மானுடத்தின் தோல்வி

உடல்வலி இழந்தவன்
உறவுகள் தொலைத்தவன்

இறப்புக்கு அஞ்சி
இருக்க நினைப்பவன்

சுயத்தைக் கொன்று
கையேந்தும் தருணம்

உயிர் ஒளிந்துகொண்டு
உடலியங்கும் தருணம்

இ'ற'ப்புக்கு முன்
இ'ர'ப்பு மொழியில் வரலாம்
ஆனால்
வாழ்வின் வழியில் வரக்கூடாது

பிச்சை கேட்டால்
மனமிருந்தால் கொடுத்து விடுங்கள்
இல்லையெனில்
மரியாதையுடன் மறுத்துவிடுங்கள்

பதிலின்றி காக்க வைப்பது
இறந்தவனை மீண்டும்
கொல்வதாகும்

முதல் முறை
பிச்சை கேட்கும் போதே
அவன் இறந்து போயிருப்பான்

இறப்பவன் உடலினால் மட்டும்
தோற்றவன் அல்ல
உயிராலும் தோற்றவன்

பிச்சைக்காரர்களை
நாம் விரைவாக கடப்பதும்
கண்கள் நேருக்குநேர்
சந்திப்பதை தவிர்ப்பதும்
"இதற்கு நாமும் ஒரு காரணம்"
நம்முள் என்றெழும்
குற்ற உணர்வுதான்

ஒருவருக்கு
இரந்து வாழ்ந்து
கொண்டிருக்கும் கணங்கள்
இறந்து வாழ்ந்து
கொண்டிருக்கும் கணங்களே

பிச்சை எடுக்கும் மனிதர்கள்
மானுட தோல்வியின் எச்சங்கள்
இரந்து வாழ்வது
இழிநிலையின் உச்சமெனில்
ஈயாமல் இருப்பது
எதன் உச்சம்

எழுதியவர் : சூரிய காந்தி (9-Apr-20, 10:38 pm)
சேர்த்தது : சூரிய காந்தி
பார்வை : 154

மேலே