கிழக் கொல்லன்

திருவாரூர்த் தியாகேசரைச் சென்று பணிந்தபோது அவரை வியந்து மனமுருகிப் பாடியது இது.

கட்டளைக் கலித்துறை

தென்னொக்குஞ் சோலைக் கமலைப் பிரான்செஞ் சடாடவிதான்
என்னொக்கு மென்னி லெரியொக்கு மந்த வெரியிலிட்ட
பொன்னொக்கும் கொன்றை கரியொக்கும் வண்டுநற் பொற்பணிசெய்
மின்னொக்குங் கங்கை கிழக்கொல்ல னொக்குமவ் வெண்பிறையே. 114

- கவி காளமேகம்

பொருளுரை:

அழகு குடியிருப்பது போன்ற வளமான சோலைகளை யுடைய திருவாரூரிலே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானின் செஞ்சடைக் காடுதான் எதனைப் போன்றதோ என்று கேட்டால் அது எரியும் நெருப்பினைப் போன்றதாகும் எனலாம்.

அச் சடையின் மேல்விளங்கும் கொன்றை மலர்களோ என்றால், நெருப்பினில் இட்ட பொன்னைப் போன்றதாக விளங்கும்;

அக் கொன்றை மலர்களிடத்தே விளங்கும் வண்டுகளோ கரித் துண்டுகளைப் போன்று விளங்கும்.

அங்கே விளங்கும் கங்கையோ வென்றால், நல்ல பொன்னின் நடுவே வயிரத் துண்டுகளை இணைத்துப் பணி செய்தார் போன்றதாக மின்னொளி பரப்பி விளங்கும்.

அவ்விடத்தே விளங்கும் வெண் பிறையோ வென்றால், அந்தப் பொற்பணியினைச் செய்து கொண்டிருக்கிற ஒரு கிழட்டுப் பொற்கொல்லனைப் போலத் தோன்றும்.

சிவபெருமானின் சடைமுடியிலே, இப்படி ஒரு பொற்பணி செய்யும் தொழிற் காட்சியையே உருவாக்கி இன்புறுகின்றார் கவிஞர். -

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-May-20, 6:50 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 65

சிறந்த கட்டுரைகள்

மேலே