ
கண்ணீர்த் துளியில்
அவிந்து போகும்
ஒருநாள்..!
அன்று
நீ அலைவாய்
மனிதத்துக்கு ஏங்கும்
மிருகமாய்..!