டான்சில்ஸ் ஆபரேஷன்

அப்போது எனக்கு 12 அல்லது 13 வயது இருக்கும். எனக்கு மூச்சு விடுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. எங்கள் குடும்ப டாக்டரிடம் போனேன். அவர் என் நாக்கை நீட்டச்சொல்லி, வாயைத்திறக்கச்சொல்லி எல்லாவிதமான முகாப்பியாசங்களும் செய்யச்சொன்னார். பிறகு வாயே கிழிந்து போகும் அளவிற்கு வாயைப்பிளந்து ஒரு சன்ன டார்ச் லைட்டை அடித்து என் வாயின் நீள, அகல, ஆழங்களைப்பார்த்தார். என்னை இருமச்சொன்னார். உஹ்ஹூ, உஹ்ஹூ வென்று சினிமா பாணியில் இருமினேன், டாக்டர் போதும் என்று சொல்லும்வரை. பிறகு அவர் “ உனக்கு டான்சில்ஸ் இருக்கிறது”. அதை அகற்ற வேண்டும்” என்றார். கேட்டதும் ஒரு கனைகனைத்தேன். “என்ன செய்யணும் டாக்டர்?” என்றேன். “ஆபரேஷன் செய்து அதை அகற்ற வேண்டும்” என்றார். அவர் உடனே “உன் அப்பாவை வரச்சொல். அவரிடம் இது பற்றிப் பேசிக் கொள்கிறேன்” என்றார். நானும் சரியென்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தேன்.

டாக்டர்சொன்னதை அப்பாவிடம் சொன்னேன். அவர் “சரி. டாக்டரிடம் பேசிக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு டாக்டரைப் பார்க்கப் போனார்.
இந்த இடத்தில் நான் எங்கள் குடும்ப டாக்டரைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
அன்றைய நாளில் எங்கள் ஊரில் அவர் ஒருவர்தான் பிரைவேட் டாக்டர். அவர் எங்கள் வீட்டிலிருந்து 5 நிமிட நடை தூரத்தில் இருந்தார். அவர் வீட்டை விட்டு வெளியே நடமாடி யாரும் பார்த்ததில்லை. அவரிடம் கார் கிடையாது. அவர் வெளியே வருவதென்றால் மாட்டு வண்டியிலோ, குதிரை வண்டியிலோதான் வருவார். அவர் எங்கள் வீட்டுக்கு வருவதென்றாலும் நான் அவர் வீடு வரையில் நடந்தே போய் (ஏனென்றால் அவர்வீட்டு வாசலில்தான் வண்டி ஸ்டான்ட் இருந்தது) அங்கிருக்கும் வண்டியை அமர்த்தி, டாக்டரிடம் “வண்டி ரெடி” என்று வண்டியை அவர் வீட்டு வாசலில் நிறுத்தி, சொன்னவுடன் வண்டியில் ஏறி அவர் எங்கள் வீடு நோக்கி வருவார். அந்த வண்டியின் பின்னாலேயே நான் நடந்து வர அவர் வண்டி எங்கள் வீட்டு வாசலில் நின்றவுடன் அந்த டாக்டரின் மெடிக்கல் கிட்டை வண்டியிலிருந்து எடுத்து, டாக்டரைப் பின் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைவேன். வீட்டில் யாருக்கு வைத்தியம் செய்ய வேண்டுமோ அவருக்கான வைத்தியத்தை செய்து முடித்துவிட்டு, எழுத வேண்டிய மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு வாசலில் வந்து வண்டியில் ஏறிக் கொள்வார். அவருடைய ‘கிட்’(kit) டை அவர் வண்டியில் ஏறியவுடன் அவரிடம் கொடுப்பேன். அவர் வீடு சேர்ந்ததும் வண்டிக்காரன் அவருடைய பெட்டியை அவர் வீட்டிற்குள் சென்று அங்கிருக்கும் டாக்டரின் டேபிள்மீது வைப்பான். வண்டி வாடகை ‘டூ அண்ட்ஃப்ரோ ( to and fro)’ யார் வீட்டிற்கு டாக்டர் வருகிறாரோ அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். டாக்டர் விசிட், கன்ஸல்டேஷன் பீஸ் தனி. டாக்டர் யார் வீட்டிற்குப்போனாலும் இது தான் ரொடீன். 2 நிமிஷத்தில் செல்லக் கூடிய அடுத்த வீடாக இருந்தாலும் இதே ப்ரொசீஜர்தான். அதனால் அவரை யாரும் ரோடில் நடந்து பார்த்திருக்கமுடியாது.
ஆனால் அவர் ரொம்பவும் ராசிக்கார டாக்டர். எங்கள் குடும்ப விவரங்கள், வியாதிகள் அத்தனையும் அவருக்கு அத்துபடி.
அவர் வைத்தியம்பார்த்து யாரும் எங்கள் ஊரில் செத்தது கிடையாது. ஏனென்றால் அவர் ஜூரம், ஜலதோஷம், தும்மல், இருமல் போன்ற வியாதிகளுக்கு மிக்சர் செய்து கொடுப்பார் அல்லது மாத்திரை எழுதிக்கொடுப்பார். எப்போதாவது ஊசி போடுவார். சிறு சிராய்ப்புகள், காயங்களுக்குக் கட்டுப் போடுவார். கொஞ்சம் பெரிய காயமோ, அல்லது காம்ப்ளிகேடட் நோயோ இருந்தால், நோயாளியை திருச்சி டாக்டர் யாரிடமாவது அனுப்பிவிடுவார்.எனவே இந்த டாக்டரினால் பரலோகம் போனவர்கள் நில்( Nil).( இதுதான் குடும்ப டாக்டரைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லும் லட்சணமா என்று கேட்காதீர்கள். இதோ ஒரு நிமிஷத்துலே வரேன்னு சொல்லி அரைமணி நேரம், ஒரு மணி நேரம் நாம எடுத்துக் கொள்வதில்லையா? அதைப்போலத்தான் இதுவும்)

என்தகப்பனார் இந்த டாக்டரை பார்க்கப்போனார். டாக்டரும் என் டான்சில்ஸை ஆபரேட் செய்து எடுக்கவேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் எனக்கு மூச்சுத்திணறல், குறட்டை விடுதல், மறதி இவை எல்லாம் ஏற்படும் என்றும் அதனால் கூடிய சீக்கிரம் திருச்சிக்கு என்னை எடுத்துச்சென்று, இல்லை இல்லை, அழைத்துச்சென்று, அவர் திருச்சி மலைவாசல் அருகில் இருக்கும் அவருக்குத் தெரிந்த ஒரு டாக்டரிடம் என்னைக்காட்டி, உடனடியாக ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்றும் அதற்கான ரெகமண்டேஷன் லெட்டர் ஒன்றையும் கொடுத்தார்.
இப்போது இந்த “ஆபரேஷன் டான்சில்ஸு”க்கு யாரை என்னுடன் கூட அனுப்புவது என்பது பிரச்சினை. அப்பாவோ. அம்மாவோ அல்லது வீட்டிலுள்ள வேறு பெரியவர்களோ என்னை திருச்சிக்கு அழைத்துச்செல்ல முடியாத நிலை. எங்கள் ஊர் வழக்கப்படி அந்த ஊரில் எங்கள் சொந்தக்காரப் பையனில் எந்தப்பையன் ஃப்ரீயாக இருக்கிறானோ அவன் தலையில் இந்த வேலையைக் கட்டி விடுவார்கள். அது எங்கள்குடும்பப் பழக்கம். பெரியவர்கள் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். யாராவது ஒரு பையனை துணையாக அனுப்பி வைப்பார்கள். அப்போது அங்கிருந்த என்கசினை என்னுடன் அனுப்புவதாகத் தீர்மானித்து நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மாட்டு வண்டியோ குதிரை வண்டியோ, ரயில் வண்டியோ எதாக இருந்தாலும் எப்படி வலது காலையோ இடது காலையோ வைத்து ஏறவேண்டும், எப்படி இறங்க வேண்டும் என்றெல்லாம் விஸ்தாரமாக எங்கள் வீட்டுப் பெரியவர்களும், அக்கம்பக்கத்து வீட்டுப் பெரியவர்களும் ஆளாளுக்கு கிளாஸ் எடுப்பார்கள் எனக்கும், என் துணையாக வரப்போகும் என் கசினுக்கும். கையில் எவ்வளவு பணம் தேவையோ அதைக்கொடுத்து எங்களுடைய திருச்சி அஜெண்டாவைப் போட்டு எங்கே தங்க வேண்டும், டாக்டரைப்பார்த்தவுடன் எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும், மூஞ்சியை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் பக்கம் பக்கமாம பேசித்தீர்ப்பார்கள். நாங்கள் இருவரும் அவர்கள் விட்டால் போதும் என்று ஒரு மாட்டு வண்டியைப் பிடித்து, அதன் முன்பாரம், பின்பாரம் பார்த்து அமர்ந்து ஸ்டேஷனுக்குப்போய் ரயிலுக்காக அரைமணி நேரம் காத்திருந்து அதில் ஏறி ஒரு வழியாக திருச்சி சேர்ந்தோம். அந்தக் காலத்தில் இந்த 40 மைல்கடக்க இரண்டரை மணி நேரம்ஆகும்.

திருச்சி சேர்ந்தவுடன் ஒரு குதிரை வண்டியைப்பிடித்து நேராக பெரியவர்களின் அட்வைஸ்படி டாக்டர் கிளினிக்குக்குப்போய்ச் சேர்ந்தோம். அவரிடம் எங்கள் குடும்ப டாக்டர் கொடுக்கச்சொன்ன கடிதத்தைக் கொடுத்தோம். அவரும் என்னை எதிர்பார்த்திருந்தார் என்று தெரிந்தது.
“பெரியவர்கள் யாரும் வரவில்லையா” என்று கேட்டார்டாக்டர். உடனே என் கசினைக்காண்பித்து அவன் என்னைவிட 6 மாதம் பெரியவன் என்று சொன்னேன். டாக்டர் சிரித்துவிட்டு நீங்க ரெண்டு பேர்மாத்திரம் தானா என்று கேட்க ஆமாம் என்று தலையை ஆட்டினோம். அரை மணி நேரம் என்னை அப்படி, இப்படி வாயைத் திறந்து மூடச்சொல்லி என்னை ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார். என் கசின் வெளியே உட்கார்ந்து அந்த கிளிக்கின் மோட்டு வளையைப்பார்த்தபடி இருந்தான்.
உள்ளே தியேட்டரில் என்னைப் படுக்க வைத்து “இதுக்கு முன்னாலே ஏதாவது ஆபரேஷன் பண்ணிக்கிட்டதுண்டா” என்று கேட்க நான் இல்லை என்று தலையை ஆட்டினேன்.
”இப்ப க்ளோரோபார்ம் கொடுப்போம். அப்ப நீ மயக்கமாயிடுவே. ஆபரேஷன்போது உனக்கு எந்த வலியும் தெரியாது. அதனாலே நீ பயப்படாம தைரியமா இரு” என்று பயமுறுத்தினார் டாக்டர்.
உரல்லே தலையைக்கொடுத்தாச்சு. உலக்கைக்குப் பயந்தா முடியுமா?
வேறு ஒரு டாக்டர், டாக்டர்னு தான் நான் அப்போ நெனச்சேன்., அவர் தன் மூக்கைத்துணியால் மூடியபடி க்ளோரோபாரம் கொடுத்தார். நான் கொஞ்சம் கொஞ்சமாக இந்த உலகைவிட்டு எங்கேயோ போய்க்கொண்டிருப்பதுபோல உணர்ச்சி. ஒரு வேளை செத்துப் போய்க்கொண்டிருக்கோமோ என்ற பயம். எல்லாம் கொஞ்சம்கொஞ்சமாக மங்கிக்கொண்டு வந்தது. முன்னே பின்னே நான் இந்த நிலையை அனுபவித்ததில்லை. பிறகு என்ன ஆயிற்று என்றே தெரியாது.

கண்விழித்துப் பார்த்தேன். டாக்டர் “ஆபரேஷன் முடிஞ்சிடுத்து. வலிச்சதா” என்று கேட்டார் “இல்லை” என்று சொல்ல குரல் எடுத்தேன். என்னால் பேச முடியவில்லை. டாக்டர்” உஷ், பேசக்கூடாது” என்றார். பின்னே ஏன் வலிச்சுதா என்று கேட்டார் என்று புரியவில்லை. என் கசினைக் கூப்பிட்டு ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சிடுத்து. என்று சொல்ல நான் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது, என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்று விவரமாக சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது ஐஸ்கிரீம், ஐஸ்கிரீம் என்று டாக்டர் ஏதோ சொல்வது போல் காதில் விழுந்தது. டாக்டருக்கு எதிரிலேயே பக்கித்தனமாக ஐஸ்கிரீம் சாப்பிடலாமா என்று கேட்க வேண்டாமென்று சும்மா இருந்துவிட்டேன். டாக்டரிடம் அவருக்குக் கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுத்து விட்டு நாங்கள் இருவரும் புறப்பட எத்தனித்தோம். என் கசின் வெளியே போய்ஒரு குதிரை வண்டியை பேசி கூப்பிட்டு வந்திருந்தான். வண்டி வந்ததும் நான் எழுந்து வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மயக்கம் வந்தது. என் கசின் என்னைத்தாங்கிப்பிடிக்க அந்த வண்டிக்காரரின் 'உதவியுடன் வண்டியில் ஏற்றினான்.

நாங்கள் அங்கே இரட்டைமால், இல்லை ஒத்தைமால் ( மறந்துவிட்டது) தெருவில் இருந்த என் சின்னப்பாட்டி (என் அப்பாவின் சித்தி)யின் வீட்டிற்குப்போனோம். என்னை என் கசினும், வண்டிக்காரருமாக சேர்ந்து இறக்கிவிட்டு அவர்கள் தோளில் கைபோட்டபடி, என் முழு வெயிட்டையும் ( என்ன பிரமாத வெயிட், 25 கிலோ கூட தேறமாட்டேன்) அவர்கள் மீது போட்டபடி, என்னைத் தாங்கிப்பிடித்து அந்த வீட்டு த் திண்ணையில் போட்டார்கள். வண்டிக்காரர் வாடகையை பெற்றுக்கொண்டு என்னை ஜாக்கிரதையாகப பார்த்துக்கச் சொல்லி என் கசினுக்கு அட்வைஸ் கொடுத்துவிட்டு புறப்பட்டுச்சென்று விட்டார்.

அவர் போன உடன் என் கசின் குரல் கொடுக்க உள்ளே இருந்த என் சின்னப்பாட்டியின் பெண், அதாவது என் அத்தை, உள்ளிருந்து வந்து “ என்னடா? ரெண்டு பேருமா எப்படா வந்தேள்? “ என்று கேட்டபடி “ அம்மா, யார் வந்திருக்கான்னு பாரு” என்று குரல் கொடுக்க உள்ளே இருந்த சி. பாட்டி அங்கு வந்து “ என்னடா, திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்துட்டேளே. சரி உள்ளே வாங்கோ” என்று அழைக்க நாங்கள் கொண்டுவந்திருந்த ரெண்டு பைகளுடனும் உள்ளே போனோம்.
என் கசினை குசலம் விசாரித்து விட்டு, பாட்டி என்னைப் பாத்து” என்னடா, இப்படித் துரும்பா இளச்சுப் போயிட்டே” என்று தன் வழக்கமான பல்லவியை ஆரம்பித்தார். அவர் என்னைப் பார்க்கும் ஒவ்வொரு தரமும் “ என்னடா, போன தடவைக்கு இந்த த்தடவை இப்படி இளைச்சுட்டியேடா” என்று கூறுவது வழக்கம். அவர் சொல்வது மட்டும் உண்மையாக இருந்திருந்தால் இத்தனை வருஷத்தில் நான் காணாமல் போயிருக்க வேண்டும். யார் செய்த புண்ணியமோ , பாவமோ நான் இன்னும் உயிரோடிருக்கிறேன். நான் பதில் சொல்ல முயன்ற போது பேச முடியாததால் பேச்சு வரவில்லை. “என்னடா, ஒண்ணும் பேசாம ஊமக்கோட்டானாட்டம் இருக்கே” அப்படின்னு சொல்லி என்னை ஊமைக்கோட்டான் ஆக்கி விட்டார். உடனே அருகிலிருந்த என் கசின் எனக்கு ஆபரேஷன் நடந்ததையும், ஆபரேஷன் முடிந்து கிளினிக்கிலிருந்து நேராக இங்கேதான் வருகிறோம் என்பதையும் சொன்னான். திடுக்கிட்ட பாட்டி “ ஏண்டா? எங்க கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, நம்ம வீட்டிலிருந்து யாராவது வந்திருப்போமில்லே. அவனுக்கு ( அதாவது என்அப்பா) நாங்க இங்கே இருக்கிறது தெரியாதா? ஒரு லெட்டர் போடப்படாதா? எங்க கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, நாங்க பாத்துக்க மாட்டோமா” என்று கத்த ஆரம்பித்து விட்டார். பாட்டி முந்தாநாள் உங்களுக்கு அப்பா லெட்டர் போட்டார். அதை நான்தான் இந்தக் கையாலே போஸ்ட் பண்ணினேன் அப்படின்னு சொல்ல முடியாம கையைக் காலை எனக்குத் தெரிந்த வரையில் ஆட்டினேன். “என்னடா சொல்லவரான் இவன்?” என்று பாட்டி கேட்க என் கசின் குறளுக்குப் பரிமேலழகர் உரை போல என் அபிநயத்துக்கு உரையாக கடிதம் முந்தாநாளே நான் போட்டதை பாட்டியிடம் சொன்னான்.
அப்ப ஒரு குரல் போஸ்ட்” அப்படின்னு. நான் அதை என்கையில் வாங்கினேன். பார்த்தால் என் கையால போஸ்ட்செய்த எங்க அப்பா பாட்டிக்கு எழுதின போஸ்ட்கார்ட். பாட்டியிடம் கொடுத்தேன். என்கசின் எனக்குப்பின்னணி கொடுத்தான்” இதுதான் நாங்க போட்ட போஸ்ட். அது இப்பத்தான் வந்து சேந்திருக்கு”
என்றான். பாட்டி போஸ்ட் ஆபீஸை தன்னுடைய பாஷையால் “பாழாப்போற போஸ்ட்காரன் இப்படியா பண்ணுவான். ஒரு ஆபத்து, அவசரத்துக்குன்னா இவனை நம்ப முடியாது போலிருக்கே. அதே “எங்க காலத்துலே ‘இப்படின்னு’ போஸ்ட்பண்றதுக்குள்ளே ‘அப்படின்னு’ அங்கே போய்சேந்துடும்” என்று தன் கால கதையைத்துவங்கிவிட்டாள். லெட்டர் வந்து சேந்ததா இல்லியா, விட்டுத்தள்ளுங்கோ என்று இதை எப்படி ஊமை ஜாடையில் சொல்வதென்று நான் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில்
“ ஏண்டா, அவனுக்குத்தான் புத்தி இல்லை ( எங்க அப்பாவைப் பற்றித்தான் சொல்கிறார். எப்பவும் என்னைத் திட்டற அப்பாவை வாய்நிறையத்திட்டும் பாட்டியைக்கண்டு நான் அடைந்தது அதிர்ச்சியா, ஆனந்தமா என்று இன்று வரையிலும் எனக்குப் புரியவில்லை.). நீ நேரா இங்கே வர வேண்டியதுதானே” என்றார் நான் பதில் சொல்லும் நிலையில் இல்லை. உடனே என்கசின்” அவனாலே இன்னும் மூணு நாளைக்குப் பேச முடியாது” என்ற உண்மையைச்சொல்லி நான் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்று டாக்டர் சொன்னதை அவரிடம் விளக்கினான். சூடாகவோ, கெட்டியாகவோ, புளிப்பாகவோ, காரமாகவோ தொண்டைப்புண் ஆறர வரைக்கும் சாப்பிடக்கூடாது. ஆனால் ஜில்லுனு சாப்பிடலாம். ஐஸ்கிரீம் அடிக்கடி சாப்பிடலாம் என்று டாக்டர் சொன்னார்னு சொன்னானோ இல்லையோ, அப்படியே அந்த டாக்டரைக் கட்டிப் பிடிச்சி 1000 தேங்க்ஸ் சொல்லணும்போல இருந்தது. ஆனால் டாக்டர் அருகில் இல்லாத தனால் தப்பினார்.
“ ஆபரேஷன் ஆன உடம்பா, மூஞ்சியே சரியில்லையே ( எப்பவுமே அப்படித்தான்). பாவம் ரெஸ்ட் எடுத்துக்கட்டும்.” என்று பாட்டி உள்ளே சென்றார்.
இந்தப்பாட்டி எங்கள் குடும்ப ஸ்பெஷல். எதுகை மோனையாக, ஏற்ற இறக்கத்துடன், வார்த்தை ஜாலத்துடன், ஒரு சொல்லுக்கு ஒரு பழமொழியுடன், காளிதாசனே தோற்றுப்போகும்வகையில் உபமான, உபமேயங்களுடன், கண்,காது மூக்கு வைத்து எதையும் விஸ்தாரமாக பேச ஆரம்பித்தால் எப்பேர்ப்பட்ட சிடுமூஞ்சிகளும், ஆர்வத்துடன் சிரித்தபடி ( அது எவ்வளவு சோகமாக இருந்தாலும்) கேட்டு ரசிப்பார்கள். சக்கர வட்டமாகப்பேசுவதிலும் சமயத்திற்கேற்ப பேசுவதிலும் சமர்த்தர் அவர். சூரர். வேண்டுமென்றால் சூரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.எங்கள் குடும்பத்தில் அவருக்கு இணை என்று சொல்ல இப்போது ஒரே ஒருவர்தான் இருக்கிறார்.

பாட்டி பேச்சுக்கு முன் அவர் மகள், அதாவது என் அத்தையின் பேச்சு எடுபடாது என்பதால் அவர் இதுவரை மௌனம் காத்தார். பாட்டி உள்ளே போன உடன் அத்தை ஏதோ ஜாடை காட்டினார். எனக்கு ஒன்றும்புரியவில்லை. என் கசின் “ அவன்தான் பேசக்கூடாது. நீங்க பேசினா அவனுக்குப்புரியும். அதனாலே நீங்க தாராளமா பேசலாம்” என்று சொன்னாலும் ஒவ்வொரு தடவையும் ஜாடை காட்டி பிறகு ஞாபகம் வந்து பேசுவார். ஆனாலும் நான் அங்கு தங்கி இருந்த மூணு நாளும் அவர், ஊமை ஜாடையையும் பேச்சையும் கலந்து ஒரு காக்டெயில் பண்ணி பேசினார். அங்கிருந்த மூணு நாளும் ஒரு நாளைக்கு மூணு வேளை ஐஸ்கிரீம் கிடைத்தது. நான் ஒரு ஐஸ்கிரீம் பைத்தியம். ஒரு ஐஸ்கிரீமுக்காக எவ்வளவு ஏங்கி இருக்கிறேன் என்பது என்னைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. எங்கள் கிராமத்தில் ஐஸ்கிரீம் கிடைக்காது. குச்சி ஐஸ்தான் கிடைக்கும். அதை வாங்கிச்சாப்பிட பெரியவர்கள் விட மாட்டார்கள். திருச்சியிலிருந்து என் வயது உறவினர்கள் வந்து அவர்கள் ஐஸ்கிரீம் சாப்பிடும் கதையைச் சொல்லும்போது எனக்கு பிறவி எடுத்ததன் பயனே ஐஸ்கிரீம் சாப்பிடுவதுதான் என்று தோன்றும். ஐஸ்கிரீம் சாப்பிடாத வாயென்ன வாயோ என்ற ஏக்கம் என்னை வாட்டி எடுத்தது. ஆனால் இன்று ஒரு நாளுக்கு மூணு தரம்ஐஸ்கிரீம் என்று நினைத்த மாத்திரத்தில் மனது, உடம்பு முதற்கொண்டு புளகாங்கிதம் அடைந்தது. ஆனால் இந்த பாழாப்போன ஆமனசு இருக்கே. இதை என்னன்னு சொல்ல. சப்புனும், தித்திப்பாகவும் சாப்பிட்ட நாக்கு ஒன்றரை நாளுக்குள் தோசைக்கு ஆசைப்பட ஆரம்பித்தது. அன்று வீட்டில் தோசை பலகாரம்( மற்றவர்களுக்குத்தான். எனக்கில்லை. எனக்கு உப்புச் சப்பில்லாத கஞ்சி, மற்றும் ஐஸ்கிரீம் மட்டும்தான்) நான் அத்தையிடம் தோசையைக்காட்டி எனக்கு வேண்டும் என்ற என் ஆசையை என் அப்போதைய பாஷையில் விளக்கினேன். என் அத்தை அரைகுறை ஜாடையும் பேச்சும்கலந்த அவர் பாஷையில்” பேசப்படாது. தோசை கிடையாது, பூசைதான்” என்று சொல்ல என் பாட்டி “ என்னடி, அவன் என்ன கேக்கறான்? “ என்று கேட்க என்அத்தை “ அவனுக்குத் தோசை வேண்டுமாம்” என்றவுடன் என்பாட்டி தன் வழக்கமான குரலில்” பாவம். குழந்தை. சாப்பிடட்டும்” என்று. ( ஏனோ தெரியவில்லை விளக்கெண்ணை குடித்த நாளிலும், உடம்பு சரியில்லா நாளிலும், வேறு எதையும் சாப்பிடக்கூடாது, வெறும் ரசம்சாதம்தான் என்று கட்டுப்பாடு இருக்கும்பொழுதும், அப்பொழுது பார்த்து எனக்குத் தோசை சாப்பிட வேண்டும் என்ற தணியாத ஆசை வந்துவிடும்)
பாட்டிகளுக்கே உரிய extra பாசத்துடன் ஒரு விள்ளல் தோசையை என்பக்கம் நீட்ட” டாக்டர் கூடாதுன்னு சொல்லி இருக்கார். இது தொண்டை சமாசாரம். ஏதாவது ஆயிடுத்துன்னா, டாக்டருக்கு யார் பதில் சொல்றது?” என்று அந்தத் தோசை விள்ளலைப் பாட்டி கையிலிருந்து வெடுக்கென்று பிடுங்கித் தன் வாய்க்குள் லபக்கென்று போட்டுக்கொண்டு “ தோசைக்கு பிரமாதமா இருக்கு” என்று கூறி என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டு அதை சுவைத்துச்சாப்பிட்டார். எனக்குக் கடுப்பா இருந்தாலும் எதுவும் பேச முடியாத மௌனியா இருந்தேன்.
மூணு நாள் ஐஸ்கிரீம் கெடு முடிஞ்சி ஊருக்குப் புறப்படும் போது அப்பாடா நாளையிலிருந்து நமக்கு வேண்டியதைச் சாப்பிடலாம் என்று நினைத்த போது ஏதோ விடுதலை கிடைத்ததைப்போன்ற உணர்ச்சி. மூணே நாளுலே என ஆருயிர் ஐஸ்கிரீம் திகச்சிப்போச்சு. என்ன வாழ்வுடா இதுன்னு நெனச்சி புறப்படுமுன் “ போயிட்டு வரேன்” என்று மெல்லிய குரலில் நான் பேசிய போதும் என் அத்தை திக்கியபடி“ பெ...பெ.. நீ....... ப..த்...ரமா........ ஊ...ருக்...கு போயிட்டு ...வா.. என்று கைகளை ஆட்டி, ( தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சொல்லாலுவாங்க. ஆனால் இந்த மூணு நாள் பழக்கம் எது மட்டும்னு அப்ப தெரியலை) கோணல்மாணலாக வாயை அசைக்க “ அடுத்த தரம் நீ வரும்போது உனக்கு வேண்டியது பண்ணித்தரேன்” என்ற என் பாட்டியின் பின்னணிக் குரலில் எனக்கு டாடா சொன்னார். நானும் என் கசினும் வெற்றிகரமாக எங்கள் திருச்சி விஜயத்தை முடித்துக்கொண்டு operation success என்று சொல்லியபடி ஊர் திரும்பினோம். அதற்குப்பிறகு நெடுநாள் நான் ஐஸ்கிரீம் கேட்கும்போதெல்லாம் “ உனக்கு ஜலதோஷம் பிடிச்சுடும், அதனாலே ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது ” என்று சொல்லிவிட்டார்கள்.

எழுதியவர் : ரா. குருசுவாமி (4-May-20, 12:32 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 38

சிறந்த நகைச்சுவைகள்

மேலே