விநாயகர் முருகர் பரமசிவன்

நேரிசை வெண்பா
(ன், ந் மெல்லின எதுகை)

சென்னிமுக மாறுளதாற் சேர்கரமுன் னாலுகையால்
இந்நிலத்திற் கோடொன் றிருக்கையால் - மன்னுகுளக்
கண்ணுறுத லானுங் கணபதியுஞ் செவ்வேளும்
எண்ணரனு நேரா வரே. 69

- கவி காளமேகம்

பொருளுரை:

விநாயகர்க்கு:

தலையும் முகமும் உடலமைப்பற்கு மாறுபட்டிருத்தலாலும், பொருந்திய துதிக்கையானது முன்புறமாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றதனாலும், இவ்வுலகத்தில் ஒற்றைக் கொம்பு அமைந்தவரா யிருத்தவராயிருந்தலினாலும், நிலைபெற்ற நிவேதனமாக வெல்லம் அமைத்து இருப்பதனாலும்,

முருகர்க்கு:

முடியும் முகமும் ஆறு உளதாதலினாலும், பொருந்திய கரங்களும் பன்னிரண்டாக இருத்தலினாலும், இவ்வுலகில் குன்றமே பொருந்தியிருக்கும் இருப்பிடமாக இருந்தலாலும், நிலைபெற்ற சரவணப் பொய்கையிலே அவதரித்ததனாலும்,

பரமசிவனுக்கு:

சிரசினிடத்தே கங்கையாறு உளதாயிருத்தலினாலும், முன்புறத்தே தேர்ந்த ஒளியுள்ள கைகள் நான்கினை உடைத்தாயிருத்தலினாலும், இவ்வுலகில் ஒரு மலை முடியான கைலாச பர்வதம் எனும் ஒன்று இருப்பிடமாயிருத்தலினாலும், நிலை பெற்ற நெற்றிக்கண்ணினை உடைத்தா யிருத்தலினாலும், இம் மூவரும் சமம் என்கிறார் கவி காளமேகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Mar-20, 8:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 76

மேலே