குமரேச சதகம் - அந்தணர் இயல்பு - பாடல் 2
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
குறையாத காயத்ரி யாதிசெப மகிமையும்,
கூறுசுரு திப்பெருமையும்,
கோதிலா ஆகம புராணத்தின் வளமையும்,
குலவுயா காதிபலவும்,
முறையா நடத்தலால் சகலதீ வினைகளையும்
முளரிபோ லேதகிப்பார்
முதன்மைபெறு சிலைசெம்பு பிருதுவிக ளில்தெய்வ
மூர்த்தம்உண் டாக்குவிப்பார்
நிறையாக நீதிநெறி வழுவார்கள் ஆகையால்,
நீள்மழை பொழிந்திடுவதும்,
நிலமது செழிப்பதும், அரசங்செங் கோல்புரியும்
நிலையும்,மா தவர்செய்தவமும்,
மறையோர்க ளாலே விளங்கும் இவ்வுலகத்தின்
மானிடத் தெய்வம்இவர் காண்
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே! 2
- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்
பொருளுரை:
மயிலில் அமர்ந்து திருவிளையாடல் புரியும் குகனே!, திருப்புல்வயலில் உயர்ந்த மலையின்மேல் எழுந்தருளிய குமரக் கடவுளே!, மறையோர்களாலே விளங்கும் இவ்வுலகத்தின் மானிடத் தெய்வம் இவர் காண்;
குற்றமில்லாத காயத்திரி முதலானவற்றை ஓதும் பெருமையையும், சொல்லப்படும் மறையின் சிறப்பையும், பிழையில்லாத ஆகமங்களின் சிறப்பையும் புராணங்களின் சிறப்பையும், விளங்கும் வேள்வி முதலான யாவற்றையும்
ஒழுங்காக நடத்துவதனால் எல்லா வகையினுமுள்ள கொடிய வினைகளையெல்லாம் நெருப்பைப் போலே நீக்கிக் கொள்வார், சிறப்புப் பெற்று கல்லினுஞ் செம்பினும் மண்ணிலும் தெய்வத் தன்மையை ஏற்றி வைப்பார்,
நன்னெறியிலிருந்து வழுவாமல் ஒழுங்காக இருப்பார்கள், ஆதலினாலே, மிகுதியாக மழைபெய்வதும், மண் வளம் பெறுவதும், மன்னவர்கள் நல்ல அரசாட்சி நிலையாகச் செய்வதும், பெரிய தவசிகள் செய்யும் தவமும், மறையை ஓதும் அந்தணர்களாலே விளக்கமுறும், இவர்கள் மக்களிலே சிறந்தவர்கள்.
விளக்கவுரை:
காயத்திரி – ஞாயிற்றை வழிபடும் மந்திரம். சுருதி - கேட்கப்படுவது. கோது - பிழை,
ஆகமம் - மறையின் அங்கம். புராணம் - பழைமை. யாகம் - வேள்வி. முளரி - நெருப்பு,
தகிப்பார் - அழிப்பார். மூர்த்தம் - நிலை.
கருத்து:
அந்தணர்கள் முறையாகக் குலமுறைப்படி நடந்தால் நாட்டுக்கு நன்மை யுண்டாகும்.