7 அவளுடன் பேசும்போது
___________________
முன்னிரவு நேரம். சற்று வெளியில் காலாற நடப்பது வழக்கம். செயற்கை ஒளியில் மனிதர்களை காண்பதே ஓர் இனிய அனுபவம்தான்.
வாசலில் அம்மாவோடு அவள் இருந்தாள். இப்பொழுதுதான் வந்திருக்க வேண்டும். பேசிவிட்டு மீண்டும் அறைக்கு வருவாள் என்பதால் அங்கு சென்று காத்திருந்தேன்.
பெண்களின் தனிமையும் கூட்டங்களும் ஒன்றுதான். ஆண் தலையிடக்கூடாது.
என் அறையில் இருந்து நேரே சாலைகளை பார்க்க முடியும். நான் பாதசாரிகளை கவனித்து கொண்டு இருந்தேன்.
ஸ்பரி... என்றபடி ஒரு சேரில் அமர்ந்தாள்.
அங்கே என்ன பாக்கறீங்க?
ஒண்ணும் இல்ல. ஒரு பேராசிரியர் ரொம்ப நாளா காணலே. பாத்தா பேசிட்டு போவார். அதான்...
இது பாத்தீங்களா...
சில ஓவியங்களின் படங்கள் அவள் மொபைலில் இருந்தது.
"இதெல்லாம் தெரியுதா ஸ்பரி... வான்கோ டாலி பிகாசோ வரைந்த ஓவியங்கள்..."
நேத்து முழுக்க நான் இதுதான் பாத்துட்டு இருந்தேன்... ரொம்ப நேரம் பாத்துட்டே இருந்தா எல்லாம் அசையர மாதிரி இருக்கு.
ஓவியத்தையும் வார்த்தைகளையும் தொடர்புபடுத்த முடியுமா... ஸ்பரி.
இசையில் சொற்கள் கலக்கும்போது இதுவும் ஒரு விதத்தில் சாத்தியம்தானே.
அவள் ஏறிட்டு பார்த்தாள்.
பார்வை மங்கலா இருக்கும்போது நிறங்கள் குழம்பும். வர்ணங்களோடு பொருட்களும் குழம்பும்.
திசைகள், பாதைகள், காலங்கள் கூட குழம்பும். ஆனால் இதிலும் ஒரு வாழ்க்கை இயங்கும். ஒரு பிறவி பார்வையற்றவர் நிறங்கள் அனைத்தையும் ஸ்வரமாகவோ உணர்ச்சியாகவோ பிரித்து மனதால் உணர முடியுமா?
அதே மாதிரி ஒரு விஷயத்தை மங்கலாய் மட்டும் புரிந்து கொள்ளும்போது அர்த்தங்களும் செய்திகளும் இந்த இரண்டிலும் ஒன்றையொன்று புரிதலில் தடம் மாற்றி கொண்டே இருந்தால் நீ எங்கு பயணிக்க முடியும்?
அப்போ முடியாதா..?
இல்லை... அது நடந்துருக்கு... கவிதை கதைக்கான ஓவியங்கள் அதுதான்.
நீங்க ஓவியம் பார்த்து எழுதினது இருக்கே..
ஆனா அது எப்பவும் முழுமையானது இல்லையா?
நிறைவுகள் என்பது எதில்தான் உண்டு? ஸ்பரி.. இன்னிக்கு நான் இங்கேயே தூங்க போறேன். குட்டியெல்லாம் அம்மா கிட்டே விளையாடிட்டு இருக்கு. காலையில் வீட்டுக்கு போறேன்.
சரி. தூங்கு.
✳️✳️✳️✳️✳️