83 தாங்கொணாத் துன்பினும் தந்தை தாயைக் காக்க வேண்டும் - தாய் தந்தையரை வணங்கல் 10
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
ஒருத்திபஞ்ச காலத்தில் தாதைக்குத் தன்முலைப்பால்
..ஊட்டிக் காத்தாள்
எருத்தமிசைத் தந்தையினைச் சுமந்தோடி யொருவனொன்னார்
..இடரைத் தீர்த்தான்
ஒருத்தன்தன் தந்தைக்கே உயிர்கொடுத்தான் எனப்பலவாம்
..உரோமை நாட்டின்
சரித்திரஞ்சொல் வதையறிவாய் நெஞ்சம்மே யீன்றோரைத்
..தாங்கு வாயே. 10
- தாய் தந்தையரை வணங்கல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”ஒருத்தி பஞ்சம் ஏற்பட்டபோது தன் தந்தைக்கு முலைப்பாலூட்டிக் காப்பாற்றினாள். ஒருவன் கழுத்தில் தந்தையைச் சுமந்து ஓடிப் பகைவரிடமிருந்து வரும் துன்பத்திலிருந்து காத்தான். ஒருவன் தன் தந்தைக்காகவே உயிரைக் கொடுத்தான்.
இவைபோன்ற பல நிகழ்வுகள் ரோம் நாட்டில் நடந்ததாக வரலாறுகள் சொல்வதை நீ அறிவாய் என நினைக்கிறேன். அதுபோல, நெஞ்சே! நீயும் எத்தகைய துன்பம் ஏற்பட்டாலும் தந்தை தாயைக் காப்பாற்ற வேண்டும்” என்று இப்பாடலாசிரியர் வலியுறுத்துகிறார்.
தாதை – தந்தை, எருத்தம் – கழுத்து, பிடரி. ஒன்னார் - பகைவர். இடர் - துன்பம்.