எழையின் ஜனநாயகம்

*ஏழையின் கோவணமும்-இந்திய ஜனநாயகமும்*

சிறுமழைக்கே ஒழுகும்
அரசுப் பேருந்தின் நெரிசலூடே
படியில் தொங்கியவாறு
பயணிக்க நேர்கையிலோ.!

அல்லது...
பலமழை பார்த்த ஊரில்
ஒரு மழைக்கே ரோடெல்லாம்
பல்லை இளிப்பதை
பார்த்து நெஞ்சு கொதிக்கும்போதோ.!

அல்லது...
கலப்பை சுமந்துசெல்லும்
கிழிந்தகோவணக் குடியானவனை
கடக்க நேர்கையிலோ.!

அல்லது...
எண்ணைப் பசையறியாத் தலை
ஏழைச்சிறுவனவன்
வயிற்றுப்பசிக்காக
வழியில் பிச்சை எடுப்பதை
வருந்திப் பார்க்க நேர்கையிலோ.!

அல்லது...
ஏய்த்தவன் எங்கோ ஏப்பமிட
கருப்பு பணமென்று
இல்லாதவன் சட்டை பையில்
சொல்லாமல் வசூல் நேரும்போது
கையாலாகாமல்
கைகட்டி நிற்கும் போதோ.!

அல்லது...
அழுக்கு கோவணக்காரனிடம் போய்
ஆண்ட்ராய்டு போன்களில்
ஆன்லைன் பரிவர்த்தனை செய்.எனும்
அடக்குமுறை
காண்கையிலோ.!

அல்லது...
நல்ல நேரம் பார்க்க
நாளிதழில் புரட்டுகையில்,
கொலையும், களவும்,
கற்பழிப்பும், கையாடலும்,
ஊரடங்கும், உழவன் சாவும்,
கலர்கலராய் கொடிகளுடன்,
கட்சிகளின் ஊர்வலத்தில்,
தேசியக்கொடி
தேமேவென்று நிற்பதையும்,
பார்த்துப் பதறி,
நமக்கு மட்டுமா..!
நாட்டுக்கே இல்லை நல்ல நேரமென
உணர நீ நேர்கையிலோ.!

இன்னும்...
ஊழலில் கொழுத்த கூட்டம்
ஊரையே தின்பதையும்...
அடித்துப் பிடுங்கியவன்
ஆட்சிகட்டில் அமர்வதையும்...
அன்றாடங்காய்ச்சியின் கணக்குவழக்கை
ஆதாரில் சரி பார்த்து...
கோடிகளில் ஏமாற்றியவனை
ஓட விட்டு நிற்க்கையிலோ.!

இறுதியில்...
உனது ஒற்றை கோவணமும்
உருவப்படுவதற்கு முன்னாலோ.!

ஒருமுறை...
உரக்க கத்திச் சொல்.!!
'வாழ்க ஜனநாயகம்' என்றோ,
அல்லது
'அச்சி தின் ஆயகா' என்றோ.

///---///---///
மருத கருப்பு.

எழுதியவர் : மருத கருப்பு (1-Jul-20, 9:44 am)
சேர்த்தது : மருத கருப்பு
பார்வை : 19

மேலே