தன்னம்பிக்கை

#தன்னம்பிக்கை

நல்ல பல நாட்களிலும்
தொல்லை வந்து வாட்டும்
கள்ளமில்லா தோர் தலையில்
துன்ப(ம்) கல்லைப் போட்டும்..!

ஓரடிநீ எடுத்து வைக்க
ஆறடிகள் சறுக்கும்
ஓயாது நடந்து பார்
வெற்றி பாதம் பிடிக்கும்..!

வாழ்க்கையொரு பரமபதம்
ஆடிப்பாரு ஆட்டம்
வழியினிலே பாம்பிருந்து
பாதாளம் கூட காட்டும்..!

ஆட்டத்திலே ஏணி யுண்டு
அதுபோதும் நமக்கு
அச்சந்தன்னை விலக்கிவிடு
வாழ்விலேது சறுக்கு

ஆறு பன்னிரெண்டிருக்கு
கேட்டுப் பகடை உருட்டு..!
அலுப்பில்லா நம்பிக்கையால்
அகண்ட இருட்டை விரட்டு..!

எத்தனையோ சோதனைகள்
வந்து போகும் வாழ்வில்
இறுக்கிப்பிடி நம்பிக்கையை
ஏறிடலாம் தேரில்..!

உலகினுக்கே ஓர் தொல்லை
உலுக்குது பார் உயிரை
உருவமின்றி கழுத்தினிலே
சுருக்குது பார் கயிறை..!

மருத்துவரின் செவிலியரின்
மகத்தான பணியில்
நம்பிக்கையும் இருப்பதனால்
மீள்கின்றார் பிணியில்..!

முள்ளிருக்கும் ரோசாவில்
பன்னீர் எடுக்கப் பழகு
முயற்சியோடு நம்பிக்கைதான்
முன்னேற்றத்துக்கே அழகு..!

முன்னேறத் துடிக்கையிலே
முட்டுக்கட்டைப் போடும்
எட்டிமிதித்து ஏறுகட்டை
ஏணிப்படிகள் ஆகும்.!

தும்பிக்கையும் தோற்றுப்போகும் நம்பிக்கையின் முன்னால்
தூக்கு உந்தன் கைகளையே
வானம் தட்டும் தன்னால்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (14-Jun-20, 7:11 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 2253

மேலே