குமரேச சதகம் – அளவிடக்கூடுமோ - பாடல் 64

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாரியா ழத்தையும் புனலெறியும் அலைகளையும்
மானிடர்கள் சனனத்தையும்
மன்னவர்கள் நினைவையும் புருடர்யோ கங்களையும்
வானினுயர் நீளத்தையும்

பாரிலெழு மணலையும் பலபிரா ணிகளையும்
படியாண்ட மன்னவரையும்
பருப்பதத் தின்நிறையும் ஈசுரச் செயலையும்
பனிமாரி பொழிதுளியையும்

சீரிய தமிழ்ப்புலவர் வாக்கிலெழு கவியையும்
சித்தர்தம துள்ளத்தையும்
தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வள வெனும்படி
தெரிந்தள விடக்கூடுமோ

வாரிச மடந்தைகுடி கொண்டநெடு மாலுக்கு
மருகனென வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 64

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

தாமரை மலரில் இருக்குந் திருமகள் வாழும் மார்பனான திருமாலுக்கு மருகன் என்ற முறையிலே வந்த முருகனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

கடலின் ஆழத்தையும் அது வீசும் அலைகளையும், மக்களின் பிறப்பையும், அரசர்கள் எண்ணத்தையும், ஆடவர்களுக்கு வரும் சிறப்பையும், வானத்தின் உயரத்தையும் நீளத்தையும்,

உலகில் தோன்றும் மணலையும், பலவகையான உயிர்களையும், உலகாண்ட அரசர்களையும், மலையின் நிறையையும், இறைவன் செய்வதையும், பனியும் மாரியும் பெய்யும் துளிகளையும்,

சிறந்த தமிழ்ப் புலவருடைய நாவிலிருநது விளையும் கவிதைச் சிறப்பையும்; சித்தருடைய நினைவின் உறுதியையும், பெண்களின் உள்ளத்தையும், இத்தகையவென்று கூறும் முறையிலே ஆராய்ந்து அறுதியிட்டுக் கூற ஒவ்வுமோ? ஒவ்வாது..

அருஞ் சொற்கள்:

வாரி - கடல், வாரிசம் - தாமரை, படி - உலகு, பருப்பதம் - மலை, தெரிவையர் - பெண்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jun-20, 7:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே