ஏழை விவசாயி

தரிசா கிடந்த நிலத்துல
பாறையெல்லாம் பேத்தெடுத்து
பாத்து பாத்து பொலிகட்டி
கல்லெல்லாம் பொறுக்கி போட்டு
கழனியாக்க பாடுபட்டு
மாட்டு சாணத்தையும்
ஆட்டு புழுக்கையும்
கோழி எருவையும்
பாத்து பாத்து பதப்படுத்தி
மண்புழுவவிட்டு உரமாக்கி
நிலத்துக்கு போட்டுபுட்டு
ஆங்காங்கே கடன்வாங்கி
ஆளக்கூட்டி தண்ணிபாத்து
ஆத்தாகிட்ட வேண்டிக்கிட்டு
ஆழ்துளை கெணறுவெட்டி
கொஞ்ச கிடைச்ச தண்ணிக்கு
சின்னதா ஒரு மோட்டார போட்டு
வறண்டு கெடந்த காட்டுக்கு
வாரி வாரி தண்ணிவிட்டு
நாடெல்லாம் சுத்திசுத்தி
நல்ல ரக நாத்து வாங்கி
நாள் கிழமை பாத்துபுட்டு
நட்டுவச்ச நாத்தெல்லாம்
நம்பிக்கை துளிர்விட
கொத்து கொத்தா காய்பிடிக்கும்னு
கொஞ்ச காலம் காத்திருந்து
கடன்காரன்கிட்ட காரணச்சொல்லி
புள்ளைங்ககிட்ட நம்பிக்கைஊட்டி
ஆளக்கூட்டி காய்பறிக்க
ஆளொனுக்கு ரெண்டென்பதில்லாம
அறுபதுவயசு ஆத்தா அப்பனையும்
நம்பி வந்த பொஞ்சாதியையும்
கூலியில்லாம காய்பறிக்க
கும்பிட்டு வரவேத்து
கூடைகூடையா எடுத்துவச்ச காய்கறியை
வியாபாரி கிட்ட
வௌசொன்ன
கிலோ ரெண்டுரூவாங்கறான் !!!!
காத்திருந்து விதைச்சவன் கடன்காரன்
நேத்துவந்து காசுபாப்பவன் வியாபாரி!!