ஒரே கடல்
"இந்த மாசத்தில இது ஏழாது வாட்டி,
தாமஸ் அவனுக்க மவனுக்கு குண்டு ஆழமா இறங்கிட்டுனு சொல்ராங்க"
இராமேஸ்வரம் மண்டபத்தில் யாரோ யாரிடமோ வருத்தப்பட்டு கொண்டிருந்த அதே நேரத்தில்,
மேரி இங்கே குமரியில் முந்தைய நாள் ஊறலில் போட்ட மீனை கருவாட்டுக்கு காய வைத்து கொண்டிருந்தாள்.
'என்ன பிள்ளே, ஏலத்தாண்ட காணோம்' என்றவாறு திண்ணையில் வந்தமர்ந்தாள் ரோஸம்மா.
"ஆமாக்கா, மேலுக்கு மிடியல, அதான் நாள பாத்துகலாம்னு வரல, யாவாரம் ஆச்சாக்கா...?"
'எங்க , கூடைல பாதிய கருவாட்டுக்கு தான் ஆக்கனும், பாத்து இரு மோளே. தேதி எப்பனு சொன்னாவ?'
" அடுத்த பதினெட்டுனு சொல்லிருக்காக, வலி இருந்தா முன்னாடியே வர சொன்னாவ" என்றாள் வயிற்றை தடவியவாறு.
'தாமஸ் எப்ப கிளம்புனான், குடிக்கிறது இல்லயே'
"இல்லக்கா, அந்தோணியார் திருளாக்கு அப்றம் நிப்பாட்டிட்டாவ, சத்தியம் பண்ணிருக்காவ, ஜோஸு பய தான் உசுப்புவான் ஆனா இவுக போறதில்ல. மனுசன் நேத்து காலைல கஞ்சி தண்ணி குடிக்காமலே கெளம்பிட்டாக கடலுக்கு"
'இங்க கரகடல்ல பிடிக்க சொல்ல வேண்டியதான, அங்க போனா தான் கடலோடியா என்ன'
"சொல்லி பாத்தாச்சுக்கா கேட்க மாட்டவ, வள்ளம் வாங்கி அதுல பிள்ளையல ஏத்துறவன் தான் அப்பன்னு சொல்லி வாய அடைப்பாவ"
'நல்லது தான புள்ள , சம்மாட்டியார் பொஞ்சாதினா ஒரு இது தான'
"இல்லக்கா ,இப்பலாம் ராவு ஒரு கண்ணுக்கு தூக்கமில்ல, அதுவும் அருள் அண்ணனுக்கு அப்படி நடந்த பொறகு...."
'கண்டத போட்டு நெஞ்ச கொளப்பாத, அருளுக்கு அதுனு இருக்கு ஆயிட்டு, ஆனா இன்னமும் சுபாஷினி அருள் வரும்னு தான் நம்பிட்டு இருக்கு, சொல்ல முடியாது மேரி, தோமையர் மவன் ஏழு மாசம் கழிச்சு வந்தான்ல'
"தோமையர் மருமக இப்ப கொள்ளாமா"
'யாரு ஜான்சியா, திருவந்தரம் பொயிட்டு தான் இருந்தா கொஞ்சம் தேறி வந்துச்சு, தோமையர் போனதுக்கு பின்னால ஆஸ்பத்திரி போகவும் வசதியில்லாம இருக்கா, ஜானும் என்ன பண்ணுவான் , நாயா உழச்சாலும் மாசம் பத்து கூட தர மாட்டுக்கானுக அந்த பேக்டரிலனு சொல்றான். மாதாவ நம்பி தான் காலம் தள்ளுது பிள்ள'
..............
'என்ன எழவோ, எங்க அய்யா காலத்தில இந்த புத்து நோய கேட்டதே இல்லயாம், இப்ப தெருவுக்கு ரெண்டு இருக்கு" என்றவாறு திண்ணையை காலி செய்தாள் ரோஸம்மா.
வானொலியில் 'கனிமங்கள் ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது' என்றவாறு செய்தி தொகுப்பு முடிய ஒலிச்சித்திரம் தொடங்கியது.
"'தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை..."'
படகோட்டி பாடலை கேட்டு கண்ணயர்ந்து படுத்ததுதான் தெரியும் தூங்கியே விட்டாள்.
அயர்ந்து தூங்கியவளை கூரையில் பொத் பொத்தென்று விழுந்த மழைத்துளிகளின் சத்தம் எழுப்பின.
முந்தானையை சரி செய்தவாறு திண்ணைக்கு போனவள் காய போட்டிருந்த மீன்களை கூடையில் போட்டவாறே கடற்புரத்தை நோக்கினாள். கருமேகம் சூழ்ந்திருப்பதை கண்டு மனதிற்குள் ஜெபித்துக் கொண்டே மேல்புறம் பார்த்தாள்.
சிமிண்ட் குடையின் அடியே பட்டாணிகளை கொறித்தவாறு கடல் அலையை இரசித்து கொண்டிருந்தார்கள் ஒரு புதுமண தம்பதிகள்.
அவர்களுக்கு கருமேகங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
$வினோ...