597 இழிகுரவர் எந்நாளும் இயல்நெறி ஒழுகார் - பொய்க்குருவின் தன்மை 1

கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நிரையசையில் தொடங்கினால் அடிக்கு 12 எழுத்து;
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

ஒளியை வாற்புறம் போக்கியோர் செவ்வுரு
நளியி ருட்டி னகருதல் போற்கற்ற
தெளிவெ லாமொரு பாங்கரெ றீஇச்செல்வர்
இளிகொள் தீநெறி யீனக் குரவரே. 1

- பொய்க்குருவின் தன்மை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

செவ்வட்டை என்னும் சிற்றுயிர் எல்லாருக்கும் எஞ்ஞான்றும் எவ்விடத்தும் இயல்பாகவே விரும்பும் இன்ப ஏதுவாம் ஒளியை வாற்புறமாகிய பின்புறம் தள்ளி எவரும் வெறுக்கும் துன்ப ஏதுவாம் நிறைஇருளை விரும்பி முன் ஊர்ந்து செல்லும்.

அதுபோல், கற்ற நூற்பொருளின் தெளிவாம் நன்மைகளை யெல்லாம் ஒருபுறம் புறக்கணித்து ஒதுக்கிவிட்டு மனம் போனபடி இழிந்த தீநெறியிலே செல்வர் பிறப்பற முயலாப் பேதையிற் பேதையாம் குருமார்.

செவ்வுரு - செவ்வட்டை. நளியிருள் - நிறைந்த இருள். நகருதல் - ஊர்தல். எறீஇ - எறிந்து; ஒதுக்கி.
இளி - இழிந்த, குரவர் - குருமார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-May-20, 8:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே