56 ஆசானால் அன்றி நூற்பயன் அறிய முடியாது - ஞானாசிரியன் பெருமை 3
கலிவிருத்தம்
நாட்டமின்றி யொளியெப் பயனைநல்கும் மனையில்
பூட்டுபொன் திறவுகோ லினையலாது புகுமோ
வேட்டகத் தரியநூல்க ளுளவேனு மினிதாக்
காட்டருட் குரவனின்றி யெவர்காண்பர் பயனே. 3
- ஞானாசிரியன் பெருமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”விருப்பமில்லாது கண்களை மூடிக் கொண்டால் ஒளி எந்தப் பயனைத் தரும்? வீட்டில் உள்ள பூட்டிற்குத் திறவுகோல் இல்லாமல் புக முடியுமா! முடியாது அல்லவா! அதுபோல, வீட்டில் அருமையான நூல்கள் பல இருந்தாலும் சுவைபடச் சொல்லித்தர அருமையான ஞானாசிரியன் இல்லாமல் யாரால் நூலின் பயன் காண முடியும்?” என்று கேட்டு, நூல்களின் பயனை அறிய நல்ல ஆசான் வேண்டும் என்று இப்பாடலாசிரியர் வலியுறுத்துகிறார்.