கொரோனா Covid-19 தொற்றுநோய் சங்கிலியை உடைத்தலில் தனிமனித வகிபாகம் என்ன

Pandemic எனும் கிரேக்கச்சொல்லில் Pan என்பது “எல்லா” எனவும் demos என்பது “மக்கள்” எனவும் அர்த்தப்படுகின்றது. நோய் குறித்த இச்சொல்லின் பிரயோகமானது “நாடுகளின் எல்லை கடந்து எல்லா மக்களையும் தொற்றக்கூடிய உலகத்தொற்று” என்று அர்த்தம் கொள்ள முடியும். உலகின் 190 இற்கும் மேற்பட்ட நாடுகளின் இயல்புநிலையை முடக்கி அத்தனை நாடுகளினதும் பேசு பொருளாகவும், பெருந்தலையிடியாகவும் விஸ்வ ரூபமெடுத்து நிற்கும் இந்த கொரோனா வைரசானது (Covid-19) இலங்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் அனைவருக்கும் சொல்லி தெரியவேண்டியதில்லை. இத்துர்ப்பாக்கிய நிலையானது இந்த வைரசின் சமுகத்தொற்றின் (community spreading) ஓர் விளைவேயன்றி வேறில்லை.

சீனாவில் தொடங்கிய ஆட்டம் உலகெங்கும் வியாபித்துக்கொண்டு செல்வதற்கான காரணம் சுருங்கிப்போன உலகக்கிராமத்தின் மனித – மனித இடைத்தொடர்புகள் என்பது இன்று தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இத் தொற்றுநோய் சங்கிலியை எவ்வாறு உடைப்பது? நோய்ப்பரவுகையை எவ்வாறு இழிவளவாக்கி கொள்வது? இவ் நோய்த் தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டு கொள்வதற்கு எம் ஒவ்வொருவரினதும் வகிபாகம் என்ன? பொறுப்புகள், கடமைகள் என்ன? போன்ற வினாக்களுக்குரிய விடைகளை கடந்த கால படிப்பினைகளின் அடிப்படையில் வெளிப்படுத்த இக்கட்டுரையானது எத்தனிக்கின்றது.

முதலில் இவ் வைரசானது மனித உடலை வந்தடையும் பொறிமுறையை விளங்கிக்கொள்வோம். மனிதன் விலங்குகளுடன் மிக நெருக்கமான தொடர்புகளை பேணும் போது ( உணவுக்காக வளர்ப்பு செய்தல், செல்லப்பிராணியாக வளர்த்தல்) அவ் விலங்குகளில் இயற்கையாகவே காணப்படும் வைரசுக்கள் மனிதனை தொற்றக்கூடிய வைரசுகளாக மரபணு மாற்றம் அல்லது பரிணாம மாற்றம் பெறுகின்றன. (இது சாள்ஸ் டாவின் கூறிய இயற்கைத்தேர்வாகும்) இவ்வாறு ஒரு மனிதனை தொற்றிக்கொள்ளும் வைரசுக்கள் பல வழிமுறைகளினூடாகவும் பலரினையும் சென்றடைகின்றன. மனிதனுக்குள் சென்றதும் தனது DNA அல்லது RNA மூலமாக கைவரிசையை காட்டி நோய்களை விளைவிக்கின்றன.

மேற்காட்டப்பட்ட நோய்தொற்றுகை பிரமிட்டின் அடிப்படையில் தொற்றுகைக்குள்ளான ஒருவரின் நேரடி தொடர்புகளை பேணியவர்களும் வைரசுக்காவிகளாக செயற்படிமுடியுமாதலால் இப்பிரச்சினை சிக்கல் வாய்ந்ததாக அமைகின்றது. பிரச்சினையின் சிறுபகுதி மாத்திரம் வெளித்தெரிய பெரும்பகுதியானது மறைபொருளாக நின்று பெரியளவிலான பரவுகையை ஏற்படுத்தி நிலைமையை சிக்கலாக்குகின்றது. நோய்தொற்றின் மூலகாரணமாக நாம் இல்லையென்றாலும் இன்னொருவருக்கு அதனை பரப்பும் காவியாக இருந்துவிடக்கூடாது. இது எம் ஒவ்வொருவரினதும் தார்மீக கடமையாகும்.
தொற்றுநோய் பரவுதலைப் பற்றி பின்வரும் சமன்பாடு தெளிவாக விளக்குகிறது.
Ro=β×k×D
இங்கு Ro என்பது நுண்ணங்கி ஒன்றின் இனப்பெருக்க தடவைகளை குறிக்கின்றது. அதாவது தொற்றுக்குள்ளான ஒருவரிலிருந்து இலகுவில் தாக்கப்படக்கூடிய மற்ற நபர்களின் எண்ணிக்கையினை குறித்து நிற்கின்றது. இது நோயாளியுடன் ஏற்படுத்தும் தொடர்பின் போதான தொற்றுகை வீதம், தொற்றுக்குள்ளானவர் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணும் தடவைகள் மற்றும் தொற்றுகைக்கு எடுக்கும் காலம் போன்ற மூன்று காரணிகளின் பெருக்கமாக காணப்படுகின்றது.
மேற்படி காரணிகளில் முதற்சொன்ன இரு காரணிகளும் நோய்களுக்கு நோய்கள் வேறுபடக்கூடியவை. ஆனால் நோயாளியுடன் ஏற்படுத்தும் நெருங்கிய தொடர்புகளின் எண்ணிக்கையானது நமது வாழ்க்கைக்கோலம், சமுகப்பின்னணி, கலாசாரம், நவீன தொழினுட்ப பயன்பாடுகள் போன்ற பல விடயங்களினாலும் தீர்மானிக்கப்படத்தக்கது.
உலகம் முழுக்க பேரழிவை ஏற்படுத்திய ஸ்பானிய காய்ச்சலின் தொற்றுகை வீதம் சராசரியாக 1.8 ஆக இருந்தது. அதாவது நோயாளி ஒருவர் சராசரியாக 1-2 நபர்களுக்கு வைரசை கடத்தி உலகினை சுமார் 6 மாதங்களில் சென்றடைந்தது. அதே நேரம் சின்னம்மை நோய்க்கான வைரசின் தொற்றுகை வீதம் 12 ஆகும். எனினும் இந்நோயானது தற்பொழுது உலகிலிருந்து துடைத்தெறியப்பட்டுள்ளது.
சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் கோரோனா வைரசின் தொற்றுகை வீதமானது சராசரியாக 4-5 ஆகக் காணப்படுவதுடன் இவ் வைரசினால் தொற்றலடைந்த ஒருவர் எந்தவிதமான நோய் அறிகுறிகளையும் வெளிக்காட்டாமலே அண்ணளவாக நான்கு நாட்களில் மற்றவருக்கு இதனை காவக்கூடும் என்ற முடிவுகள் அறியப்பட்டுள்ளன.
இவற்றினை கருத்திற்கொண்டு எந்த மாதிரியான உலகத்தில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? சமுகத்துடன் எந்தளவிற்கு நாம் பின்னி பிணைந்திருக்கின்றோம்? என்ற வினாக்களை எம்முள்ளே கேட்போமானால் இந்நோய் பரவுவதை தடுப்பதற்கு நாம் என்ன பங்களிப்பு செய்யமுடியும் என்பது தெளிவாகும். அதாவது சிறிது காலம் பௌதீக ரீதியான சமுகத் தொடர்புகளை வெகுவாக குறைத்துக்கொண்டு வாழ வேண்டியது அவசியமாகின்றது. இதற்காகவே நாடு முடக்கப்படுகின்றது என்பதனை நன்கு விளங்கிக்கொண்டு சுகாதாரமான பழக்கவழக்கங்களை பேணிக்கொண்டு வீட்டிலிருப்பது எந்தவொரு சிந்திக்க தெரிந்த மனிதனினதும் கடமையாகும்.

சதானந்தம் ரகுவரன்
உளவியல் கற்கைகள் பிரிவு
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
2020.03.25

எழுதியவர் : சதானந்தம் ரகுவரன் (27-Mar-20, 4:29 pm)
சேர்த்தது : Raguvaran
பார்வை : 309

சிறந்த கட்டுரைகள்

மேலே