அரக்கன் வருகிறான்

காயாத கானகத்தே காயாதிருக்கும் கானகமே!
காய்ந்த பாலைவனத்தில் காய்ந்திருக்கும் பாலைவனமே!
பயப்படாதென் மனதிலே பயப்படாதிருக்கும் மனமே!
கோளாறு சொல்லியே தன் கோளாறு மறந்திருந்த பேருக்கெல்லாம் வந்த அரக்கன் தான் அழிய எல்லோரும் தனிமைப்பட உணர்த்தினான், காணீர்!

காணாத தனிமை கொடியதல்ல,
ஞானமேற்றும்.
சக்தியின் தரிசனம் கிட்டும்.
சுய உணர்தலை நிகழ்ந்தி குற்றங்களைக் களையவல்ல தனிமையே அருமருந்து.
சமூகமாய் வாழ்ந்தாலும் மனதாலே
சமூகவிலகல் செய்தோரே
உடலாலும் விலகுவீரே!
உண்மையில் உத்தமமான வழி தானே!

கூட்டம் கூட்டம் என்று கதைத்தீரே!
மேடைகளிட்டு அதன்மேலேறி குரைத்தீரே!
என்னவாயிற்று அரசியல் பேடிகளே!
ஓடிப்போய் மூலையில் முடங்குவீரே!
கதரெல்லாம் இரத்தக்கரை!
கழுவ வருகிறான் கண்ணுக்கே புலப்படாத அரக்கன் ஒருவன்!
பயப்படாதீர்கள் நல்லோரே!
எது நடக்க வேண்டுமோ, அது நடந்தே தீரும்.
அதை தடுக்கும் வல்லமை உமக்குமில்லை.
எமக்குமில்லை.
மரணம் எப்போது நேரும்? என்பதில் நிச்சயமில்லை.
விஞ்ஞானம் விண்ணைத் தொட்டாலும்,
இராக்கெட்டால் செவ்வாய்க்கிரகத்தைத் தொட்டாலும் அடிப்படை மறந்திடில் அனைத்தும் வீணே!
ஆரோக்கியத்தை எங்கு வாங்குவீர்கள்?
எதைக் கொடுத்து வாங்குவீர்கள்?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Mar-20, 9:43 am)
Tanglish : arakkan varukiran
பார்வை : 1178

மேலே