இரண்டு

வாழ்வென்ற பள்ளத்தில் ஒன்று இன்னொன்றை மூடும்...

விடிந்தது முதல் அவள் உதடுகளில் சிரிப்பு மலர்ந்து கொண்டேயிருந்தது.அவள் மகிழ்ச்சியை முகத்தில் கண்டு அறையிலிருந்த பாழடைந்த கண்ணாடியும் நீண்ட நாட்களுக்குப் பின் கொஞ்சம் பிரகாசமடைந்தது.அவள் தலையை சீவி பூச்சூடி பொட்டு வைத்துக் கொண்டாள்.கருமயிர்களின் மத்தியில் வெள்ளிக் கம்பிகள் போல நரை முடிகள் தழைத்து வளர்ந்திருந்தன.அவள் வயது நாற்பத்தைந்து.

வாசலுக்கும் வீட்டுக்கும் அவள் கால்கள் நடந்துக் கொண்டிருக்க மனம் உள்ளூர பேசுவதற்கான சொற்களை தயார் செய்துகொண்டிருந்தது.

வெளியே காரின் ஹாரன் ஒலிக் கேட்டு பரபரப்படைந்தாள்.கதவின் அருகே சென்று முகத்தை ஒட்டிக் கொண்டு காரிலிருந்து இறங்கி வரும் தன் கணவனை ஆர்வத்தோடு நோக்கியவள், அவரின் பின்புறமிருந்து இறங்கும் இளம் வயதுப்பெண்ணை கண்டதும் ஏதும் புரியாது விழிச் சுருக்கினாள்.

அவள் கணவன் அவளிடம், "என்ன சந்திரா அப்படி பாக்குற, இவ யாருன்னு தானே, உள்ளே வா சொல்றேன்"

சூட்கேஸை எடுத்துக் கொண்டு அவர் பின்னால் சென்றவள் இருவரும் அமர்ந்த சோபாவுக்கு எதிரே சென்று அமர்ந்தாள்

கைகளை பிசைந்துக் கொண்டிருந்த அவள் கணவன் நிமிர்ந்து அவள் கண்களை நோக்கினான்

சந்திரா நான் உன்கிட்ட ஒரு உண்மைய சொல்லப் போறேன்

அவள் கேள்விக் குறியாக முகத்தை வைத்துக் கொண்டாள்

இவப் பேரு பிரியா இவ என்னோட ஒரேப் பொண்ணு

அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள்

இவளோட அம்மா அதான், என்னோட இன்னொரு மனைவி போன வாரம் உடம்பு முடியாம இறந்துட்டா. அவ சாவுக்கு தான் இப்ப போயிட்டு வர்றேன். இப்ப இவளுக்கு ஆதரவுனு யாருமில்லை நம்மள தவிர

அவள் காய்ந்து போன கூந்தலில் ஈரம் பரவ அழுது கொண்டிருக்கும் ப்ரியாவை பார்த்தாள். அவள் தனது கணவனின் இன்னொரு மனைவியின் சாயலோடு தெரிந்தால்.

சந்திரா இந்த உண்மைய ஏன் இத்தனை நாளா நான் மறச்சேனு யோசிக்கிறியா. உனக்கு ஞாபகமிருக்கா நாம இருப்பத்தைந்து வருஷத்துக்கு முன்னாடி குழந்தை இல்லைனு டாக்டர்கிட்ட போனோமே அன்னிக்கு அவர் சொன்னது என் குடும்பத்துக்கு எப்படியோ தெரிந்து என்னை வற்புறுத்தி இவளோட அம்மாவுக்கு கட்டி வைச்சுட்டாங்க. நான் முதலிரவிலேயே அவகிட்ட உன்னைப் பத்தி சொன்னேன்.
அவளும் பெருந்தன்மையா விருப்பமிருந்தா நீங்க என் கூட இருக்கலாம் இல்லைனா சண்டைப் போட்டோ அல்லது செத்துடுவேனு பயமுறுத்தியும் நான் உங்கள கட்டாயப்படுத்தி என்னோட வாழச் சொல்லமாட்டேன். நீங்க உங்க விருப்பம் போல இருக்கலாம்னு சொன்னா. அதுக்கு அப்புறம் அவ மேல எனக்கு ஒரு பரிதாபம் வந்து பின்னால நானும் அவள மனைவியா ஏத்துக்கிட்டேன்.சத்தியமா நான் உனக்கு துரோகம் பண்ணனும்னு நினைக்கல சந்திரா. நான் அடுத்த வாரமே இந்த உண்மைய உங்கிட்ட சொல்லனும்னு தான் வந்தேன் நீ என்னை கொன்னாலும் பரவாயில்லைனு தோணுச்சு ஆனா இங்க வந்ததும் எல்லாம் தலகீழா மாறிடுச்சு.அப்பத்தான் உன்னோட அம்மா அப்பா ரெண்டு பேரும் சாலை விபத்துல இறந்துட்டாங்கனு அழுத. அந்த வலியிருந்து நீ மீளும் வரைக்கும் நான் இந்த உண்மைய சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன். அதுக்கு அப்புறம் ஒரு மாதம் கழித்து ஒருநாள் நான் உன்கிட்ட இதைப்பத்தி பேசலாம்னு இருந்தப்ப நீ உன் பிரண்ட் ஜானுவ பத்தி சொன்னே. அவளோட கணவன் ஏதோ ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்துக் கொள்ள அதை அறிந்த ஜானு சூஸைட் அட்டெம்ன்ட் பண்ணிக்கிட்டானு

நான் இதையே சாக்கா வச்சி உன்கிட்ட கேட்டேன்

சந்திரா இப்படியொரு நிலைமை உனக்கு வந்தா நீ என்ன செய்வ

நீ சிரிச்சிட்டே சொன்னே நிச்சயமா செத்துருவேன்

அன்னிக்கு முழுங்குன உண்மைய நான் இன்னிக்கு தான் சந்திரா கொப்பளிக்கிறேன். இனியும் நான் உனக்கு பொய்யா நடந்துக்க விரும்பல சந்திரா. உன் முடிவு எதுவானாலும் பரவாயில்லை, நான் அதுக்கு கட்டுப்படறேன் சந்திரா.

அவள் மயங்கி சரிந்தாள் இருவரும் அதிர்ந்து அவளைத் தாங்கி கொண்டனர்

ப்ரியா அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு பாருமா

அவள் சந்திராவை சோதனையிட்டு பின் தயக்கத்துடன் அவள் அப்பாவை கண்டாள்

என்னம்மா ஆச்சு

அம்மா ப்ரகணன்டா இருக்காங்க

விழிப்பு வந்து சந்திரா அருகிலிருந்த இருவரையும் நோக்கினாள்.பின் பெரூமூச்சுவிட்டவாறே பேசினாள்.

நான் அன்னிக்கு உங்ககிட்ட சொன்னதென்னமோ உண்மைதாங்க. ஆனா எல்லா டாக்டர்கிட்டேயும் பின் கடவுள் கிட்டேயும் வேண்டியும் நமக்கு குழந்தை இல்லைனு தெரிஞ்சு, நானே உங்ககிட்ட நீங்க வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க சொல்லலாம்னு நினைச்சேன்.ஆனா நீங்களே ஒரு குழந்தையா மாறி என்கிட்ட காட்டின அன்பு தாங்க என்ன சுயநலவாதியா மாத்திடுச்சு.ஆனா விதி எப்படி விளையாடுதுனு பாருங்க.நாம வேண்டி வேண்டி கேட்டப்பலாம் கிடைக்காத குழந்தை இப்ப தாங்க நமக்கு அமைஞ்சிருக்கு. இந்த விஷயத்தை சொல்லனும்னு தாங்க நான் நாளு நாளா உங்களுக்காக காத்திருக்கேன்.
அப்போது கதவருகே ஒதுங்கியிருந்த பிரியாவை விழியாலே அருகே அழைத்தாள்

என்ன படிச்சிருக்கமா

டாக்டர்

டாக்டரா

ஆமா சந்திரா உன் பிரசவத்த நம்ம சந்திராவே பாத்திடுவா இலவசமா எனச் சிரித்தார்

செத்துப் போன எங்கம்மா தாம்மா உங்க வயித்துல குழந்தையா வளருராங்க. என்னை உங்க பொண்ணா நீங்க ஏத்துப்பிங்களாம்மா? என அவள் அழுத விழிகளோடு சந்திராவை நோக்க

நான் சாமிகிட்ட ஒரு புள்ளைய தான் கேட்டேன். ஆனா தாமதமா தந்தாலும் அது உன்னையும் சேர்த்தே எனக்குத் தந்திடுச்சு. இனி நீ என்னோட வளர்ந்த குழந்தை டா செல்லம் என அவளைக் கட்டிக் கொண்டாள்

அந்த பாசப் பிணைப்பை கண்டவருக்கு விழிகளில் நீர் சொட்ட துடைத்தவாறே அருகிலிருந்த ஜன்னல் பக்கம் ஒதுங்கினார்

என்ன ஆச்சுங்க கேட்ட சந்திராவிடம்

யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு அதான்

அம்மா அவரு பொய் சொல்றாருமா. எங்க அவரு அழுதத நாம கண்டுபிடிச்சிட போறோம்னு அந்த பக்கமா விலகிப் போயிட்டாரு

ஏய் வாலு நில்லு என அவளை அடிக்க துரத்தியவரிடமிருந்து சிரித்தவாறே நழுவி ஓடினாள் ப்ரியா

ஒரு இனம் புரியாத சிரிப்பில் சந்திராவின் கவலைகள் கண்ணீராக கரைந்தொழுகின

முற்றும்....

எழுதியவர் : சே.ரவிச்சந்திரன் (24-Mar-20, 8:29 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : irandu
பார்வை : 374

மேலே