வேணாம், வேணாம், வேணவே வேணாம் 5 இஞ்சினீயர்

நான் ஒரு இஞ்சினியர்தான். என்னைக்கேட்டா, இந்த இஞ்சினிரிங் பக்கமே தலை வெச்சிப் படுக்காதீங்கன்னுதான் என் அனுபவத்திலிருந்து சொல்வேன். அதுலேயும் குறிப்பா சிவில் இஞ்சினிரிங் பக்கம் வரவே வராதீங்கன்னு தான் சொல்வேன். முந்தி மாதிரி இல்லீங்க. இப்ப எல்லாம் இஞ்சினிரிங் படிச்சவங்களுக்கு வேலை கிடைக்கறதே குதிரைக் கொம்பா இருக்குங்க. நாலு வருஷப் படிப்பு படிச்சிட்டு, அவனவன் வேலை தேடிப்படற பாடு இருக்கே சொல்லி மாளல்லிங்க. காலேஜ் படிப்பு அவங்களை நேரடியா கம்பனியிலேயோ, தொழிற்சாலையிலேயோ, கட்டுமானத் தொழிலிலேயோ வேலை செய்யத் தயார் செய்யறதில்லைன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கு. எங்களுக்கும்தான் எவ்வளவோ சொல்லித்தராங்க காலேஜுலே. ஆனா ஃபீல்டுக்குப் போய்த்தான் நிறைய கத்துக்க வேண்டி இருக்கு. அந்த அனுபவம் மாணவர்களா இருக்கும்போதே சம்பந்தப்பட்ட துறைகளில் போய் ட்ரெயினுங் எடுத்துக்கிட்டா ஒரளவுக்குத்தான் வரும். வேலை செய்யும்போது கிடைக்கிற அனுபவம் ட்ரெயினிங்குலே கிடைக்காது. ஆனா கம்பெனிக்காரங்க எங்களைக் குறை சொல்றாங்க. கல்யாணமானாத்தான் பைத்தியம் தெளியும். பைத்தியம் தெளிஞ்சாத்தான் கல்யாணமாகுங்கிற கதையா இருக்கு.

வேலைக்கு வேண்டிய ஒரு பொருளை வாங்கணும்னா அதோட specification ( தரக்குறியீடு) தெரியணும். அதுக்கு ஏத்த கொடேஷன் மூலம் தரமாகவும், விலை குறைவாகவும் உள்ள பொருளை வாங்கணும். ஒரு மண்வெட்டி வாங்கறதா இருந்தாக்கூட அதுக்கான ஸ்பெசிஃபிகேஷன் தெரியணும். இதை எல்லாம் காலேஜுலே சொல்லித்தரதில்லை. அனுபவத்துலே தெரிஞ்சிகிட்டாத்தான் உண்டு.

என் கிட்டே வேலை செஞ்ச ஒரு புது இஞ்சினீயர் கிட்டே ஒரு பொருளை வாங்க குறைஞ்ச பட்சம் 3 கொடேஷனாவது வாங்கணும்னு சொன்னா அந்த இளம் இஞ்சினீயர் 3 என்ன சார் அந்தப் பொருளுக்கு எங்கிட்டே நிறைய கொடேஷன் இருக்குன்னு சொல்லி ஷேக்ஸ்பியரிலிருந்தும், பெர்னாட்ஷாவிலிருந்தும் ஒரு பத்து கொடேஷன் எழுதிக்கிட்டு வந்து இந்தாங்க சார் பத்து கொடேஷன் என்று என்னுடம் கொடுத்தவுடன் எனக்கு சிரிப்பதா அழறதான்னு தெரியல்லை. அதைப்பத்தி அவனுக்கு விளக்கி சொல்ல வேண்டியதாப் போயிட்டுது. இதை யார் காலேஜுலே சொல்லித்தராங்க?

டெண்டர் விடறதுலேயும் தீர்மானிக்கிறதுலேயும் வேறே மாதிரிப் பிரச்சினை. இஞ்சினீரிங் தரக்குறியீட்டுக்குத் தகுந்தமாதிரி நாம நல்ல டெண்டரைத் தேர்ந்தெடுத்தா, இஆதுலே அரசியல் புகுந்துடும். நமக்கு மந்திரி கூப்பிடறார், செக்ரடரி கூப்பிடறார்னு கால் வரும். அவங்க ஒரு பேரைச்சொல்லி "ஏன் அந்த டெண்டரை ஏத்துக்காம இந்த டெண்டரை ஏத்துக்கிட்டீங்க? அதை உடனே மாத்தி நாங்க சொல்ற கம்பெனிக்குக் கொடுங்க"ன்னு சொல்வாங்க. அதுக்குத் தகுந்த மாதிரி ஜஸ்டிஃபை பண்ணி எழுதய்யான்னு சொல்லுவாங்க. எங்க பெரிய அதிகாரிகளும், மந்திரியும் சொல்லும்போது ஏஃப்டரால் இஞ்சினீயர்கள் நாங்க என்ன செய்ய முடியும் சொல்லுங்க, இந்த மாதிரி சங்கடத்துலே மாட்டிக்கிட்டு சஸ் பெண்டோ, டிஸ்மிசோ ஆனவங்க இருக்காங்க. அதனால மெடீரியல் இஞ்சினீரிங்கை விட ஹ்யூமன் இஞ்சினீரிங் அதிகம் தெரிஞ்சி வெச்சிக்கணும்.
நான் இப்ப சிவில் இஞ்சினீயர்களைப் பத்தி மாத்திரம் சொல்றேன். இந்த சிவில் இஞ்சினீயர்களுடைய பாடு இருக்கே சொல்லி மாளாதுங்க. வேலை கிடைக்கிறதே இன்னிக்கி ஒரு பெரும் பாடாப் போச்சு. அப்படியே வேலை கிடைச்சுட்டுதுன்னு வெச்சிக்குங்க இந்த இஞ்சினீயர்களை ஏதாவது அத்வான காட்டுலேதான் போஸ்ட் பண்ணுவாங்க. ஏன்னா அங்கேதான் ஏதாவது பெரிய பிராஜக்ட் ஆரம்பிக்கும். அணைகட்டற பிராஜக்டுன்னு எடுத்துக்குவோமே. அணை கட்டற இடம் எங்கேயோ தள்ளி இருக்கும். அங்கே ஏற்கனவே ஏதாவது கிராமம், கீமம் இருந்திருந்தா அதைக் காலி பண்ணச் சொல்லிடுவாங்க. பக்கத்து சுத்து வட்டாரத்துலே மைல் கணக்குலே ஊரே இருக்காது. இருந்தா தண்ணியிலே மூழ்கிப் போயிடுமே. நாங்க தான் அங்கே முதல்லே போய் டேரா போடணும். எந்தப்பூஜைக்கும் முதல்லே பிள்ளையார்பூஜை மாதிரி, எந்தப் பிராஜெக்டா இருந்தாலும் முதல் பூஜை சிவில் இஞ்சினீயர்கள் நாங்கதான் போடணும். நாங்க போயி வேலை செய்யப் போறவங்களுக்கு வீடு ஆபீஸ் வசதியெல்லாம் செஞ்சிக் கொடுத்த பிறகுதான் எந்த பிராஜக்டுமே ஆரம்பமாக முடியும். அந்த சமயத்துலே எல்லாமே பிரச்சனைதான். ஏதாவது ஒரு குண்டூசி வாங்கணும்னாக்கூட பத்து மைல் போகணும். சாப்பாடு எல்லாம் வீடு ரெடியாகிற வரையைல் ஸ்வயம் பாகம்தான். எது கிடைக்குதோ அதை சாப்பிடப் பழகிக்கணும். சொகுசாவது மண்ணாவது, பேசக்கூடாது. அந்த டேம் (dam) சைட்டுக்குப் போறதுக்குக் கூட ஒழுங்கா ரோடு, கீடு ஏதும் இருக்காது அதுக்குன்னு ஒரு இஞ்சினியர் வரும் வரை. பட்டப் பகல்லே மொட்டை வெயில்லே நின்னுக் கிட்டுத்தான் வேலை வாங்கணும். கொஞ்சம் அப்படி, இப்படி இருந்தா ஒரு நாள் அந்த டாமே காட்டிக் கொடுத்துடும்.
வீடு கட்டற பிராஜக்ட்ஸ்னா அதுவும் பொதுவா ஊரை விட்டு வெளியேதான் நடக்கும். வெளியிலே நடந்தாலும் சரி உள்ளே நடந்தாலும் சரி வெய்யில் வெய்யில்தான். வேலை நடக்கும்போது ஏதாவது ஆக்ஸிடன்ட் ஆச்சுன்னு வெச்சிக்குங்க அப்ப இஞ்சினியர் இன் சார்ஜ் தான் பொறுப்பு. அவர்தலையை உருட்டிடுவாங்க. ஆக்ஸிடெண்ட்லே ஒரு ஒர்க்கர் செத்துப்போயிட்டார்னா நம்ம கதை கந்தலாயிடும்.
கன்ட்ராக்டர் எப்படி எல்லாம் கட்டிட விஷயத்துலே ஏமாத்துவார் அப்படின்னு நாம தெரிஞ்சிக்கிறது இஞ்சினீரிங் தெரிஞ்சிக்கிறதை விட முக்கியம். கொஞ்சம் சபலத்துக்கு இடம் கொடுத்தாக்கூட நான் ஏற்கனவே சொன்னமாதிரி அந்தக்கட்டிடமே எங்களைக் காட்டிக்கொடுத்துடும்.
Doctors mistake lies buried, engineers mistake stands as a monument for ever னு சொல்லுவாங்க அந்தமாதிரி.

மழை, வெள்ளம் வந்தா கால நேரம் பாக்காம நாங்க உழைக்கணும். வெள்ளம் வந்து கரையை உடைச்சிக்கிட்டு போனாலும் எங்களைத்தான் திட்டுவாங்க. நீர்நிலை எல்லாம் வரண்டு போனாலும் நாங்க மழைத் தண்ணியை ஏன் சேமிக்கல்லே, தூர் ஏன் வாரல்லேன்னு எங்களைக் கேட்டுப் பாடாய்ப், படுத்திடுவாங்க.
பேரு பெத்த பேரு, தாக நீளு லேதுங்கிற மாதிரி, பேருதான் இஞ்சினியர். இவங்களுக்கு அரசாங்கத்துலே கொடுக்கற சம்பளம் பாங்க் கிளார்க்குகள் வாங்கற சம்பளத்தையும் விட குறைவாகத்தான் இருக்கும். ஆயுசுக்குள்ளே ஒரு பிரமோஷன் கிடைச்சா ஜாஸ்தி. அப்படி அதிர்ஷ்டமிருந்து பொலிடிகல் புல் இருந்தா 30 வருஷம் கழிச்சி சீஃப் இஞ்சினீயரா ஆகலாம். ஆனாக்கூட அப்பவும் ஒரு 25 வயசு பிஞ்சு IAS அதிகாரிக்கு முன்னாடி கைகட்டி வாய்பொத்தி நிக்கணும். ரிட்டயர் ஆற அண்ணிக்கு அந்த இஞ்சினீயர் மேலே லஞ்ச ஊழல் குற்றமோ, எப்பவோ கட்டின கட்டிடம் பழுதான குற்றமோ சாட்டி அவரை நிம்மதியா ரிடையர் ஆகக்கூட விட மாட்டாங்க.
எல்லாராலேயும் அமெரிக்கா போக முடியுமா என்ன? கவர்மென்ட்லே வேலே கிடைச்சா இப்படித்தான். கிடைக்காட்டி இன்னும்மோசம். இப்ப பாருங்க தமிழ்நாட்டுலே தடுக்கி விழுந்தா இஞ்சினீரிங் காலேஜ் இருக்கு. இந்தக் காலேஜுகளிலே முழு வசதிகளும் கிடையாது, தகுந்த ஆசிரியர்களும் கிடையாது. இந்த வருஷம் நம்ம நாட்டிலே 60000 இஞ்சினீரிங் சீட் காலியா இருக்குன்னு சொல்றாங்க. இப்பவே 30, 35 கல்லூரிகளை மூடறதாக நான் கேள்விப்பட்டேன். இன்னிய தேதிக்கு வேலை கிடைக்காத இஞ்சினீயருங்க நிறைய பேர் இருக்காங்க. இஞ்சினீரிங் படிச்சி வேலை கிடைக்காம கடைகளில் கணக்கெழுதறதும், மேஸ்திரியா வெறும் 4000-5000 த்துக்கும் வேலை பாக்குறாங்கன்னா பாத்துக்குங்களேன்.

இஞ்சினியர்களுக்குக் கிம்பளம் நிறைய கிடைக்கும்னு ஊர் ஜனங்க பேசிப்பாங்க. ஒரு ஊதிய உயர்வுக் கமிஷன் அமைச்சிருந்த போது, அதுலே இஞ்சினீயர்களுக்கு சம்பள உயர்வு மற்ற எல்லாரையும் விட கம்மியா இருந்தது. அப்போது இதைப் பத்திக் கேட்டதற்கு அப்போதைய முதல் மந்திரி சொன்னாரு" இஞ்சினீயர்களுக்கு சம்பளமே தேவையில்லே. அவங்கதான் நிறைய கிம்பளம் வாங்கறாங்களே" ன்னு. இப்படி ஒரு பொதுவான எண்ணம் ஜனங்க கிட்டே இருக்கு. ஆனா இந்த கிம்பள பிஸினஸ் அது எல்லாருக்கும் சரிப்பட்டு வராது. மாட்டிக்கிட்டா மானம் போயிடும். இதெல்லாம் வேண்டாத வேலை. இஞ்சினீயர் ஆனா பெரிய தலைவலிதாங்க. நேர்மையா இருந்தா பிழைக்க முடியாது. நேர்மையா இல்லேன்னா நிம்மதியா இருக்க முடியாது. என்ன பொழப்போ இப்படி ஒரு பொழப்பு.
எஞ்சினீரிங் கிடைக்காததாலேயோ, பிடிக்காததாலேயோ IAS படிச்சிட்டு வராங்களே அவங்க பாடு தான் சார் படு குஷி. அவங்கதான் எங்களுக்கெல்லாம் பாஸ்(boss)

என்மகனும், மகளும் IAS படிச்சி கலெக்டர், செக்ரடரின்னு வரணும்னுதான் ஆசைப்படறேன். இஞ்சினீயரா? நோ சான்ஸ். வேண்டாம்சாமி. வேண்டாம். வேண்டவே வேண்டாம்..,,,,

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (1-Jul-20, 3:15 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 56

மேலே