73 அறிவில்லாத ஆசான் ஆட்டுத்தோல் புலியே - பொய்க்குருவின் தன்மை 9
கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நிரையசையில் தொடங்கினால் அடிக்கு 12 எழுத்து;
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
ஒருமை யாய்த்தன் உதர நிமித்தமே
தரும வேடந் தரிக்குதல் வெம்புலி
புருவை தன்னைப் புசிக்கப் புருவையின்
சருமம் பூண்டங்குச் சார்தல் நிகர்க்குமே. 9
- பொய்க்குருவின் தன்மை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”தனித்துத் தன் வயிறு வளர்த்தற் பொருட்டு ஆசிரியக் கோலம் பூணுவது, கொடிய புலியானது ஆட்டை உண்பதற்கு ஆட்டுத் தோலைப் போர்த்தி அங்கு செல்வதற்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
ஒருமை - தனிமை. உதரம் - வயிறு. தரும வேடம் - ஆசிரியக் கோலம், புருவை - ஆடு.
சருமம் - தோல்.