அந்தக் காலம்
குரானா வைரஸ் தாக்கம். 14 நாட்களாக வீட்டிலேயே சிறை. நேற்றிலிருந்து அரசாங்கம் கட்டுப்பாட்டை அதிகப்படுத்தியது. முழு ஊரடங்கு அமலுக்கு வந்த து. டோர் டெலிவரி நிறுத்தப்பட்டது. கைவசமிருந்த காய்கறிகள் தீரும் நிலைமை. முக கவசங்கள் சனிடைசர் தட்டுப்பாடு. ஐந்து ரூபாய் விற்ற முக கவசம் இப்போது 40 ரூபாய். சனிடைசர் 300 ரூபாய். வர்த்தகர்களும் வியாபாரிகளும் மக்களின் நலனை கருதாமல் கொள்ளையடிக்கிறார்கள். வழக்கமாக வாங்கும் கடைக்காரர்கூட எந்த சலுகையும் கொடுப்பதில்லை. இதை நான் எழுத காரணம், இந்த நிகழ்வுகளை நான் அம்மா அடிக்கடி கூறிய பழைய சம்பவத்தை நினைத்து பார்த்து தான். திருவல்லிக்கேணியில் அம்மா எப்பொழுதும் மாத மளிகை சாமான்களை பெரிய தெருவில் உள்ள ஒரு பிரபலமான மளிகைக்கடையில் வாங்குவார்கள். மாதக்கடைசியில் நேரில் சென்று லிஸ்ட் கொடுத்துவிட்டால், சாமான் வீட்டுக்கே வந்து விடும். சம்பளம் வந்தவுடன் காசு கொடுத்தால் போதும் சாமானுடன்இலவசமாக ஒரு முந்திரி திராட்சை கற்கண்டு பொட்டலமும் கிடைக்கும். அதை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் திடீரென்று ஒருநாள் அந்தக் கடையிலிருந்து வீட்டிற்கு இரண்டு மூட்டை அரிசி அனுப்பி வைத்தார்கள். அம்மாவுக்கு எதுவுமே புரியவில்லை. எதற்காக மாத நடுவில் அரிசி மூட்டை அனுப்பிவைத்தார்கள் நாமும் கேட்கவில்லை என்று அம்மாவிற்கு புரியவில்லை. நேரில் சென்ற போது பஞ்சம் வரப்போகிறது. அரிசி கிடைக்காது, கிடைத்தாலும் விலை அதிகமாகிவிடும் அதற்காகத்தான் இரண்டு மாதத்திற்கான அரிசி அனுப்பிவைத்தேன், காசுக்கு அவசரமில்லை மெதுவாக கொடுங்கள் என்றாராம். கடைக்காரர் அம்மா இந்த சம்பவத்தை, கடைக்காரர் உதவி செய்ததை, அடிக்கடி நினைவு கூறுவார். இன்றைய நிலை எனக்கு அந்த சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வந்தது