தனிமையின் சூழலது

பிறப்பது வளர்வது
படிப்பது உழைப்பது
ஓய்வில் இருப்பது !
விரைந்து செல்வதில்
அதிவேகம் காட்டுகிறது
காற்றைவிடக் காலம் !

முடிந்த வாழ்க்கையை
வடித்துக் காட்டுகிறது
வழிந்திடும் இதயம் !
கணிக்க முடியாமல்
தணிக்கை செய்கிறது
முடிவினைநெஞ்சம் !

மறவாத அனுபவங்கள்
மனதெனும் கிடங்கில்
மலையளவுக் குவிகிறது !
பாடங்கள் கற்றதும்
படிப்பினைத் தந்ததும்
படங்களாய்த் தெரிகிறது !

அலசுகிறது ஆய்கிறது
அயராத உள்ளமது
நிறை குறைகளை !
செய்த தவறுகள்
நெய்த ஆடையில்
தெரியும் கிழிசல்கள் !

தவித்திடும் மனதை
தணிக்கவும் இயலாது
தவிர்க்கவும் முடியாது !
தள்ளாத அகவையது
தனிமனித நிலையது
தனிமையின் சூழலது !

பகுத்து அறிதலும்
வகுத்து வாழ்தலும்
வழியென வாழ்ந்தால்
நிறைந்த மனதும்
நீடித்த ஆயுளும்
நிலைத்து நிற்கும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (14-Jun-20, 8:40 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 193

மேலே