மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஹேர் கட்

நான் 2013ம் வருடம் மயிலை லஸ் சர்ச் ரோடு ஃப்ளாட்டிலிருந்து திருவான்மியூர் பஸ் ஸ்டாண்டுக்கு எதிரிலுள்ள ஃப்ளாட்டுக்கு இடம் மாறினேன். அது புது இடம். ஆகையால் அங்குள்ள கடை கண்ணிகள் எல்லாம் எனக்கு அத்துபடி ஆகவில்லை. அங்கு சென்ற சில வாரங்களில் நான் முடி வெட்டிக்கொள்ளும் அவசியம் வந்தது. எனவே அருகாமையில் எந்த சலூன் இருக்கிறது என்று தேட ஆரம்பித்தேன். LB ரோடில் ஒரு சலூன் இருந்தது. மனதுக்கு அவ்வளவு திருப்தியாய் இல்லை. இருந்தாலும் வேறு நல்ல சலூன் கிடைக்காத தாலும், நான் விசாரித்தவர்கள் அந்த LB ரோடு சலூனையே ரெகமண்ட் செய்ததாலும்,. நடப்பது நடக்கட்டும் என்று அந்த சலூனுக்குச்சென்று என்தலையை அங்கே கொடுத்தேன். அவர்கள் எவ்வளவு முடி அலங்காரம் செய்தாலும் என் தலை எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கப் போகிறது. பிரமாதமான மாற்றம் செய்து என்னைப் பேரழகன் ஆக்க முடியாது. இந்த வயதில் அது ஒன்றுதான் குறைச்சல். ஆனால் அந்த சலூன் அவ்வளவு சுத்தமாக இல்லை என்று உள்மனம் உறுத்திக்கொண்டே இருந்தது. எனவே அடுத்த முறைக்குள், அதாவது அடுத்த 2 மாதங்களுக்குள் வேறு ஒரு நல்ல சலூனைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று நினைத்து வெளியே வந்தேன். பிறகு அதைப் பற்றி அடுத்த முறை வரும் வரையில் மறந்தே போனேன்.

அந்த அடுத்த முறையும் வந்தது. நான் இந்தத் தடவை என்ஃப்ளாட்டின் கிழக்குப்புறத்தில் நல்ல சலூன் ஏதாவது இருக்குமா என்று தேடினேன்.அந்தப் பக்கம் ரொம்பவும் கிராமாந்திரம் போல் இருந்தது. இங்கே எங்கே நல்ல சலூன் இருக்கப்போகிறது என்று நான் நினைத்துக்கொண்டு இருக்கும்போது, அங்கு அந்த சூழலுக்கு சற்றும் பொருந்தாத சலூன் ஒன்று தென்பட்டது. அது புதிதாகவும், நவீன வசதிகளுடனும் இருப்பது போல் தெரிந்தது. உள்ளே நுழைந்து

“ஏ.சி இருக்கா” என்று கேட்டேன்.

“இருக்கு சார், இருக்கு. உள்ள வாங்க சார். இப்படி உட்காருங்க” என்று ஒரு நல்ல சீட்டை எனக்குக் கொடுத்தார் அந்த சலூனின் சொந்தக்காரர்.

நான் உடனே “ இங்கே பவர் பேக் அப் இருக்கா? இன்வெர்டர் இருக்கா?” என்று கேட்டேன்.

அவர் எல்லாம் இருக்கு சார், ஏன்கேக்குறீங்க? என்றார்.

“இல்லை , ஒரு இதுக்குத்தான்” என்று சொன்னேனே ஒழிய, எதுக்குத்தான் என்று சொல்லவில்லை.

ஒரு பதினைந்து நிமிட வெயிட்டிங்குக்குப் பிறகு அவர் என்னைக்கூப்பிட்டு ஒரு சலூன் சேரில் அமர்த்தினார். அங்கு எல்லாம் சுத்தமாக இருந்தது. எனவே நான் தைரியமாக அவரிடம் என்தலையைக் கொடுக்கத்துணிந்தேன். அவர் ஒரு போர்வையைப் போர்த்தி என் முகத்தை அட்ஜஸ்ட் செய்து கொண்டார்.

திடீரென்று “ சார், உங்க முகத்தை ( மரியாதையாக முகத்தை என்று சொன்னார், மூஞ்சியை என்று சொல்லவில்லை) எங்கேயோ பார்த்துஇருக்கேன்” என்றார்.

“எங்கேயும் பார்த்து இருக்கமுடியாது. நான் பிறந்த நாளில் இருந்து அது என் இரண்டு தோளுக்கும் மேல்தான் இருந்து இருக்கு” என்று ஜோக் அடித்தேன்.
கஸ்டமர் ஜோக்குக்கு சிரிக்காமல் இருப்பது மரியாதைக் குறைவு என்று அவருக்குத் தெரிந்து இருக்கிறது.
எனவே ஒரு சிரிப்புடன் அவர் “ உங்க முகம் எனக்கு நல்ல பழக்கப் பட்ட முகமா இருக்கு” என்று மறுபடியும் சொன்னார்.
பிறகு கொஞ்சம் யோசித்து “நீங்க ஆள்வார்ப்பேட்டை, இல்லை மயிலாப்பூரிலே இருந்தீங்களா?” என்று கேட்டார்.

நானும் “மைலாப்பூர் லஸ் சர்ச்ரோடுலே, ஆழள்வார்ப்பேட்டை சர்க்கிளுக்குப்பக்கத்தில் இருந்தேன்” என்றேன்.
பிறகு அவர் முகத்தை சற்று உற்று நோக்கி நானும் “உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு” என்றேன்.

அப்போது அவர் கேட்டார் ” நீங்க அம்புலி சலூனுக்கு வந்ததுண்டா?” என்று.

அம்புலி சலூன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடில் கமலஹாசனின் பழைய வீட்டின் முன்புறம் TTK ரோடுக்கு அருகாமையில் இருந்தது. என்வீட்டிலிருந்து 5-10 நிமிட நடை. நான் அங்குதான் முடிவெட்டிக்கொள்ள அடிக்கடி போவேன்.
*************
இப்ப ஞாபகம் வந்து விட்டது அந்த சம்பவம்.

ஒரு நாள் நல்ல பட்டப்பகல் மணி நான்கு இருக்கும். நான் ஹேர் கட்டிங்குக்காக அம்புலி சலூனில் நுழைந்தேன். நான் எப்போதுமே சாயந்திரம்தான் சலூனுக்குச்செல்வது வழக்கம். ஒரு இருபது நிமிட வெயிட்டிங்குக்குப்பிறகு என்னை சிகை அலங்கார வல்லுனர் சலூன் சிம்மாசனத்தில் அமர்த்தினார். முடி வெட்ட ஆரம்பித்தார். ஒரு ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். அப்போது பவர் போய்விட்டது.

அந்தக்காலத்திலே பவர் அடிக்கடி போவதும், எலக்ட்ரிசிடி டிபார்ட்மென்ட் அறிவித்த நேரம் தவிர வேறு நேரங்களிலும் அடிக்கடி கரண்ட் கட்ஆவதும் சகஜம். . எனவே இப்பொழுது பவர் கட் ஆனதில் எந்த அதிசயமும் இல்லை. லைட்ஸ் ஆஃப். ஒரே கும்மிருட்டு. ஏசியும் வேலை செய்யவில்லை. வேர்த்துக் கொட்ட ஆரம்பித்து விட்டது.

“இன்வர்டர் இல்லையா” என்று கேட்டேன்.

“இல்லை” என்றார்.

“எமர்ஜென்சி லாம்ப் ?” என்று கேட்டேன்.

“அது ரிப்பேர்” என்றார்.
“சார், நீங்க கவலைப்படவேண்டாம். இப்படிப் பவர் போவது சகஜம்தான். பத்து அல்லது பதினஞ்சு நிமிஷத்துக்குள்ளே பவர் வந்துடும்” என்றார்.

தலையில் பாதி வேலை தான் நடந்து இருக்கிறது. திருப்பதி கதையாகிவிடக்கூடாதே என்று நான் கவலைப்பட ஆரம்பித்தேன்.
“இன்று போய், நாளை வருகிறேன்” என்று சொல்லமுடியாது.
வெளியிலே தலை காட்ட முடியாத நிலையில் எனக்கு வேறு வழி? கடவுளே என்று காத்திருந்தேன். ஐந்து நிமிஷம் ஆனது. பத்து நிமிஷம் ஆனது.. ஊஹூம் பவர் வரவில்லை. பதினைந்து நிமிஷம், இருபது நிமிஷம், கடைசியில் அரைமணி நேரமும் தாண்டியது. நான்பொறுமை இழந்தேன்.

“ என்னங்க? அரைமணிக்கும் மேலேயே ஆகிவிட்டதே. பவர் எப்போ வரும்னும் தெரியல்லே. இன்னும் எத்தனை நேரம் காத்துக்கிட்டு இருக்கமுடியும். ஏசி வேறே இல்லே. வேர்த்து விறு விறுத்துக் கொட்டுது”.......

“நான் இதுக்கும் மேலே இங்கே உங்க பவரை நம்பி உட்கார்ந்திருக்க முடியாது. ஏதாவது டார்ச் லைட் இருந்தா அதை என்தலையில் அடிச்சி, அதாவது அதை என்றால் அதை இல்லை, அந்த டார்ச் லைட்டின் வெளிச்சத்தை என் தலையில் அடிச்சி அந்த வெளிச்சத்தில் ஹேர் கட்டைத் தொடருங்க” என்றேன்.

“ டார்ச்லைட் இல்லை “ என்றார்.

“ பின்னே, வேறே என்னதான் செய்யப்போறீங்க?” என்றேன்.

சார், மெழுகு வர்த்தி இருக்கு. அதை ஏத்தி, உங்க தலைமேலே அதை ஒரு கையால பிடிச்சுக்கிட்டு, அந்த வெளிச்சத்துலே மறுகையாலே கட் பண்றேன்” என்றார்
எனக்குப் பயமாகப்போய்விட்டது.
எரியற மெழுகுவர்த்தியை என் தலையிலே போடாம, என் முடியை எரிக்காம. ஜாக்கிரதையா முடி வெட்டுவீங்களா” என்று கேட்டதற்கு

“சார், அதெல்லாம் ஒரு டாமேஜும் ஆகாம சுத்தமா கட் பண்ணிடுவேன். நீங்க பயப்படத்தேவை இல்லை” என்றார்.

“சரி, உரல்லே தலையைக் கொடுத்த பிறகு, உலக்கைக்குப் பயந்தா முடியுமா” என்று என்னையே ஒரு விதமாக சமாதானப் படுத்திக் கொண்டு
“ சரி, செய்யுங்கள்” என்று அரை மனசுடன் சம்மதம் தெரிவித்தேன்.

அடுத்த பத்துப் பதினைந்து நிமிடங்களில் ஹேர் கட் முடிந்தது
கொடுக்க வேண்டிய வெட்டுக்கூலியைக் கொடுத்து, அந்த சலூனை விட்டுப்புறப்பட எத்தனித்தேன்.. சொல்லி வைத்தாற்போல பவர் வந்து என் வயற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டதை நான் இந்த .ஜென்மத்தில் மறக்கமுடியுமா என்ன ?
**********
எனக்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஹேர் கட் செய்த அதே நபர்தான் இங்கிருப்பவர் என்று தெரிந்து கொண்டேன். அந்த ஒரு அனுபவத்தினால்தான் முன்னெச்சரிக்கையாக அவரிடம் அவ்வளவு கேள்விகள் கேட்டேன்.
நீங்கள் கேன்டில் லைட் டின்னர் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் இந்த உலகிலேயே கேன்டில் லைட் ஹேர் கட் செய்துகொண்ட ஒரே ஆள் நானாகத்தான் இருக்கும். இந்த சம்பவத்தைச் சொன்னவுடன்
“ நீங்க தானா சார் அது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டு என்னை ‘அது’ ஆக்கினார்.

“ எமர்ஜென்சி லைட் வேலை செய்கிறதா? “ என்று கேட்டு

அவர் “ வேலை செய்கிறது சார்” என்று சொன்ன பிற்பாடு அவரிடம் தைரியமாக என் தலையை ஒப்படைத்ததேன்.

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (7-Jun-20, 10:52 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 65

மேலே