82 எல்லாம் பெறலாம் ஈன்றார்ப் பெறல் அரிது - தாய் தந்தையரை வணங்கல் 9

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

மனையவள் வீயின் வேறோர்
= மனைவியைக் கொளலாம் பெற்ற
தனையரா தியரி றப்பில்
= தனித்தனி பெறலாம் பின்னும்
புனைபொரு ணீங்கின் மற்றோர்
= பொருளையும் பெறலாம் அத்தன்
அனையிறந் திடின்வே றத்த(ன்)
= அனைவரு வாரோ நெஞ்சே. 9

- தாய் தந்தையரை வணங்கல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மனைவி இறந்தால் இன்னொரு மனைவியை அடையலாம்; பெற்ற மக்கள் இறந்தாலும் ஆண், பெண் பிள்ளைகளை தனித்தனியாகப் பெறலாம்; மற்றும் ஈட்டிய பொருள் நம்மை விட்டு நீங்கினால் வேறு பொருளையும் பெறலாம்;

நம்மைப் பெற்ற அப்பாவும், அம்மாவும் இறந்தால், வேறு அப்பாவும், அம்மாவும் கிடைப்பார்களா? நெஞ்சே” என்று அவரவர் நெஞ்சத்திடம் கேட்கும்படி அறிவுறுத்துகிறார் இப்பாடலாசிரியர்.

அனை - அன்னை. அத்தன் - தந்தை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jun-20, 4:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே