இடையினப் பாட்டு

'யரல வழள என்பவை இடையின எழுத்துக்கள். இவையே முற்றவும் வருமாறு செய்யப் பெற்றது இச்செய்யுள். அங்ங்னம் ஒருவர் பாடக் கேட்கக் கவிஞர் பாடியது.

ஒரு பெண் தன் காதலனைப் பிரிந்து, அந்தப் பிரிவுக்கு ஆற்றாது புலம்புவதாகப் பொருள் கொண்டு விளங்குவது இது.

நேரிசை வெண்பா

விரவலராய் வாழ்வோரை வெல்வா யொழிவாய்
இரவுலவாய் வேலை யொலியே - வரவொழிவாய்
ஆயர்வா யேயரிவை யாருயிரை யீராவோ
ஆயர்வாய் வேயோ வழல். 75

- கவி காளமேகம்

பதவுரை:

வேலை ஒலியே - கடலின் பேரொலியே! விரவலராய் வாழ்வோரை வெல்வாய் ஒழிவாய் - தம் நாயகரோடு கலந்து இராதவராக வாழ்கின்ற பெண்களை வெற்றி கொள்வாய் நீ! அந்தச் செயலை இனிக் கைவிடுவாயாக இரவு உலவாய் - இரவு நேரத்தே நீ அலைகளாய் எழுந்து உலவுதலையும் செய்யாதே! வரவு ஒழிவாய் - நின் வரவினையும் கைவிடுவாயாக; ஆயர்வாயே அரிவை ஆருயிரை ஈராவோ - ஆயர்களின் வாய் ஒன்றே எம்போற் பெண்களின் அரிய உயிரினைப் பிளந்து அழிக்கப் போதாதோ? ஆயர் வாய் வேயோ அழல் - அந்த ஆயர்களின் வாயிற் புல்லாங்குழல் அழல்போல் எம்மை எரிக்கின்றதே!

பொருளுரை: கடலின் பேரொலியே! தம் நாயகரோடு கலந்து இராதவராக வாழ்கின்ற பெண்களை வெற்றி கொள்வாய் நீ! அந்தச் செயலை இனிக் கைவிடுவாயாக! இரவு நேரத்தே நீ அலைகளாய் எழுந்து உலவுதலையும் செய்யாதே! நின் வரவினையும் கைவிடுவாயாக!
ஆயர்களின் வாய் ஒன்றே எம்போற் பெண்களின் அரிய உயிரினைப் பிளந்து அழிக்கப் போதாதோ? அந்த ஆயர்களின் வாயிற் புல்லாங்குழல் அழல்போல் எம்மை எரிக்கின்றதே!

"ஆயர்வாயோ!' என்பதற்குத் தாயரின் வாய்ச்சொற்களோ எனவும் பொருள் கொள்ளலாம்; தாயரின் கண்டிப்பு என்பது கருத்தாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Apr-20, 8:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

சிறந்த கட்டுரைகள்

மேலே