புன்னகை மொழி

கதிரவனுக்கு முன் கண் விழிக்கும் அவன் நினைவுகள்
அதிகாலை கனவுகளில் அனுமதியின்றி நுழையும் அதே, அவனின் பிம்பம்
நிஜம் எனை விட்டுப்பிரிந்தபின்,
நிழல் மட்டும் நிரந்தரமாகிடுமோ?
வலிகளே நான் வாங்கிய வரமோ?

ஆனாலும் மனமே,
அவனை நீ மறக்க முயன்று இருக்கலாம்,
மறத்துப் போய் இருக்கலாம்...
நொறுங்கிப் போனது ஏனோ?
அவன் நினைவுகள் அமிலமாய் உன்னை அரித்ததாலோ?

அவனில் தொலைத்த என்னையும்,
ஆயிரமாய் உடைந்த மனதையும்
தேடித் தொடங்கிய பயணம்;
காலத் தோணியில்,
கரை தெரியா கடல் பயணம்..
கரை தொடுவேனோ.. காணாமல் போவேனோ..

ஆண்டுகள் பல உருண்டோடி,
ஆழ்கடலில் அலைந்தாடி,
இதோ வந்துவிட்டேன்..
எனக்கானதோர் உலகம்
புதுக்கரையில் என் பாதம்
தென்றல் காற்றில் நறுமணம்
மூச்சு விடுவதாய் உணர்கிறது என் மனம்

திரும்பிப் பார்க்கிறேன் மீண்டும்..
தொடுவானத்தில் அவன் நேசம்
எனைப் பார்த்துப் புன்னகைப்பதாய் ஒரு மாயை..
ஆம், இனி பேசிக்கொள்ள புன்னகை ஒன்றே எங்கள் மொழி..

பார்த்துக்கொள்ள நினைவுகள் ஒன்றே காணொளி..

எழுதியவர் : துகள் (26-Jun-20, 12:47 pm)
சேர்த்தது : துகள்
Tanglish : punnakai mozhi
பார்வை : 364

மேலே