கரோனா - மருத்துவ வீரர்களுக்கான புகழ் வணக்கம்
காற்றின் தேசம் எல்லாம்
கண்காணா கரோனா கலந்திருக்க!
அகந்தை அழிந்த மாந்தர்
தம்உறைவிடத்தே உயிர்பயத்தில் உறைந்திருக்க!
நம்பும் கடவுள்கள் வீற்றிருக்கும்
இல்லங்களின் நடைகள் சாத்தியிருக்க!
காக்கும் தெய்வங்கள் எல்லாம் கண்முன்னே
மருத்துவர்கள் செவிலியர்கள் வடிவில்...
கரோனாவை எதிர் கொள்ளும்
புறநானூற்று வீரர்களாய் முன்வரிசையில்...!
மெல்லிய முகமதில் முகக்கவசம் தந்த வடு!
தாகம் வந்தும் தண்ணீர் சுவை அறியா நாக்கு!
உடல் வெப்பம்தீர வியர்வையில் குளித்த உடல்!
உற்ற உறவினரையும் பிரிந்து தனித்திருக்கும் சோகம்!
மனிதம் கொண்டு மனித உயிர் மீட்க்கும்
போராட்டக்களத்தில்...
நீவீர் அனுபவிக்கும் இன்னல்கள்…!
உம் அர்ப்பணிப்புகள்..!
மருத்துவ சேவைமேல் நீவீர் கொண்டக் காதல்!
நினைக்கையில் கண்களும் குளமாகிறது..!
மருந்து ஆய்ந்து கொடுக்கும் அறவோன் நான்..!
இன்னுயிர் கழியினும் நுண்ணுயிரி கொண்ட
உயிர் மீட்பேன்..!
அதுவே எம்பணி மகத்தான மருத்துவப்பணி - என்று
கண்ணயராது…
காலநேரம் பாராது…
புன்னகை மாறாது…
மானுட சேவையாற்றும்
எம் மருத்துவத் தோழமைகளே!
உம்பணியை மெச்சுகிறோம்!
மனம்நெகிழ்ந்துப் பாராட்டுகிறோம்!
உங்கள் பாதங்களில் எங்கள்
நன்றியினைக் காணிக்கையாக்குகிறோம்!
வெல்லட்டும் உங்கள் பணி
மீளட்டும் உலகம்
கரோனாவின் பிடியிலிருந்து..!