இடைவெளி

இடைவெளி

தூரத்தில் நீ
தொலைவினில் நான்

உனக்கும் எனக்கும் இடைபட்ட தூரம்
சில நூறு கிலோ மீட்டர்கள் என்று
சுட்டிக்காட்டுகிறது வரைபடம்
ஆனால்
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆன
இடைவெளி இதுவென்று
குழம்பித் தவிக்கிறது என் மனம்

அறைகள் முழுவதும்
உன் வாசமும்
நீ விட்டு சென்ற சுவாசமும்
காற்றோடு கதை பேசி
கேலி செய்கிறது
என் தனிமையை

இப்பொழுதெல்லாம்
தொலைபேசியில் யார் அழைத்தாலும்
நீயாய் இருக்க வேண்டும் என்று
பேராசை கொள்கிறது மனம்

சீன பெருஞ்சுவரை போல
நீண்டு கொண்டே செல்கிறது இரவு
மனம் சொல்லியும்
உடல் சொல்லியும்
மூளை சொல்லியும்
யார் சொல்லியும் கேட்பதில்லை
என்ற தீர்க்க முடிவோடு
உறங்க மறுக்கிறது விழிகள்

அன்பின் அருமை பிரிதலில் என்று
உணர்த்தி சிரிக்கிறது காலம்

அதே வீடு
அதே அறை
அதே சமையலறை
அதே சாலை - ஆயினும்
அனைத்தும் நரகமாக காட்சியளிக்கிறது
நீ இல்லா நேரங்களில்

நீண்ட நாட்களுக்கு பிறகு
கவிதை எழுத வைக்கிறது
என் தனிமை
இப்பொழுது தான் புரிகிறது
கவிதைகள் ஏக்கத்திலேயே பிறக்கிறது என்று

தொலைபேசியில் பேசிக் கொண்டாலும்
காணொளியில் கண்டு கொண்டாலும்
நேரில் காணும் சுகத்திற்காக
ஏங்கித் தவிக்கிறது மனம்

கோபப்படுகிறாய்
திட்டுகிறாய்
சண்டையிடுகிறாய் என்று
ஆயிரம் முறை திட்டியவன் தான்
ஆனால் இப்பொழுது
தாழ்மையோடு அழைக்கிறேன்
வா . . . .
வந்து எவ்வளவு வேண்டுமானாலும்
திட்டிக் கொள்
எத்தனை முறை வேண்டுமானாலும்
கோபப்படு
கோடிமுறை கூட சண்டையிடு
ஆனால் நீ அருகில் மட்டும் இருந்து விடு

அருகில் இருக்கும் வரை
புரியாத உன் அருமையை
சிறிய பிரிதலைவைத்து
உணர்த்துகிறது காலம்

வா
வந்து இடைவெளியை இடித்து
தரைமட்டமாக்கு
ஏக்கத்தை தூக்கி எட்டும் வரை தூர வீசு
உறங்கா விழிகளை
உன் கைகளால் வருடி உறங்க செய்
இப்பொழுது இருக்கும்
மயான அமைதியை
உன் சிரிப்பலையால் சிதறவிடு
அனைத்தையும் விட
மிகவும் முக்கியம்
நீ சமைத்து ஒருமுறையேனும் ஊட்டி விடு

எதார்த்தம் காலத்தை
நிறுத்தி சிரித்தாலும்

என் அன்பு உன்னை
என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும்
என்ற நம்பிக்கையில்

உனக்கான காத்திருப்போடு நான்

எழுதியவர் : நா.சத்யா (18-May-20, 12:10 am)
Tanglish : idaiveli
பார்வை : 172

மேலே